என் மலர்
உலகம்
- பலுசிஸ்தானில் மக்கள், பாதுகாப்புப்படை வீரர்கள், தொழிலாளர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
- சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் தொழிலாளர்கள் உயிரிழப்பு.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
பலுசிஸ்தான் அரசு செய்தி தொடர்பானர் ஷாஹித் ரிண்ட் "இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடக்க விசாரணையில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு (IED), லாரி சென்றபோது வெடிக்க வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இதுபோன்ற கடந்த கால தாக்குதலுக்கு சட்டவிரோத பலுச் விடுதலைப்படை மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தடைசெய்யப்பட்ட குழுக்கள் பாதுகாப்புப்படைகள், பாதுகாப்பு கட்டமைப்புகள், மக்கள் மற்றும் சீன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
- இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்தார்.
- நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல.
இந்தியாவில் இருந்து ஏஐ மாநாட்டிக்கு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று நேற்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இதற்கிடையே இந்தியாதான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தி உள்ளார். இது இந்தியா மீது வரிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால் டிரம்ப் சந்திப்பின்போது, சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவதாக மோடி கூறியுள்ளார்.

இதற்கிடையே மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது டிரம்ப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், "நீங்கள் சத்தமாகப் பேச வேண்டும். அவர் சொல்வதில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. அது அவரின் உச்சரிப்பு(ascent). எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று கூறி அவரின் கேள்வியைத் தட்டிக் கழித்தார்.
மற்றொரு இந்திய நிருபர், அமெரிக்காவில் செய்லபடும் குருபத்வந்த் சிங் பண்ணுனை மேற்கோள் காட்டி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனையில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுமா என்று கேட்டார்.
மேலும் இந்தியத் தொழிலதிபர்கள்(அதானி) மீது முந்தைய பைடன் அரசின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த கருத்தையும் கேட்டார்.
இதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் டிரம்ப், பைடன் நிர்வாகத்துடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை என்று சுற்றிவளைத்துக் கூறினார்.
அதானி மீது வழக்குபதிவு செய்யப்பட்டவெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் (FCPA) சட்டத்தை டிரம்ப் நேற்று முன் தினம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ஆப்கனிஸ்தான் பெண் நிருபர் ஒருவர், அமெரிக்கா மீண்டும் ஆப்கனிஸ்தான் தாலிபான் அரசில் தலையிட்டு, அங்கு பெண்கள் மீது நிகழும் தீவிர அடக்குமுறையைத் தடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
முன் வரிசையில் நின்று அவர் தெளிவாக கேள்வி எழுப்பியபோதும் அவர் கூறுவது தனக்கு புரியவில்லை என அதை டிரம்ப் தட்டிக் கழித்தார். இது குறித்து பல நிருபர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
- செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்.
- கதிரியக்கம் வெளியாகாமல் இருக்க பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கூரை தீப்பற்றி எரிந்தது.
ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4-வது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லவேளையாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை. வழக்கமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4-வது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட்டள்ளது. இதில் தெற்கு உக்ரைனில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும்.
- நட்பு தினம் பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது
- சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக காதலர் தினம் மருவி நிற்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறு காதலர் தினம் வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பின்லாந்து:
இங்கு வழக்கமான காதலர் தின மரபுகளுக்குப் பதிலாக, " நட்பு தினம் " பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களை வாழ்த்தியும் பரிசளித்தும் இந்த தினத்தைப் பின்லாந்து மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்:
ஜப்பானில், காதலர் தினத்தன்று பெண்கள் தங்கள் துணைக்கு சாக்லேட்டுகள், பரிசுகள் வழங்கி மகிழ்வார்கள். இந்த பாரம்பரியம் அதோடு முடிவடையவில்லை. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, மார்ச் 14 அன்று, ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது. அப்போது பரிசுகளைப் பெற்ற ஆண்கள் தங்கள் காதலிக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.
டென்மார்க் மற்றும் நார்வே:
டென்மார்க் மற்றும் நார்வேயில், காதலர் தினம் என்பது ஜோடிகளுக்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்களுக்குள் கவிதை அட்டைகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கவிதை அட்டைகளை நேசிப்பவர்களுக்கு தங்களின் பெயரை எழுதாமல் அனுப்புவார்கள். யார் அனுப்பியது என்று அவர் கண்டுபிடித்தால் அவர் ஈஸ்டர் முட்டையை வெல்வார். இல்லையெனில் ஈஸ்டர் முட்டையை அவர் அனுப்பியவருக்குத் தர வேண்டும்.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில், காதலர் தினம் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகள் மிட்டாய், பழம் அல்லது பணத்திற்கு ஈடாக பாட்டு பாடும் ஒரு அழகான பாரம்பரியம் உள்ளது. சிலர் திராட்சை, பிளம்ஸ் அல்லது காரவே விதைகளால் சுடப்பட்ட காதலர் பன்கள் அல்லது "பிளம் ஷட்டில்ஸ்" பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஜெர்மனி:
காதல் மற்றும் காமம் இரண்டையும் குறிக்கும் வகையில், பன்றி சிலைகளையும், பொம்மைகளையும் கொடுத்து ஜெர்மானியர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
பிலிப்பைன்ஸ்:
காதலர் தினத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் இடம் பிலிப்பைன்ஸ். நூற்றுக்கணக்கான தம்பதிகள் வாழ்வில் ஒன்றிணைகிறார்கள். இதற்காக அரசாங்கம் பெரிய அளவிலான விழாக்களை நடத்துகிறது.
தென்னாப்பிரிக்கா:
ரோமானிய பண்டிகையான லூபர்காலியாவை கௌரவிக்கும் விதமாக பிப்ரவரி 15 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதுவரை தாங்கள் ரகசியமாக வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவார்கள்.
தான் காதலிக்கும் ஆடவனின் பெயரைத் துணிச்சலுடன் தங்கள் சட்டைகளில் இடம்பெறச் செய்து காதலனுக்கும், உறவினருக்கும் ஊராருக்கும் தனது காதலை அறியச் செய்வார்கள். பூக்கள் அல்லது சிறிய பரிசுகள் மூலமும் காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
தைவான்:
தைவானில், காதலை வெளிப்படுத்துவதில் பூக்கள் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆண்கள் காதலர் தினத்திலும், மீண்டும் ஜூலை 7 ஆம் தேதியும் காதலிக்கு பெரிய பூங்கொத்துகளை வழங்குகிறார்கள். சரியாக 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீங்கள் பெற்றால், அது யாரோ ஒருவர் காதலை உங்களுக்கு சொல்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தென் கொரியா:
தென் கொரியாவில், காதலர் தினம் என்பது ஒரு மாத கால கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். பிப்ரவரி 14 அன்று, தம்பதிகள் சாக்லேட்டுகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானின் பாரம்பரியத்தைப் போலவே, வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இறுதியாக, ஏப்ரல் 14 அன்று சிங்கிள்ஸ்களுக்கான கருப்பு தினத்துடன் கொண்டாட்டங்கள் முடிவடைகிறது.
பிரேசில்:
பிரேசிலில், திருமணத்தின் ரட்சகனான துறவி புனித அந்தோணியார் விழாவிற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று காதலர் தினம், தியா டோஸ் நமோராடோஸ் (காதலர்கள் தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி மாத காதலர் தினம் கார்னிவலுடன் வருவதால் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவைப் போலவே, பிரேசிலியர்களும் காதலர் தினத்தன்று இரவு உணவிற்கு வெளியே செல்வது, பரிசுகளை பரிமாறிக்கொள்வது, தங்கள் துணையுடன் இரவில் டேட்டிங் செய்வது உள்ளிட்டவை மூலம் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
- போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.
- காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதல் என்பது இனம், மதம், நாடு, மொழி என்ற வரையறைகளுக்குள் சிக்காமல் உலகமெங்கும் பரவி நிற்கும் ஒன்று. ஐந்தறிவு மிருகங்கள் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை காதல் என்பது வாழ்வை அர்த்தமாகும் உணர்வு. அந்த உணர்வு ஒவ்வொருவரிடத்திலும் அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் தோன்றியிருக்கவே செய்யும்.
அது பள்ளி பருவமாக இருந்தாலும், தள்ளாடும் வயோதிகமாக இருந்தாலும் காதல் துளிர்க்கும் தருணங்கள் வாழ்வின் முழுமையை உணர வைக்கும் வல்லமை கொண்டவை. காதலை வெறுமனே உடலின் பாற்பட்ட ஈர்ப்பு என்று கருதுபவர்கள் பரிதாபத்திற்குரியர்கள். காதலின் உண்மை சாராம்சம் அறியாதவர்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு காதலுக்கு எதிராக எத்தனை கற்பிதங்களை உருவாக்கினாலும், தனிமனித உள்ளங்களுக்குள் சுடர்விடும் பொறியை, உயிர்வாழ்தலின் உண்மைப் பொருளை சமூகத்தால் மூடி வைக்க முடியாது.
காதலால் நிரம்பிய உலகம் வஞ்சகம் அற்ற வன்முறை அற்ற அன்பின்பாற்பட்டதாக இருக்கும். ஒருவரை ஒருவர் சுரண்டவும் ஏமாற்றவும் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்துள்ள வர்க்கங்கள் முதலான போலி படாடோபங்களை சுக்குநூறாக உடைத்து அன்பை உலக நெறியாக போதிக்கும் வல்லமை வேறெதையும் விட காதலுக்கு மட்டுமே உண்டு.
வேறெதையும் விட மனிதனை இயக்கும் சக்தி, மேற்கூரிய போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.
உலகின் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை காதலின் விசை நிகழ்த்தும் அதிர்வுகள் உயிர்போடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். காதல் என்றுமே அழிவதில்லை. அதை குறிப்புணர்த்தும் விதமான இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது. ஐபில் கோபுரம் சாட்சியாக காதலை காதலுக்காகவே ஆன தினத்தில் கொண்டாடி வருகின்றனர். காதலர்கள் தங்களுக்குள் கிரீட்டிங் அட்டைகள், சாக்லெட்டுகள், பரிசுகளை பரிமாறி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இவை எதுவும் இல்லாமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் அடுத்த வேலை உணவுக்கே வழியில்லாத மனிதர்கள் வாழும் பஞ்சப் பிரதேசம் ஒன்றில் இளம் காதலி தனது மனங்கவர்ந்த காதலனின் கையைப்பற்றி முத்தமிடுகிறாள்.
- தொழிலதிபர் விவேக் ராமசாமியை பிரதமர் மோடி சந்தித்தார்.
- அதிபர் டிரம்புடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தியாவில் இருந்து இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். கடந்த புதன்கிழமை பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். முன்னதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.
அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அப்போது, பல முக்கியமான துறைகளில் தங்கள் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இரு தரப்பினரும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவிவில், அதிபர் டிரம்புடன் "சிறந்த" சந்திப்பை நடத்தியதாகவும், அவர்களின் பேச்சுவார்த்தை "இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை சேர்க்கும்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். இந்தியாவில், நாங்கள் ஒரு விக்சித் பாரதத்தை நோக்கிச் செயல்படுகிறோம். இது அமெரிக்க சூழலில் MIGA என மொழி பெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா ஒன்றாக செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன!" என்று மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மோடியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில், வாஷிங்டன் புது தில்லிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
- வருகிற 2030-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த பாம்பிடோ மையம் உள்ளது.
1977-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆண்டுக்கு 32 லட்சம் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.
இந்தநிலையில் பராமரிப்பு பணிக்காக இந்த அருங்காட்சியகம் மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு நடைபெறவுள்ள இந்த பராமரிப்பு பணி முடிக்கப்பட்டு வருகிற 2030-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
- அதிபர் டிரம்ப் தனித்தனியாக பேசியிருந்தார்.
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நான் ஏற்கனவே அதிபர் விளாடிமிர் புதினிடம் கூறியுள்ளேன். அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறினார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் பேசியிருந்தார். இதன் பிறகு பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, 2022 உக்ரைன் படையெடுப்பு குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் உரையாடியதாக அமெரிக்க அதிபர் கூறினார். மேலும் அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் "ஒரு பகுதியாக" இருக்கும் என்றும், ரஷிய அதிபர் புதின் "சமாதானத்தை விரும்புகிறார்" என்று தான் உறுதியாக நம்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் இது "போரின் சகாப்தம் அல்ல, உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின்" சகாப்தம் என்று வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் பலமுறை பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு இரு தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
- அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் (26/11) ஈடுபட்டு, இந்தியாவில் தேடப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டவரான ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 26/11 தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "மும்பை கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டவனும், உலகின் மிகவும் மோசமான நபரை இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அவர் இந்தியாவுக்கு சென்று நீதியை எதிர்கொள்ள இருக்கிறார்," என தெரிவித்தார்.
- பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- மோடி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
வாஷிங்டன்:
பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி அதிபர் டிரம்பை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது:
இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்.
பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம் என தெரிவித்தார்.
- உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:
நான் இந்த அறைக்குள் நுழைந்தவுடனே அகமதாபாத் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம், நாங்கள் பெரிய பேரணி நடத்தியதும், அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப், ஹவுடி மோடி ஹூஸ்டனில் செய்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.
இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம்.
எங்கள் உறவை இன்னும் விரிவானதாக ஆக்குவதற்கும், எங்கள் உறவில் மேலும் உயரங்களை அடைவதற்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தீர்கள்.
அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்காவின் தேசிய நலனை உச்சமாக வைத்திருப்பதை பாராட்டுகிறேன். அதிபர் டிரம்பை போலவே இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
உங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில் நாங்கள் இன்னும் அதிக வேகத்துடன் வேலை செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனது மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று முறை வேகத்துடன் செயல்படுவோம் என இந்திய மக்களுக்கு நான் உறுதியளித்தது போல், அடுத்த 4 ஆண்டுகளில், அதிபர் டிரம்ப்புடன், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், அவரது முதல் பதவிக்காலத்தை விட இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
- வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அங்குள்ள மெர்சைல் நகரில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக பிரதமர் மோடி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






