என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆகஸ்ட் வரை ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் இடைக்கால அரசாங்கம் நடைபெற்றது
    • தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலானது

    கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.

    இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.

    அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.

    இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் தேதியை தெரிவித்தார். இதன்படி, வரும் 2024 பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.

    அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

    • நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

    அபுஜா:

    நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நட்த்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்ற னர்.

    பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டியது. தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இந்தத் தாக்குதலில் 195 பேர் பலியானதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    காசா:

    இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

    இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2-வது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 777 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 120 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.

    • இரண்டாம் உலக போரில் முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிலெட்ச்லி பார்க்
    • ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்து உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது

    தொழில்நுட்ப துறையில் "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்தும், அதனால் ஏற்பட கூடிய நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முன் வந்தனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக இது குறித்து ஆலோசிக்க தலைநகர் லண்டனுக்கு வெளியே, பிலெட்ச்லி பார்க் (Bletchley Park) எனும் இடத்தில் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரு நாள் சந்திப்பு நடந்தது. இரண்டாம் உலக போரை முடிவுக்கு கொண்டு வர பிலெட்ச்லி பார்க்கில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பில், ஏஐ-யின் தாக்கத்தை குறித்து நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்துகளை உடனுக்குடன் கண்டறியவும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு நீக்கும் கொள்கைகளை வகுக்கவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டு அனைத்து நாடுகளும்  "பிலெட்ச்லி பிரகடனம்" (ப்ளேச்சலே Declaration) எனும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    இந்த சந்திப்பில் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான துணை மந்திரி வூ ஜாவோஹுய் (Wu Zhaohui), சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்க சீனாவும் ஒத்துழைக்க தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

    "பல நாட்டு தலைவர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒற்றுமையுடன் கலந்து கொண்டுள்ளது ஒரு சாதனை. அடுத்த 6 மாதங்களில் தென் கொரியாவில் ஒரு மாநாடும், அதற்கடுத்த 6 மாதங்களில் பிரான்ஸில் ஒரு மாநாடும் நடக்க உள்ளது" என இந்த சந்திப்பு குறித்து இங்கிலாந்து தொழில்நுட்ப துறை அமைச்சர் மிசெல் டொனெலான் (Michelle Donelan) தெரிவித்தார்.

    இந்தியாவின் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இதில் கலந்து கொண்டார்.

    2023க்கான அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக "ஏஐ" உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் காலின்ஸ் அகராதி வெளியிடும் பதிப்பகம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்டர் செய்த உணவை சாப்பிட்ட உட், ஸ்ட்ரா மூலம் ‘மில்க்‌ஷேக்’-ஐ பருக தொடங்கினார்.
    • உணவு வினியோக நிறுவனத்தை அணுகி, தான் ஆர்டர் செய்த உணவுக்குரிய பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் உட் ஈடுபட்டார்.

    அமெரிக்காவில் உள்ள உடா பகுதியை சேர்ந்த உட் என்பவர் அங்குள்ள ஒரு உணவகத்தில் துரித உணவு வகை மற்றும் 'மில்க்ஷேக்' ஆர்டர் செய்துள்ளார். அதன்படி சிறிது நேரத்தில் ஆர்டர் செய்த உணவு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்ட உட், ஸ்ட்ரா மூலம் 'மில்க்ஷேக்'-ஐ பருக தொடங்கினார். அப்போது அது 'மில்க்ஷேக்' இல்லை என்பதையும், தனக்கு வினியோகம் செய்யப்பட்டது ஒரு கோப்பை சிறுநீர் என்பதையும் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனக்கு உணவு வினியோகம் செய்த நிறுவன டிரைவரை அழைத்து விசாரித்தார்.

    அப்போது அவர், தனது வாகனத்தில் இருந்த 2 கோப்பைகள் மாறியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது அந்த டிரைவர் நீண்ட நேரம் வேலை செய்வதாகவும், போதிய இடைவேளை எடுக்க முடியாததால் தனது காரில் டிஸ்போசபிள் கோப்பைகளில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டதாகவும் கூறினார்.

    இதுதொடர்பாக உணவு வினியோக நிறுவனத்தை அணுகி, தான் ஆர்டர் செய்த உணவுக்குரிய பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் உட் ஈடுபட்டார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது உணவு வினியோக நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    • காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    நியூயார்க்:

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்தது மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிவிட்டுள்ளது.

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நுசா தெங்கரா மாகாண தலைநகரான குபாங்வுக்கு வட-வடகிழக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. 36 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இருதரப்பிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    காசா:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்போம். அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடத்துவோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    • காசாவில் பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
    • மனிதாபிமான உதவி கிடைக்காததால், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்து வருகிறது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் பிரசார உரை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதலால பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை என்று தெரிவித்துள்ளார். இது பிணைக்கைதிகளை மீட்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள், மருத்துவமனைகள், முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனால் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் காசா மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாததால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சையின்றி பரிதவிக்கிறார்கள்.

    இதனால், உலகம் முழுவதும் இருந்து இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை குறைக்கவில்லை.

    இந்த நிலையில்தான், பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற, காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

    ஆனால், போர் நிறுத்த அழைப்பு என்பதை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல் மனிதாபிமான இடைநிறுத்தம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், பாதிப்படைந்தோர் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை
    • வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி

    ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசா பகுதி சீர்குலைந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில கட்டடங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. சில ஏவுகணைகள் தவறுதலாக குடியிருப்புகள் மீது விழுந்து விபத்து, வெடிகுண்டு தாக்குதலால் தீப்பிடித்து எரியும் கட்டடங்கள், முகாம் மீது தாக்குதல் போன்றவற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கடந்த 25 நாட்களாக தொய்வின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால பலத்த காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படடது. இந்த நிலையில் நேற்று காசா எல்லை திறக்கப்பட்டது.

    இரட்டை குடியுரிமை , வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் பலத்த காயம் அடைந்தோர், எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை.

    இருந்த போதிலும், போருக்கு மத்தியில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

    • 2022ல் டுவிட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்
    • ராக்கெட் வெடித்து சிதறும் செய்தியையே கேட்டு கொண்டவன் நான் என்றார் மஸ்க்

    பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவரில் தொடங்கி கடைநிலை பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" (all-hands meet) எனப்படும் சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் சிக்கல்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் அலசப்படும்.

    உலகின் நம்பர் 1. பணக்காரரான எலான் மஸ்க், புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான டுவிட்டர் (Twitter) நிறுவனத்தை 2022ல் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் பெயரை 'எக்ஸ்' (X) என மாற்றி பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் மஸ்க், தனது ஊழியர்களுடன் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில் மஸ்க் பல ஆச்சரியமான வழிமுறைகளை வலியுறுத்தியுள்ளார்.

    அந்த சந்திப்பில் மஸ்க் பேசியதாவது:

    நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் எந்த சந்திப்புகளிலும், நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கெட்ட செய்தியை கூட கூறலாம். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள்; ஆனால், கெட்ட செய்தியை உரக்க, உடனடியாக, பல முறை கூறுங்கள். எனது 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது அவை பல முறை தோல்வியுற்ற செய்தியையே நான் கேட்டு கொண்டவன். ஒரு ராக்கெட் வெடித்து சிதறுவதை விட கெட்ட செய்தியை இது போன்ற நிறுவனங்கள் தந்து விட முடியாது. உங்களுக்குள்ளேயே நடைபெறும் சந்திப்புகளிலும் கூட இதை ஒரு வழிமுறையாக பின்பற்றுங்கள். எனது 'டெஸ்லா' மற்றும் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களும் சந்திப்புகளில் முதலில் கெட்ட செய்தியைத்தான் பகிர்ந்து கொள்வார்கள். அங்கெல்லாம் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் இங்கும் நடைமுறைப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்ற மஸ்கின் வியப்பூட்டும் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    • வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு.
    • இந்த இனிப்பு உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    உலகளவில் இருக்கும் சிறந்த உணவு அனுபவங்களைக் கண்டறியும் ஆன்லைன் வழிகாட்டியான பிரபல டேஸ்ட்அட்லாஸ் என்கிற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், உலகளவில் உள்ள சிறந்த 50 இனிப்புகளின் பட்டியலை டேஸ்ட்அட்லாஸ் வெளியிட்டது.

    இதில், இந்தியாவின் பிரபல இனிப்புகளான காஜூ கத்லி மற்றும் ரச மலாய் இடம் பெற்றுள்ளன. இதில், ரச மலாய்க்கு 31வது இடமும், காஜூ கத்லிக்கு 41வது இடமும் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவின் ஒரு பிரியமான இனிப்பாக கருதப்படும் ரச மலாய், வைட் க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பன்னீர் சீஸ் கொண்டு தயாரிக்கப்படும் கலவையாகும். இத்துடன், பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூவின் நறுமணத் தொடுகை ஆகியவற்றையும் இனிப்பில் சேர்த்து கூடுதல் சுவை அளிக்கிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து உருவான ரச மலாய் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் பிரபலமாகும்.

    இதேபோல், காஜூ கத்லி இனிப்பு. பண்டிகை காலங்கள் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் பலராலும் கவர்ந்திழுக்க கூடிய இனிப்புகளில் ஒன்று காஜூ கத்லி. 

    காஜூ பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு வகை, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் கவலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு வகையாகும்.

    இந்திய கலாச்சாரத்தில், கஜு கட்லியை உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    ராச மலாய் மற்றும் காஜு கத்லி ஆகிய இனிப்புகள் பட்டியலில் தங்கள் இடங்களை சரியாகப் பெற்றிருந்தாலும், முதல் மூன்று இடங்களில் க்ரீப்ஸ், பாம்போகாடோ மற்றும் கியூசோ ஹெலடோ ஆகிய இனிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×