என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 466 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

    இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காத இங்கிலாந்து 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் (58 ரன்), டாம் சிப்லி (44 ரன்), சாம் கர்ரன் (35 ரன்), பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் வீழ்ந்தனர்.

    இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்ஆப்பிரிக்க அறிமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்காத இலக்கை நோக்கி அந்த அணி இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 310 ரன்களுக்கு மேலான இலக்கை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

    தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கே, இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
    நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியை சந்தித்த இந்தியா ஏ, தொடரையும் 1-2 என இழந்தது.
    இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது.

    மார்க் சாப்மன் (110 ரன், 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணியில் பிரித்வி ஷா (55 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (44 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் மிடில் வரிசையில் சொதப்பினர். இருப்பினும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் நிலைத்து நின்று அணியை கரைசேர்க்க போராடினார்.

    கடைசி 11 பந்துகளில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தன. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்திய ஏ அணி 49.4 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இஷான் கிஷன் 71 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து ஏ அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
    போட்செஸ்ட்ரூம்:

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இதில் பங்கேற்று சிறப்பாக ஆடி வருகிறது. 3 லீக் ஆட்டத்திலும் வென்று கால்இறுதிக்கு முன்னேறியது.

    தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 90 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    நாளை (28-ந்தேதி) நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. நடப்புச்சாம்பியனும், 4 முறை உலக கோப்பையை கைப்பற்றிய அணியுமான இந்தியா அரையிறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. ஜெய்ஷ்வால், சக்சேனா, கேப்டன் பிரசித்தம் கார்க்,ரவிபிஷ்னோய், ஆகாஷ் சிங்,அதர்வா, கார்த்திக் தியாகி போன்ற சிறந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. பின்னர் நைஜீரியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது. 3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவாலாக விளங்கும்.

    இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    29-ந்தேதி நடைபெறும் 2-வது கால்இறுதியில் வெஸ்ட்இண்டீஸ்- நியூசிலாந்து, 30-ந்தேதி நடைபெறும் 3-வது கால்இறுதியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளம், 31-ந்தேதி நடைபெறும் 4-வது கால்இறுதியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்திற்கு ஹாலெப் மற்றும் டொமினிக் தகுதி பெற்றுள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலெப் (ருமேனியா) 16-வது இடத்தில் உள்ள மெர்டன்சை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.

    இதில் ஹாலெப் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த அனெட்டை சந்திக்கிறார்.

    அடுத்த கால்இறுதி ஆட்டங்களில் ஆஸ்ரே பார்ட்டி (ஆஸ்திரேலியா)- கிவிட்டோவா (செக் குடியரசு), சோபியா கெனின் (அமெரிக்கா)-ஜாபெர் (துனிசியா) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா)- மான்பில்ஸ் (பிரான்ஸ்) மோதினார்கள்.

    இதில் டொமினிக் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் கால்இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அல்லது கியோர்ஜியோசை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 68-வது ஆட்டத்தில் அட்லெடிகோ கொல்கத்தா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதுகின்றன.
    கொல்கத்தா:

    ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 68-வது ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான அட்லெடிகோ கொல்கத்தா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா 7 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கவுகாத்தி அணி 2 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பேட்டிங்கை மாற்றியதாக ஆட்டநாயகன் விருதுபெற்ற லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    ஆக்லாந்தில் நடந்த இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுக்க முடிந்தது.

    குப்தீல் 20 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), டிம்செய்பெர்ட் 26 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜடேஜா 2 விக்கெட்டும், ஷிவம்துபே, பும்ரா, ‌ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    133 ரன் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

    லோகேஷ் ராகுல்- ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ராகுல் 50 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 44 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சவுத்தி 2 விக்கெட்டும், சோதி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஏற்கனவே ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது 2-வது ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பேட்டிங்கை மாற்றியதாக ஆட்டநாயகன் விருதுபெற்ற லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆக்லாந்து ஆடுகளம் முதல் போட்டியில் இருந்ததை போல இல்லை. சிறிது கடினமாகவும், பந்துகள் மெதுவாகவும் வந்தன. இலக்கு வித்தியாசம், மாறுபட்ட சூழல், பிட்சும் மாறியது ஆகியவற்றால் எனது ஆட்டத்திலும் மாற்றம் செய்தேன்.

    சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் எளிதில் ஆட்டம் இழந்து விட்டதால் நிலைத்து நின்று ஆட வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. நான் நிலைத்து விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்தேன்.

    ஆட்டத்தையும், சூழ்நிலையையும் புரிந்து கொண்டு ஆடியதை நான் சிறப்பானதாக கருதுகிறேன். எப்போதும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று என்ன தேவையோ அதை கொடுக்க முடியும்.

    இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

    ராகுல் தொடக்க ஆட்டத்தில் 27 பந்தில் 56 ரன் எடுத்து இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

    முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய அவர் நேற்றைய ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடி அனைவரது பாராட்டையும் பெற்றார். 21 வயதான ராகுல் 20 ஓவரில் 11-வது அரை சதத்தை பதிவு செய்தார்.

    ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அபாரமாக ஆடிய அவர் நியூசிலாந்து தொடரிலும் அதை நீட்டித்து வருகிறார்.

    கேப்டன் விராட் கோலி இந்த வெற்றிக்கு காரணமான பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார். ஜடேஜா, பும்ராவின் பந்து வீச்சை அவர் புகழ்ந்துள்ளார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் வருகிற 29-ந் தேதி ஹேமில்டனில் நடக்கிறது.
    அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள கலாபசாஸ் மலைப்பகுதியில், ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விழுந்த சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. 

    விபத்து குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு வீரர்கள மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குவிரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் ஒருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை. 

    ஹெலிகாப்டர் விழுந்த இடம்

    அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட், அவரது 13 வயது மகள் கியன்னா உள்ளிட்ட 9 பேர் என, ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். பிரயன்ட் மற்றும் அவரது மகள் பற்றிய தகவல் மட்டுமே முதலில் வெளியானது. பைலட் உள்ளிட்ட மற்ற 7 பேர் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. 

    41 வயது நிரம்பிய கோப் பிரயன்ட், அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் மிக முக்கியமான வீரர் ஆவார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவரான இவர், 5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டத்தைவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ளார். 

    லாஸ் ஏஞ்சல்சில் பிரயன்டுக்கு அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

    பிரயன்டின் மரணம் கூடைப்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் பிரயன்டின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    லாஸ் ஏஞ்சல்சில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு, பொதுவெளியில் பிரயன்டின் உருவப்படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர். 
    ஜடேஜா, பும்ராவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது என்று இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இன்னொரு சிறந்த செயல்பாடு இது. குறிப்பாக பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி எதிரணியை கட்டுப்படுத்தினர். இங்கு முதலில் பேட் செய்யும்போது 160 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். இந்த மைதானத்தில் எந்த மாதிரி பீல்டர்களை நிறுத்த வேண்டும், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் அணுகுறை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து செயல்பட்டோம். ஜடேஜா, பும்ராவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. அடுத்தடுத்து தோல்வி காரணமாக நியூசிலாந்து அணி பலமாக எழுச்சி பெற முயற்சிக்கும். அதற்கு ஏற்ப தயாராக வேண்டும்’ என்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இது எங்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. முதல் ஆட்டத்தை ஒப்பிடும்போது ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சவாலாக இருந்திருக்கும். ஆனால் எல்லா பெருமையும் இந்திய பவுலர்களையே சாரும். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் எங்களை தோற்கடித்து விட்டனர்.’ என்றார்.

    நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆடுகளத்தன்மை மென்மெலும் வேகம் குறைந்து (ஸ்லோ) காணப்பட்டது. இதனால் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. டாப்-4 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவசியமாகும். இந்திய வீரர்கள் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆட்டத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டனர். இதே போன்ற பார்ட்னர்ஷிப்பை எங்களால் ஏற்படுத்த இயலவில்லை. இந்திய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். நிறைய பந்துகளில் ரன் எடுக்காமல் வீணடித்து விட்டோம். அது தான் இன்னிங்சில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது’ என்றார்.

    தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற வேண்டும் என்பதே எனது கனவு என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சார்பில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த விருதை பெறும் முதல் விளையாட்டு வீராங்கனை மேரிகோம் ஆவார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள 36 வயதான மேரிகோம் நேற்று அளித்த பேட்டியில், ‘எனக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற வேண்டும் என்பதே எனது கனவு. தற்போது வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது, இன்னும் சிறப்பாக செயல்பட்டு பாரத ரத்னா விருதை பெற முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. விளையாட்டுத்துறையில் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே பாரத ரத்னா வென்று இருக்கிறார். அந்த வரிசையில் 2-வதாக நான் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன். இப்போது எனது உடனடி இலக்கு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது தான். அதன் பிறகே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது குறித்து சிந்திப்பேன். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினால், நிச்சயம் பாரத ரத்னா கிடைக்கும் என்று நம்புகிறேன். பாரத ரத்னா கவுரவம், மிக உயரிய சாதனையாக இருக்கும்’ என்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கிவிட்டோவா ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 7-ம் நிலை வீராங்கனையும், கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவருமான பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியை எதிர்கொண்டார்.

    இதில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியுடன் (ஆஸ்திரேலியா) மோத வாய்ப்பு இருக்கிறது. அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த அலீசனை சந்திக்கிறார்.

    27-வது வரிசையில் இருக்கும் சீன வீராங்கனை வாங் 4-வது சுற்றில் தோல்வி அடைந்தார். தகுதி சுற்று வீராங்கனையான ஜாபேர் (துனிசியா) 7-6 (7-4), 6-1 என்ற நேர்செட் கணக்கில் வாங்கை தோற்கடித்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவை சேர்ந்த 32-வது வரிசையில் இருக்கும் ரோனிக், குரோசியாவை சேர்ந்த சிலிச்சை எதிர்கொண்டார்.

    இதில் ரோனிக் 6-4, 6-3, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம் பியனுமான ஜோகோவிச் (செர்பியா) சந்திக்கிறார்.

    ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 14-வது வரிசையில் உள்ள டியாகோவை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். 

    ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடிவருகிறது.

    இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க விரர்களாக கப்தில், காலின் முன்ரோ களமிறங்கினர். ஆரம்பம் முதலே வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

    அணியின் ரன் 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னிலும், அவரை தொடர்ந்து முன்ரோ 33 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

    பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    நியூசிலாந்து வீரர் கப்தில்

    இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர். சர்மா 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    பின்னர் ஸ்ரேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேஷ் அய்யர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி 135 ரன்கள் எடுத்தது. 

    இதன் மூலம் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்த கேஎல் ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி வரும் புதன்கிழமை (ஜனவரி 29) நடைபெற உள்ளது.

    ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 133 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது நியூசிலாந்து அணி.
    ஆக்லாந்து:

    இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. 

    ஆக்லாந்தில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், காலின் முன்றோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதலில் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை அதிகரித்தது.

    அணியின் எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து முன்றோ 33 ரன்னில் வெளியேறினார்.
    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.

    கேன் வில்லியம்சன் 14 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 3 ரன்னிலும், ராஸ் டெய்லர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. டிம் சிபெர்ட் 33 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
     
    இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.
    ×