என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியனும், 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவை இன்றும், நாளையும் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
    புவனேசுவரம்:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஹாக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முன்னணி 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த சுற்றில் உலக சாம்பியன் பெல்ஜியத்துக்கு எதிராக ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் கண்டது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியனும், 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவை இன்றும், நாளையும் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு எதிராக கடைசியாக மோதிய 30 ஆட்டங்களில் 22-ல் ஆஸ்திரேலியா வெற்றி கண்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிடம் தோற்றதில்லை. இருப்பினும் உலக சாம்பியனை வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று நம்பலாம். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. மும்பை 26 புள்ளிகளுடன் (17 ஆட்டம்) பட்டியலில் 4-வது இடத்திலும், சென்னை அணி 25 புள்ளிகளுடன் (16 ஆட்டம்) 5-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரைஇறுதிக்குள் நுழையும். சென்னை அணிக்கு மேலும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியிருப்பதால், இன்றைய ஆட்டத்தில் குறைந்தது டிராவாவது செய்ய வேண்டியது அவசியமாகும்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழையால் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    வெலிங்டன்:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.


    இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். இந்திய அணி துவக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. பிரித்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நட்சத்திர வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.  

    ஆடுகளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி

    இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், ரகானே 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய அகர்வால், 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டை காப்பாற்ற போராடினார். மறுமுனையில் விகாரி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரகானேவுடன், ரிஷப் பன்ட் இணைந்தார். 

    தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 38 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது, மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்கும்போதே மழை தூறல் விழுந்தது. ஆடுகளம் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. 

    தேநீர் இடைவேளையின்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறும்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது. அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார்.

    இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டியதாகி விட்டது. விசாரணைக்கு பிறகே அவருக்கு தடை விதிக்கப்படுமா? என்பது தெரியவரும். 29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒரு நாள் போட்டி மற்றும் 84 இருபது ஓவர் ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.
    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகளுக்கு மொத்தம் 132 வீரர்கள் ஒதுக்கப்பட்டனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஜெகதீசனையும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரையும் வாங்கியது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் என்றும், காரைக்குடி காளை அணி திருப்பூர் தமிழன்ஸ் என்றும் பெயர் மாற்றத்துடன் களம் இறங்குகின்றன.

    இந்த சீசனில் நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களுடன் புதிதாக சேலம், கோவை ஆகிய நகரங்களிலும் டி.என்.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது. சென்னையில் எந்த ஆட்டங்களும் கிடையாது என்பதால் இறுதிப்போட்டி நெல்லையில் நடக்கலாம் என்று தெரிகிறது.

    ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சமாக 16 வீரர்களையும், அதிகபட்சமாக 22 வீரர்களையும் வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஒவ்வொரு அணிகளும் தலா 3 வீரர்களை தக்கவைத்து கொண்டன. அணிக்கு தேவையான எஞ்சிய வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் 633 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். அவர்கள் தகுதிக்கு ஏற்ப 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தனர். சில முன்னணி வீரர்கள் மீது எதிர்பார்ப்பு நிலவியது.

    இதில் முதலில் வீரர்களை தேர்வு செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட சேலம் ஸ்பார்டன்ஸ் அணி சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (ரூ.6 லட்சம் ஊதியம்), கடந்த ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவரான வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி, சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் உள்ளிட்டோரை தங்கள் வசப்படுத்தியது.

    கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிப்பவருமான விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசனை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எடுத்தது. இதே போல் ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் எம்.சித்தார்த்தையும் கில்லீஸ் அணி இழுத்தது. முதல் இரு சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடிய ஆல்-ரவுண்டர் ஆர்.சதீஷ் மீண்டும் கில்லீஸ் அணியுடன் இணைகிறார்.

    இதே போல் அபினவ் முகுந்த் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் காஞ்சி வீரன்சுக்கும், அந்தோணி தாஸ் திருச்சி வாரியர்சுக்கும் வாங்கப்பட்டனர். மொத்தம் 132 வீரர்கள் 8 அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் - சேலம் ஸ்பார்டன்ஸ் வீரர் விஜய் சங்கர்


    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறுகையில், ‘இந்த முறை வீரர்கள் ஒதுக்கீடு நன்றாக அமைந்துள்ளது. முதலில் ஆல்-ரவுண்டரை எடுப்பதில் கவனம் செலுத்தினோம். யாரை எல்லாம் மனதில் நினைத்திருந்தோமோ அவர்களை எடுத்திருக்கிறோம். முதல் இரண்டு ஆண்டுகள் எங்கள் அணிக்கு கேப்டனாக இருந்த சதீசை மீண்டும் எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. டி.என்.பி.எல். போட்டியில் கலக்கினால் ஐ.பி.எல்.-ல் ஆட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறுகையில், ‘அணியை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அனுபவம் வாய்ந்த அணியாக இருக்க விரும்புகிறோம். எங்களது சிறப்பு அம்சம் என்னவென்றால் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும், ஒரு அணியாக வலுப்படுத்துவதற்கு கடினமாக உழைப்பதே’ என்றார். இந்த சீசனில் எல்லா ஆட்டங்களிலும் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவுவதை எதிர்நோக்கி இருப்பதாக சேலம் ஸ்பார்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் குறிப்பிட்டார்.

    ஒவ்வொரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: டி.ராகுல், என்.ஜெகதீசன், ஹரிஷ்குமார், ஆர்.சதீஷ், எம்.சித்தார்த், ஜெகநாத் சீனிவாஸ், சுஜய், பிரசித் ஆகாஷ், பி.அருண், ராம்அரவிந்த், பி.ராகுல், அருண்குமார், சாய் பிரகாஷ், எஸ்.விஜயகுமார், சந்தானசேகர், ஆர்.அஜித்குமார், விக்ரம் ஜாங்கிட். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ்.

    சேலம் ஸ்பார்டன்ஸ்: பிரனேஷ், விஜய்சங்கர், ஜி.பெரியசாமி, முருகன் அஸ்வின், கோபிநாத், டேரில் பெராரியோ, லோகேஷ் ராஜ், அகில் ஸ்ரீநாத், சுகனேஷ், சுஷில், சிவகுமார், ராஜ்குமார், அபிஷேக், பூபாலன், பிரஷாந்த் பிரபு, எம். விஜய்குமார், சுபம் மேத்தா. தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷய் சீனிவாசன், எம்.கணேஷ்மூர்த்தி.

    கோவை கிங்ஸ்: ஷிஜித் சந்திரன், அஸ்வின் வெங்கட்ராமன், அபிஷேக் தன்வார், கே.விக்னேஷ், கங்கா ஸ்ரீதர் ராஜூ, கவின், முகிலேஷ், ராஜேஷ், சுரேஷ்குமார், மனிஷ், செல்வகுமாரன், அதீக் ரகுமான், சாய் சுதர்சன், கவுஜித் சுபாஷ், அரவிந்த், நிஷாந்த் குமார். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷாருக்கான், டி.நடராஜன், எஸ்.அஜித்ராம்,

    மதுரை பாந்தர்ஸ்: மிதுன், ஷாஜகான், ஜே.கவுசிக், சதுர்வேத், ஆர்.ரோகித், அனிருத் சீத்தாராம், அவுசிக் சீனிவாஸ், ஆதித்யா, கவுதம், பிரவீன்குமார், சிலம்பரசன், ஹேம்சரன், சந்திரசேகர், தீபன் லிங்கேஷ், நிர்மல்குமார், எல்.கணேஷ். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, கிரண் ஆகாஷ்.

    திருச்சி வாரியர்ஸ்: சரவணகுமார், நிதிஷ் ராஜகோபால், அனிருதா, அந்தோணிதாஸ், ரஹில் ஷா, ஆதித்யா கணேஷ், சுமந்த் ஜெயின், ஆகாஷ்சும்ரா, பொய்யாமொழி, முகமது அட்னன்கான், ஆர்.கணேஷ், அமித் சாத்விக், யாழ் அருண் மொழி, சந்தோஷ் ஷிவ், ஹேமந்த் குமார், கே.முகுந்த், கார்த்திக் சண்முகம். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: முரளிவிஜய், சாய் கிஷோர், சோனு யாதவ்,

    காஞ்சி வீரன்ஸ்: திலோக் நாக், அர்ஜூன் மூர்த்தி, பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன், ரஞ்சன் பால், எம்.அபினவ், ஷருன் குமார், சூர்யபிரகாஷ், ஜிந்திரகுமார், டி.அஜித்குமார், செந்தில்நாதன், அஷ்வாத் முகுந்தன், வித்யுத், ஜெயசந்திரன், ரஜினிகாந்த். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், என்.எஸ்.ஹரிஷ்.

    திண்டுக்கல் டிராகன்ஸ்: விஷால் வைத்யா, மணிபாரதி, ஹரி நிஷாந்த், யோ மகேஷ், சுதேஷ், மோகித் ஹரிகரன், எல்.விக்னேஷ், லோகேஷ்வர், சஞ்சய், ஆதித்யா அருண், எஸ்.அருண், சுவாமிநாதன், லட்சுமண், சி.அஸ்வின், சிவமுருகன், அத்வைத் ஷர்மா, ஆர்.சீனிவாசன். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஆர்.அஸ்வின், எம்.சிலம்பரசன், ஆர்.விவேக்.

    திருப்பூர் தமிழன்ஸ்: எஸ்.தினேஷ், எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட், அபினவ் முகுந்த், மோகன் பிரசாத், ரோகின்ஸ், எஸ்.அரவிந்த், கவுதம் தாமரை கண்ணன், கருப்புசாமி, மணிகண்டன், எஸ்.சித்தார்த், ஸ்ரீராம், துஷார் ரஹேஜா, மோகித் பன்ஹால், சித்தார்த் அஹூஜா, ரூபன்ராஜ், அபினவ் விஷ்ணு. தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: தினேஷ் கார்த்திக், ஆர்.ராஜ்குமார், மான் பாப்னா.

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    சிட்னி:

    பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுகட்டுகின்றன.

    மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26-ல் வெற்றி பெற்றதே அவர்களின் வலிமைக்கு சான்று. சமீபத்தில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஜெஸ் ஜோனசென், அலிசா ஹீலி, மெக் லானிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தவிர உள்ளூர் சூழல் அந்த அணி வீராங்கனைகளுக்கு அனுகூலமாக இருக்கும்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இந்திய மங்கைகள் ஆயத்தமாகியுள்ளனர். முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 35 பந்துகளில் 41 ரன் தேவை என்ற நிலையில் நெருங்கி வந்து கோட்டை விட்டது. இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து அசத்தியது நினைவிருக்கலாம்.

    தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமைத்து தருகிறார்கள். ஆனால் மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை தான் இந்தியா மலைபோல் நம்பி இருக்கிறது. அவர் சீக்கிரம் வெளியேறினால், நிலைமை கந்தலாகி விடுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பந்து வீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘இந்த மைதானத்தில் நான் பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறேன். மற்ற மைதானங்களை காட்டினாலும் இது கொஞ்சம் வேகம் குறைந்து காணப்படும். சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு நன்றாக பந்து வீசியிருப்பதை பார்த்து இருக்கிறேன். எங்களது பிரதான பலமே சுழற்பந்து வீச்சு தான். அதனால் சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார். எது எப்படி என்றாலும் முதல்ஆட்டமே இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

    போட்டிக்கான வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, தனியா பாட்டியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷபாலி வர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ்.

    ஆஸ்திரேலியா: மெக் லானிங் (கேப்டன்), எரின் பர்ன்ஸ், நிகோலா கேரி, ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோபி மோலினெக்ஸ், பெத் மூனி, எலிசி பெர்ரி, மேகன் ஸ்கட், அனபெல் சுதர்லாண்ட், விலாமின்க், ஜார்ஜியா வாரஹம்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி.
    கவுகாத்தி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி, ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 11, 13, 40 வது நிமிடங்களில் ஐதராபாத் அணி தலா ஒரு கோல் அடித்தது. ஆனால், கவுகாத்தி அணி 35வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 55, 88வது நிமிடங்களில் ஐதராபாத் அணியினர் தலா ஒரு கோல் அடித்து சிறப்பாக ஆடியது. 

    இறுதியில், ஐதராபாத் அணி 5-1 என்ற கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஐதராபாத் அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. 

    ஐதராபாத் அணி தாங்கள் விளையாடிய 18 போட்டிகள் 2 வெற்றி, 12 தோல்வி, 4 டிரா என மொத்தம் 10 புள்ளிகள் பெற்று கடைசி இடம் பிடித்துள்ளது. 
    நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின் மிகப்பெரிய தொகைக்கு பிரான்சில் உள்ள பிரான்ஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார்.

    ஆனால் நெய்மர் பிஎஸ்ஜி அணியில் மகிழ்ச்சியாக விளையாடவில்லை. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரான்ஸ்பர் பீஸ் விவகாரத்தால் தள்ளிப் போகிறது.

    இந்நிலையில் நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக மெஸ்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘பார்சிலோனா அணிக்கு திரும்புவதற்கு ஆர்வமாக இருப்பதை ஏற்கனவே அவர் வெளிப்படுத்தியுள்ளார். நடந்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

    மெஸ்சி ஆதரவு தெரிவிப்பதால் நெய்மர் லா லிகாவில் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    இந்திய வீரர் சமீர் வர்மா ஜெர்மனி வீரரை 21-14, 16-21, 21-15 என வீழ்த்தி பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா ஜெர்மனியைச் சேர்ந்த கெய் ஸ்கேஃபரை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 21-16 என சமீர் வர்மா கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 16-21 என இழந்தார். பின்னர் 3-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதை 21-15 எனக் கைப்பற்றினார். இதனால் 21-14, 16-21, 21-15 எனக் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
    ரஞ்சி டிராபி காலிறுதி முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால், குஜராத் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கர்நாடகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒடிசாவின் நேர்த்தியான பந்து வீச்சால் பெங்கால் 46 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் விக்கெட் கீப்பர் கோஸ்வாமி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. கோஸ்வாமி 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பெங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் 7-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமாக விளையாடியது. மஜும்தார் சதம் அடிக்க ஷபாஸ் அகமது அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்ட நேரம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க பெங்கால் அணி 300 ரன்னைத் தாண்டியது. பெங்கால் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது. மஜும்தார் 136 ரன்களுடனும், ஷபாஸ் அகமது 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    வால்சாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - கோவா அணிகள் விளையாடி வருகின்றன. குஜராத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கோஹெல் 52 ரன்னும், பன்சால் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த மெராய் 84 ரன்கள் விளாசினார். கேப்டன் பார்தீவ் பட்டேல் சதம் அடித்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க குஜராத் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது பார்தீவ் பட்டேல் 118 ரன்களுடனும், காந்தி 40 ரன்களுடனம் களத்தில் உள்ளனர்.

    சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டத்தில் ஆந்திரா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் மூன்று வீரர்களும் விரைவிலேயே வெளியேறினர். ஜடேஜா 73 ரன்களும், ஜாக்சன் 50 ரன்களும் சேர்த்தனர். ஜானி ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.

    ஜம்முவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கெதிராக கர்நாடகா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய முதல் நாளில் 6 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் கர்நாடகா 14 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. சமர்த் 4 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை என பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
    வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒரு போட்டி கைவிடப்பட மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் வங்காளதேசம் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரேயொரு  போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    சொந்த மண்ணில் வங்காளதேசம் அணி எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை ஜிம்பாப்வே அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    சமீப காலமாக வங்காளதேசம் அணி மோசமான விளையாடி வரும் நிலையில், இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘நான் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் பார்த்து வருவது என்ன வென்றால், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் அது சிறந்ததாக இருக்கும் என்பதைத்தான். ஆனால் அது நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை.

    எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நான் அவர்களிடம் ஜிம்பாப்வே அணியை எளிதாக நினைத்தால் அது பேரழிவாக இருக்கும் என்று சொல்கியிருக்கிறேன். ஜிம்பாப்வே எங்கே இருக்கிறதோ அங்கே இருக்கிறது. ஆனால் நாம் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கவில்லை. நம்மைவிட அவர்கள் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    யாராவது ஒருவர் என்னிடம் சொந்த மண்ணில் வங்காளதேசம் அணியின் மோசமான ஆட்டம் எதுவென்று கேட்டால், ஆப்கானிஸ்தானிடம் தோற்பது என்பேன். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் ஆப்கானிஸ்தானிடம் தோற்போம் என்றால், ஜிம்பாப்வே அணியிடமும் தோற்க முடியும்.

    நமக்கு புதிய மனநிலைத் தேவை. நம்முடைய அணியின் சீனியர் வீரர்கள் அதிக அளவில் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு அணியாக விளையாட வேண்டிய போட்டி.

    பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்களிடம் நான் கூறியிருக்கிறேன. இந்தியாவில் நாம் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது ஒருவர் கூட நாம் மோசமாக விளையாடினோம் என்று கூறவில்லை. ஆனால், பாகிஸ்தான் டி20 தொடரில் வீரர்களின் அணுகுமுறை மற்றும் மனநிலை எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்தேன்.

    சொந்த மண்ணில் நாம் எப்போதுமே தோற்றகடிக்க முடியாத அணியாக இருக்கிறோம். குறைந்தது நான்கு அல்லது ஐந்து அணிகளையாவது அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும்.

    ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருக்கிறேன். திட்டத்தின் வழியே நாம் வேலை செய்ய வேண்டம். கேப்டன் மொமினுல் ஹக் அமைதியானவர். அணியை முன்னெடுத்துச் செல்ல தமிம் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்’’ என்றார்.
    மூட்டில் ஆபரேசன் செய்து கொண்டதால் பிரெஞ்ச் ஓபன் உள்பட ஏராளமான தொடர்களை தவற விடுகிறேன் என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
    சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிசில் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளார். இவர் ஆஸ்திரேலியா ஓபன் தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டார். மூட்டில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு இன்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    இதனால் பிரெஞ்ச் ஓபன் உள்பட ஏராளமான தொடர்கள தவற விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றாலும் 2009-ல் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
    ×