என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரஞ்சி டிராபி காலிறுதி முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால், குஜராத் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கர்நாடகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒடிசாவின் நேர்த்தியான பந்து வீச்சால் பெங்கால் 46 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் விக்கெட் கீப்பர் கோஸ்வாமி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. கோஸ்வாமி 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பெங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் 7-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமாக விளையாடியது. மஜும்தார் சதம் அடிக்க ஷபாஸ் அகமது அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்ட நேரம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க பெங்கால் அணி 300 ரன்னைத் தாண்டியது. பெங்கால் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது. மஜும்தார் 136 ரன்களுடனும், ஷபாஸ் அகமது 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    வால்சாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - கோவா அணிகள் விளையாடி வருகின்றன. குஜராத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கோஹெல் 52 ரன்னும், பன்சால் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த மெராய் 84 ரன்கள் விளாசினார். கேப்டன் பார்தீவ் பட்டேல் சதம் அடித்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க குஜராத் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது பார்தீவ் பட்டேல் 118 ரன்களுடனும், காந்தி 40 ரன்களுடனம் களத்தில் உள்ளனர்.

    சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டத்தில் ஆந்திரா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் மூன்று வீரர்களும் விரைவிலேயே வெளியேறினர். ஜடேஜா 73 ரன்களும், ஜாக்சன் 50 ரன்களும் சேர்த்தனர். ஜானி ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.

    ஜம்முவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கெதிராக கர்நாடகா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய முதல் நாளில் 6 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் கர்நாடகா 14 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. சமர்த் 4 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை என பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
    வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒரு போட்டி கைவிடப்பட மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் வங்காளதேசம் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரேயொரு  போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    சொந்த மண்ணில் வங்காளதேசம் அணி எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை ஜிம்பாப்வே அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    சமீப காலமாக வங்காளதேசம் அணி மோசமான விளையாடி வரும் நிலையில், இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘நான் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் பார்த்து வருவது என்ன வென்றால், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் அது சிறந்ததாக இருக்கும் என்பதைத்தான். ஆனால் அது நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை.

    எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நான் அவர்களிடம் ஜிம்பாப்வே அணியை எளிதாக நினைத்தால் அது பேரழிவாக இருக்கும் என்று சொல்கியிருக்கிறேன். ஜிம்பாப்வே எங்கே இருக்கிறதோ அங்கே இருக்கிறது. ஆனால் நாம் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கவில்லை. நம்மைவிட அவர்கள் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    யாராவது ஒருவர் என்னிடம் சொந்த மண்ணில் வங்காளதேசம் அணியின் மோசமான ஆட்டம் எதுவென்று கேட்டால், ஆப்கானிஸ்தானிடம் தோற்பது என்பேன். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் ஆப்கானிஸ்தானிடம் தோற்போம் என்றால், ஜிம்பாப்வே அணியிடமும் தோற்க முடியும்.

    நமக்கு புதிய மனநிலைத் தேவை. நம்முடைய அணியின் சீனியர் வீரர்கள் அதிக அளவில் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு அணியாக விளையாட வேண்டிய போட்டி.

    பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்களிடம் நான் கூறியிருக்கிறேன. இந்தியாவில் நாம் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது ஒருவர் கூட நாம் மோசமாக விளையாடினோம் என்று கூறவில்லை. ஆனால், பாகிஸ்தான் டி20 தொடரில் வீரர்களின் அணுகுமுறை மற்றும் மனநிலை எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்தேன்.

    சொந்த மண்ணில் நாம் எப்போதுமே தோற்றகடிக்க முடியாத அணியாக இருக்கிறோம். குறைந்தது நான்கு அல்லது ஐந்து அணிகளையாவது அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும்.

    ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருக்கிறேன். திட்டத்தின் வழியே நாம் வேலை செய்ய வேண்டம். கேப்டன் மொமினுல் ஹக் அமைதியானவர். அணியை முன்னெடுத்துச் செல்ல தமிம் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்’’ என்றார்.
    மூட்டில் ஆபரேசன் செய்து கொண்டதால் பிரெஞ்ச் ஓபன் உள்பட ஏராளமான தொடர்களை தவற விடுகிறேன் என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
    சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிசில் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளார். இவர் ஆஸ்திரேலியா ஓபன் தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டார். மூட்டில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு இன்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    இதனால் பிரெஞ்ச் ஓபன் உள்பட ஏராளமான தொடர்கள தவற விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றாலும் 2009-ல் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் தங்கப் பதக்கம் வென்றார்.
    டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் ஜப்பான் வீராங்கனை நருஹா மட்சுயுகி-யை வீழ்த்த தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    திவ்யா கக்ரன் பதக்கம் மூலம் இந்தியா இரண்டு தங்கத்தை வென்றுள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சரிதா மோர் (59 கிலோ), பிங்கி (55 கிலோ), நிர்மலாக தேவி (50 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
    இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பும்ரா பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ராவுக்கு எதிராக பந்து வீச்சை தடுத்தாடும் யுக்தியை கையாண்ட நியூசிலாந்து அணிக்கு, அது மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது. மூன்று போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட அவருக்கு கொடுக்காமல் மற்ற பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து தொடரை 3-0 எனக் கைப்பற்றினர்.

    இதே யுக்தியை டெஸ்ட் போட்டியிலும் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தினால், அது எங்களுக்கு பாதகமாக முடியும் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஸ் டெய்லர் கூறுகையில் ‘‘நாங்கள் பும்ரா மீது மட்டுமே கவனம் செலுத்தினால், அது எங்களுக்கு சிக்கலை உருவாக்கும். இந்தியாவின் ஒட்டுமொத்த பந்து வீச்சுக்குழுவும் சிறப்பானது. இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுப்பார். மேலும், சிறந்த பேட்டிங் யுனிட்டையும் இந்தியா பெற்றுள்ளது. நாங்கள் அவர்களுக்கு எதிராக வெற்றி பெறக்கூடிய எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
    ஒரு ஆண்டில் 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறேன், மூன்று வருடங்கள் கழித்து ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘‘இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடக்கும் 20 ஓவர் கோப்பை போட்டி முடிந்ததும் ஏதாவது ஒரு வடிவிலான போட்டியை துறக்கும் எண்ணம் உள்ளதா?’ என்று கேட்கப்பட்டது.

    அதற்கு கோலி பதில் அளிக்கும்போது, ‘‘அடுத்த 3 ஆண்டுகளில் கடினமான மிகப்பெரிய போட்டிகள் உள்ளன. அதற்கு இப்போதிலிருந்தே என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதன் பிறகு நான் வேறு விதமாக சிந்திக்கலாம்’’ என்று பதில் அளித்தார்.

    மேலும் 31 வயதான கோலி கூறியதாவது:-

    8-9 ஆண்டுகள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட், பயிற்சிகள், அதற்குரிய பயணம் என்று ஆண்டுக்கு கிட்டத்தட்ட 300 நாட்களை மைதானத்தில் செலவிடுகிறேன். எல்லா நேரமும் வேகமும், தீவிரமும் இருப்பதால் உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இதுகுறித்து வீரர்களும் யோசிக்காமல் இல்லை.

    விராட் கோலி

    தொடர்ச்சியான போட்டி அட்டவணை வீரர்களுக்கு ஓய்வு அளிக்க அனுமதிக்காது என்ற போதிலும் கூட தனிப்பட்ட முறையில் நாங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) விளையாடும் வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவையாகும்.

    கேப்டனாக இருப்பது எளிதான பணி அல்ல. பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவது, ஆட்டம் குறித்து திட்டமிடுவது உள்ளிட்ட விஷயத்திலும் பணிச்சுமை இருக்கிறது. இதனால் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது எனக்கு சரியாக இருக்கிறது.

    அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன், உற்சாகத்துடனும் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. 34 அல்லது 35 வயதை எட்டும்போது, அந்த சமயம் உடல் ஒத்துழைக்காத பட்சத்தில், வேறு விதமாக யோசிக்கலாம்.

    விராட் கோலி

    இப்போதைக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அணிக்கு எனது பங்களிப்பு நிறைய தேவை என்பதை புரிந்து வைத்துள்ளேன். இதை சரியாக செய்யும்போது, 5-6 ஆண்டுகளுக்கு பிறகு அணியை அடுத்த கட்ட வீரர்களுடன் கட்டமைக்கும் பணி எளிதாகும்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    வெலிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கோலி கூறுகையில், ‘‘இந்திய தூதரகத்துக்கு செல்வது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. அங்கு நமது தேசத்தினருடன் சந்தித்து உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. ‘நம்பர் ஒன்’ இடத்தை எந்த அணியிடமாவது பகிர்ந்து கொள்வதாக இருந்தால் எங்களது தேர்வு நியூசிலாந்து அணியாகத்தான் இருக்கும்.

    எப்போதும் சரியான உத்வேகத்துடன் விளையாடும் ஒரு அணி நியூசிலாந்து. இங்கு அளிக்கப்படும் வரவேற்பும், விருந்தோம்பலும் வியப்புக்குரியது. ஒரு நாள் தொடரை இழந்தாலும் டெஸ்ட் தொடரில் சாதிக்கும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்’’ என்றார்.
    வெலிங்டனில் நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது. பொதுவாக இந்தியா உள்நாட்டில் ஐந்து பேட்ஸ்மேன்களுடனும், வெளிநாட்டில் ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாடி வருகிறது.

    வெலிங்டன் போட்டிக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என விராட் கோலி தெரிவித்துவிட்டார். இதனால் ஆறு பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர், நான்கு பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாடினால் மட்டுமே ஹனுமா விஹாரிக்கு அணியில் இடம் கிடைக்கும்.

    அப்படி இருந்தால் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். ஆடுகளத்தை பார்த்த பின்னர்தான் இந்திய அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணி குறித்து முடிவு செய்யும்.

    இந்நிலையில் இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விவிஎஸ் லட்சுமண் கூறுகையில் ‘‘இது இரு அணிகளுக்கும் சமமான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நியூசிலாந்தை அவர்களது மண்ணில் தோற்கடிப்பது மிகமிக கடினம். ஆனால், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது.

    வெளிநாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பேட்ஸ்மேன் இந்த டெஸ்ட் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நின்று, முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தால், வெற்றியை ருசிக்கலாம்.

    இதுபோன்ற வெளிநாட்டு தொடரின்போது இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்க வேண்டும். சகா விக்கெட் கீப்பராகவும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற வேண்டும்.

    பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா விஹாரி சதம் அடித்தார். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும் போட்டிகளில் எல்லாம் ஹனுமா விஹாரி வெளியில் இருக்கிறார். புஜாராவுடன் நீண்ட நேரம் களத்தில் நின்று ஹனுமா விஹாரி விளையாடினால் டெஸ்ட் போட்டியாக சிறப்பாக தொடங்க சரியானதாக இருக்கும்’’ என்றார்.
    சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானம் குறித்த பிசிசிஐ டுவிட்டிற்கு மைக்கேல் வாகன் வேடிக்கையான வகையில் பதில் அளித்துள்ளார்.
    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை டொனால்டு டிரம்ப் திறந்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் நேற்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் மொடேரா மைதானத்தின் படத்தை வெளியிட்டியிருந்தது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் பிசிசிஐ-யின் இந்த பதவியை பார்த்த பின் ‘‘கிட்டத்தட்ட ஹெட்டிங்லே மைதானம் போன்று’’ என ரிப்ளை செய்திருந்தார்.

    மொடேரா மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். ஆனால், ஹெட்டிங்லே மைதானத்தில் 17 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமர முடியும். அதிக இருக்கைகள் கொண்ட மைதானத்தை குறைந்த ரசிகர்கள் அமரும் மைதானத்துடன் வேடிக்கையாக ஒப்பிட்டுள்ளார்.
    ஆடுகளம் மாறுபட்டு காணப்படுவதால் இன்னும் ஒரு முறை நன்றாக பார்த்த பின்னர்தான் ஆடும் லெவன் அறிவிக்கப்படும் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து இன்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசினார். பொதுவாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் போட்டிக்கு முந்தைய நாள் ஆடும் லெவன் அணியை அறிவித்து விடும்.

    ஆனால் கேன் வில்லியம்சன் இன்று ஆடும் லெவன் அணியை அறிவிக்கவில்லை. வெலிங்டன் பேசின் ஆடுகளம் மாறுபட்டதாக காணப்படுகிறது. இதனால் இன்னும் ஒருமுறை நன்றாக ஆடுகளத்தை பார்த்தபின் ஆடும் லெவன் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    வெலிங்டன் மைதானம்

    இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘ஆடுகளத்தின் மேற்பகுதியை இன்னும் ஒரு முறை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இங்கு நாங்கள் இதற்கு முன் பயன்படுத்தியதைவிட சற்று வேறுபாடாக உள்ளது’’ என்றார்.

    நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் இடம் பெறுவாரா? என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் உமர் அக்மலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீதான லஞ்ச  குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை, அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது எனக்கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மல் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் உமர் அக்மல் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.  எனினும், அக்மல் மீதான குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கவில்லை.

    அக்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அணியான குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி, மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    29 -வயதான அக்மல், கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் உமர் அக்மல் விளையாடியுள்ளார்.
    2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது
    கோலாலம்பூர்:

    2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்த உரிமை கேட்டு இந்தியா, சீனதைபே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் கமிட்டி, 2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவுக்கு வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இந்த போட்டியை நவிமும்பை, ஆமதாபாத், கோவா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய கால்பந்து சங்கம் தெரிவித்து இருந்தது. போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. போட்டி அட்டவணை பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு பட்டியலில் 633 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளிவிஜய், வாஷிங்டன் சுந்தர், கவுசிக்காந்தி, அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, டி.நடராஜன், பாபா அபராஜித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில் அணிக்கு தேவையான எஞ்சிய வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

    ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் 633 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தகுதிக்கு ஏற்ப 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவில் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் வாய்ந்த விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோர் மட்டும் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கான ஊதியம் ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி1 மற்றும் பி2 பிரிவில் முதல்தர போட்டிகள் மற்றும் குறைந்தது 20 டி.என்.பி.எல். ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும். இவர்களின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் ஆகும். இந்த பிரிவில் 58 வீரர்கள் உள்ளனர். சி பிரிவில் 573 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களுக்கான தொகை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் ஆகும்.

    ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவரான விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (448 ரன்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி (21 விக்கெட்) ஆகியோர் வீரர்கள் தேர்வில் முக்கியமானவர்களாக உள்ளனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 22 வீரர்களையும், குறைந்தபட்சமாக 16 வீரர்களையும் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் இரண்டு அணிகள் புதிய பெயருடன் களம் இறங்குகின்றன. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் என்றும், காரைக்குடி காளை அணி திருப்பூர் தமிழன்ஸ் என்றும் பெயரை மாற்றியுள்ளன.

    மேலும் இந்த முறை சேலம் மற்றும் கோவையிலும் டி.என்.பி.எல். போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் கூறுகையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட்டை சேலம் மற்றும் கோவைக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திண்டுக்கல் மற்றும் நெல்லையில் கிடைத்த மகத்தான வரவேற்பால் நாங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உள்ளோம். ஆனால் இந்த ஆண்டு சென்னையில் எந்த ஆட்டங்களும் நடைபெறாது’என்றார்.
    ×