search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பையுடன் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்.
    X
    உலக கோப்பையுடன் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்.

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    சிட்னி:

    பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுகட்டுகின்றன.

    மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26-ல் வெற்றி பெற்றதே அவர்களின் வலிமைக்கு சான்று. சமீபத்தில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஜெஸ் ஜோனசென், அலிசா ஹீலி, மெக் லானிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். தவிர உள்ளூர் சூழல் அந்த அணி வீராங்கனைகளுக்கு அனுகூலமாக இருக்கும்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இந்திய மங்கைகள் ஆயத்தமாகியுள்ளனர். முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 35 பந்துகளில் 41 ரன் தேவை என்ற நிலையில் நெருங்கி வந்து கோட்டை விட்டது. இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து அசத்தியது நினைவிருக்கலாம்.

    தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமைத்து தருகிறார்கள். ஆனால் மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை தான் இந்தியா மலைபோல் நம்பி இருக்கிறது. அவர் சீக்கிரம் வெளியேறினால், நிலைமை கந்தலாகி விடுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பந்து வீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘இந்த மைதானத்தில் நான் பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறேன். மற்ற மைதானங்களை காட்டினாலும் இது கொஞ்சம் வேகம் குறைந்து காணப்படும். சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு நன்றாக பந்து வீசியிருப்பதை பார்த்து இருக்கிறேன். எங்களது பிரதான பலமே சுழற்பந்து வீச்சு தான். அதனால் சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார். எது எப்படி என்றாலும் முதல்ஆட்டமே இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

    போட்டிக்கான வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, தனியா பாட்டியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷபாலி வர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ்.

    ஆஸ்திரேலியா: மெக் லானிங் (கேப்டன்), எரின் பர்ன்ஸ், நிகோலா கேரி, ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோபி மோலினெக்ஸ், பெத் மூனி, எலிசி பெர்ரி, மேகன் ஸ்கட், அனபெல் சுதர்லாண்ட், விலாமின்க், ஜார்ஜியா வாரஹம்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×