என் மலர்
விளையாட்டு
- பிரான்ஸ் வாள்வீச்சு வீராங்கனை யசாவ்ரா திபஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.
- இவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
லாசானே:
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பிரான்ஸ் வாள்வீச்சு வீராங்கனை யசாவ்ரா திபஸ் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவரது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன் முத்தமிட்டபோது எச்சில் மூலம் 'ஆஸ்டரின்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலுக்குள் புகுந்து புத்துணர்ச்சி கொடுத்ததாக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றம் சாட்டியது. ஆனால் இந்த புகாரில் இருந்து அவரை சர்வதேச வாள்வீச்சு சம்மேளனத்தின் ஒழுங்கு கமிட்டி விடுவித்தது. இதனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க முடிந்தது.
இதை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'முத்தமிடும் போது எச்சில் வழியாக ஊக்கமருந்தின் தாக்கம் அடுத்தவருக்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் முத்தமிடும் போது தனது காதலர் ஊக்கமருந்தை உட்கொண்டு இருந்தார் என்பது யசாவ்ரா திபசுக்கு தெரியாது. அவர் வேண்டுமென்றே ஊக்கமருந்து விதியை புறக்கணிக்கவில்லை' என கூறி குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்தது.
- 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைக்கும்.
சென்னை:
எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. சிறப்பு அழைப்பின் பேரில் மலேசியா ஜூனியர் அணி பங்கேற்கிறது.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைக்கும். சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.
தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு- மராட்டியம் (மாலை 4.15 மணி) அணிகளும், மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் கர்நாடகா-மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகளும், மோதுகின்றன.
- விராட் கோலியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்தார்.
- நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த நட்சத்திர வீரர் விராட் கோலியும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்தார்.
இந்நிலையில் லண்டனில் யுவ்ராஜ் சிங்கின் Youwecan ட்ரஸ்ட் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கோலி "நீங்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்" எனக் கூறியுள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
- வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கொழும்பு:
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில், ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 124 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் டோஹித் ஹிரிடோய் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
- இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது.
- சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முகமது சிராஜ் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனாலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
- இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார்.
மான்செஸ்டர்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றூம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 16-ந் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் இடம் பெறாத இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார். காயம் காரணமாக டி20 தொடரில் பாதியில் விலகிய கேப்டன் நாட் சிவெருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மையா பவுச்சர் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணி விவரம்:
நாட் சிவெர் (கேப்டன்), எம். அர்லோட், சோபியா டங்லி, எம்மா லாம்ப், டாமி பிமோன்ட், அமி ஜோன்ஸ், மையா பவுச்சர், அலிஸ் கேப்சி, கேத் கிராஸ், அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ், சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன், லாரென் பைலர், லின்சே சுமித், லாரென் பெல்.
- அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மற்றொரு காலிறுதி சுற்றில் கரன் கச்சனாவை வீழ்த்தி டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி உடன் காலிறுதி சுற்றில் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அபார வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிரிட்ஸ் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 5 வீரரும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என முதல் இரு செட்களை வென்றார். 3வது செட்டை 1-6 என இழந்தார்.
இறுதியில் 4வது செட்டை 7-6 (7-4) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இல்லாமல் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா இடம் பெற உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் போட்டிக்கும் 2ஆவது போட்டிக்கும் இடையில் 7 நாட்கள் இடைவெளி இருந்தபோதிலும், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட்டது.
பும்ரா இல்லாமல் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் எப்படி வீழ்த்த முடியும் என இந்திய அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் பும்ராவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி 10 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
நாளைமறுநாள் தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார். இந்த போட்டியில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக அவர் இருப்பார். பாரம்பரிய பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
- ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
புலவாயோ:
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் 367 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் தனகா சிவாங்கா, மடிகிமு தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே அணி 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியதால் தென் ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்தது. சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும், முல்டர், கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைடனோ 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிக் வெல்ச் அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் கிரெய்க் எர்வின் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் பாஸ்ச் 4 விக்கெட்டும், செனூரன் முனுசாமி 3 விக்கெட்டும், கோடி யூசுப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்தது.
- பஞ்சாப் அணியின் பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 12.9% உயர்ந்து 18.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 13.8 சதவீதம் உயர்ந்து இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
அசோசியேட் ஸ்பான்சர் எனும் இடங்களை மட்டுமே My11Circle, Angel One, RuPay மற்றும் CEAT - டயருக்கு விற்பனை செய்ததன் மூலம், பிசிசிஐ ரூ.1,485 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய சுழற்சியை விட 25 சதவீதம் அதிகமாகும்.
டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்தது. இதற்காக அந்த நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளது.
ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு 2024-ல் 227 மில்லியனாக இருந்தது. தற்போது 269 மில்லியனாக உயர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் (மும்பை) 242 மில்லியனுடன் 2-வது இடத்திற்கும், சிஎஸ்கே 235 மில்லியனுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
குறிப்பாக பஞ்சாப் அணியின் பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மற்ற எந்த அணியை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.






