என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் உமர் அக்மலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீதான லஞ்ச  குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை, அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது எனக்கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மல் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் உமர் அக்மல் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.  எனினும், அக்மல் மீதான குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கவில்லை.

    அக்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அணியான குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி, மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    29 -வயதான அக்மல், கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் உமர் அக்மல் விளையாடியுள்ளார்.
    2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது
    கோலாலம்பூர்:

    2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்த உரிமை கேட்டு இந்தியா, சீனதைபே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் கமிட்டி, 2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவுக்கு வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இந்த போட்டியை நவிமும்பை, ஆமதாபாத், கோவா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய கால்பந்து சங்கம் தெரிவித்து இருந்தது. போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. போட்டி அட்டவணை பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு பட்டியலில் 633 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளிவிஜய், வாஷிங்டன் சுந்தர், கவுசிக்காந்தி, அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, டி.நடராஜன், பாபா அபராஜித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில் அணிக்கு தேவையான எஞ்சிய வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

    ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் 633 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தகுதிக்கு ஏற்ப 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவில் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் வாய்ந்த விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோர் மட்டும் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கான ஊதியம் ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி1 மற்றும் பி2 பிரிவில் முதல்தர போட்டிகள் மற்றும் குறைந்தது 20 டி.என்.பி.எல். ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும். இவர்களின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் ஆகும். இந்த பிரிவில் 58 வீரர்கள் உள்ளனர். சி பிரிவில் 573 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களுக்கான தொகை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் ஆகும்.

    ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவரான விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (448 ரன்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி (21 விக்கெட்) ஆகியோர் வீரர்கள் தேர்வில் முக்கியமானவர்களாக உள்ளனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 22 வீரர்களையும், குறைந்தபட்சமாக 16 வீரர்களையும் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் இரண்டு அணிகள் புதிய பெயருடன் களம் இறங்குகின்றன. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் என்றும், காரைக்குடி காளை அணி திருப்பூர் தமிழன்ஸ் என்றும் பெயரை மாற்றியுள்ளன.

    மேலும் இந்த முறை சேலம் மற்றும் கோவையிலும் டி.என்.பி.எல். போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் கூறுகையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட்டை சேலம் மற்றும் கோவைக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திண்டுக்கல் மற்றும் நெல்லையில் கிடைத்த மகத்தான வரவேற்பால் நாங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உள்ளோம். ஆனால் இந்த ஆண்டு சென்னையில் எந்த ஆட்டங்களும் நடைபெறாது’என்றார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
    வெலிங்டன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை கலங்கடித்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்து தகிடுதத்தம் போட்டது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது.

    இதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு வெற்றிக்கும் 60 புள்ளிகள் வழங்கப்படும். டிராவில் முடிந்தால் தலா 20 புள்ளிகள் கிடைக்கும். உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா 360 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 60 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

    டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் இந்திய அணி, சாதுர்யத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தினால் போதும். நியூசிலாந்தை வெலவெலக்க வைத்து விடலாம். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். கவனம் சிறிது தவறினாலும் பேட்டில் உரசிக்கொண்டு ஸ்லிப் பகுதியில் கேட்ச்சாகி விடும். மேலும் அவர்கள் அதிகமாக ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலையே தொடுப்பார்கள். அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். தாக்குப்பிடித்து விட்டால் ரன்மழை பொழிந்து விடலாம்.

    தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்க இருப்பதை கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார். சுப்மான் கில், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிராக 5 டெஸ்டுகளில் 45 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். அதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அணிக்கு திரும்பியிருப்பது சாதகமான அம்சமாகும்.

    முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘இஷாந்த் ஷர்மா இயல்பான நிலைக்கு வந்து விட்டார். கணுக்கால் காயத்துக்கு முன்பு எப்படி பந்து வீசினாரோ அதே போல் பயிற்சியின் போது பந்து வீசுகிறார். அவர் ஏற்கனவே நியூசிலாந்து மண்ணில் விளையாடி இருக்கிறார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். மயங்க் அகர்வால் ஒரு நாள் தொடரில் சோபிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஆண்டில் அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளார். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவராக திகழ்கிறார்.

    பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் அச்சமின்றி விளையாடக்கூடியவர்கள். அவர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தர வேண்டும் என்று அணி எதிர்பார்க்கிறது. அதற்காக அவர்களை ஒட்டுமொத்த அணியினரும் உற்சாகப்படுத்துகிறோம். அதே சமயம் எதிரணியின் பந்து வீச்சை கண்டு எந்த வகையிலும் பயந்து விடக்கூடாது.

    ஜோகன்னஸ்பர்க் (தென்ஆப்பிரிக்கா) ஆடுகளமாக இருந்திருந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவோம் என்று சொல்லியிருப்பேன். ஆனால் 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே எங்களால் எதிரணியை முடக்க முடியும். இங்கு நிச்சயம் உலகத்தரம் வாய்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவையாகும்’ என்றார்.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், காயத்தில் இருந்து தேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் திரும்பியிருப்பது அவர்களின் பந்துவீச்சை வலுப்படுத்துகிறது. மூத்த பேட்ஸ்மேன் ராஸ் டெய்லருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் 100 போட்டிகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறப்போகிறார்.

    நியூசிலாந்து அணி, உள்ளூரில் எப்போதும் அசுர பலம் வாய்ந்தது. டாம் லாதம், வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள். மற்றொரு பிரதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. வாக்னெரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இதனால் அவர் இன்னும் நியூசிலாந்து அணியுடன் இணையவில்லை. இதை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அழைக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கியது. அதற்கு இந்த தொடரில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் இந்த டெஸ்டில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.

    நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கிரான்ட்ஹோம் அல்லது டேரில் மிட்செல், அஜாஸ் பட்டேல், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ள விராட் கோலிக்கு இன்னும் 11 ரன்களே தேவைப்படுகிறது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளைமறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விடுவார்.

    சச்சின் தெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 13265 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் 3-வது இடத்திலும், லட்சுமண் 8781 ரன்களுடனம் 5-வது இடத்திலும், சேவாக் 8503 ரன்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். கங்குலி 7212 ரன்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் ஜெர்மனைச் சேர்ந்த யோன்னே லீயை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-16, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனோய் 18-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இன்று கிரேக்கோ-ரோமன் பிரிவின் 72 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த பிராப்ளரை எதிர்கொண்டார்.

    இதில் ஆதித்யா குந்து 8-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இந்த பதக்கத்துடன் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் டிக்வெல்லா, திசாரா பெரேரா இடம் பிடித்துள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. வருகிற 22-ந்தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    15 பேர் கொண்ட அணியில் டிக்வெல்லா, திசாரா பெரேரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். திமுத் கருணாரத்னே கேப்டனாக செயல்படுகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. திமுத் கருணாரத்னே, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. குசால் பெரேரா, 4. ஷெஹன் ஜெயசூர்யா, 5. நிரோஷன் டிக்வெல்லா, 6. குசால் மெண்டிஸ், 7. மேத்யூஸ், 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. திசாரா பெரேரா, 10. தசுன் ஷனாகா, 11. வனிந்து ஹசரங்கா, 12. சண்டகன், 13. இசுரு உடானா, 14. நுவான் பிரதீப், 15. லஹிரு குமாரா.
    இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன் புஜாரா இங்கிலிஷ் கவுன்ட்டி அணியான கிளாஸ்டர்ஷைர் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா. இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட கிளாஸ்டர்ஷைர் கிளப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அணிக்காக ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 22-ந்தேதி வரை விளையாடுகிறார்.

    யார்க்‌ஷைர், லங்காஷைர், கென்ட், சோமர்செட், எசக்ஸ், சர்ரே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறார். கிளாஸ்டர்ஷைர் 1995-ம் ஆண்டு ஸ்ரீநாத்தை ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்பின் தற்போது புஜாராவை ஒப்பந்தம் செய்துள்ளது.

    ‘‘கிளாஸ்டர்ஷைர் அணிக்காக விளையாட கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது’’ என புஜாரா தெரிவித்துள்ளார்.
    இஷாந்த் சர்மா காயத்திற்கு முன் எப்படி பந்து வீசினாரோ, அதேபோல் தற்போது பந்து வீசுகிறார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) வெலிங்டனில் தொடங்குகிறது. இந்திய அணியில் மயங்க் அகர்வால் உடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவாரா? ஷுப்மான் கில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    அதேவேளையில் ரஞ்சி டிராபி போட்டியின்போது காயம் அடைந்த இஷாந்த் சர்மா மீண்டும் அதே உத்வேகத்தில் பந்து வீசுவாரா? அவர் அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

    இந்நிலையில் இஷாந்த் சர்மா, பிரித்வி ஷா ஆகியோர்  முதல் டெஸ்டில் களம் இறங்குவார்கள் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

    விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா வழக்கம்போல் காணப்படுகிறார். கணுக்கால் காயத்திற்கு முன் எப்படி பந்து வீசினாரோ?, அதுபோல் தற்போது பந்து வீசுகிறார். பந்தை சிறந்த இடத்தில் பிட்ச் செய்கிறார். இரண்டு முறை அவர் நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்தொடரில் விளையாடியுள்ளார். இதனால் அவரது அனுபவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    பிரித்வி திறமையான வீரர். அவரின் ஆட்டமுறையில் அவர் விளையாடி வருகிறார். அதை அவர் பின்பற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட அவர்கள் பதற்றம் அடையக்கூடாது. ஆஸ்திரேலியாவில் மயங்க் அகர்வால் எப்படி விளையாடினாரோ? அதேபோல் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். நியூசிலாந்தில் பிரித்வி ஷாவால் அதேபோன்று விளையாட முடியும்.

    பிரித்வி ஷாவுக்கு அனுபவம் இல்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி கூறமாட்டேன். ஏனென்றால் கடந்த ஆண்டு அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார். ஆகவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்து வைத்திருப்பார்’’ என்றார்.

    இதனால் முதல் டெஸ்டில் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
    ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்தியா அனுபவம் இல்லாத வீரர்களுடன் களம் இறங்கினாலும், அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் விளையாடி வந்தனர். ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.

    இதனால் மயங்க் அகர்வால் உடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. மயங்க் அகர்வால் 9 டெஸ்ட் போட்டிகளிலும், பிரித்வி ஷா 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

    நியூசிலாந்து ஆடுகளத்தில் டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோரின் பந்து வீச்சை அனுபவம் இல்லாத இருவரும் தாக்குப்பிடித்து விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அவர்களிடம் அனுபவம் இல்லாவிடிலும், சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘இந்திய அணி காயம் காரணமாக ஒன்றிரண்டு வீரர்களை இழந்துள்ளனர். ஆனால் திறமை வாய்ந்த வீரர்களை இந்தியா பெற்றுள்ளது. தேவைப்படும்போது அணியை முன்னெடுத்துச் செல்லும் திறன் அவர்களிடம் உள்ளது. ஹாமில்டனில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்ளுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்கள் கிளாஸ் பிளேயர்ஸ்’’ என்றார்.
    நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை மிகவும் மோசமாக இருப்பது குறித்து கவலை இல்லை, எங்களால் தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி.
    இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்தில் மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1968-ம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. அதன்பின் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் தற்போது இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய உடற்தகுதி மற்றும் கவனம் செலுத்தும் நிலை ஆகியவற்றை கொண்டே நாங்கள் தயாராகி உள்ளோம். இதனால் உலகின் எந்தவொரு அணிக்கெதிராகவும் எங்களால் போட்டியிட முடியும். இந்த வகையான நம்பிக்கையை நாங்கள் இந்தத் தொடரில் எடுத்துச் செல்வோம்.

    கடந்த முறை நாங்கள் இங்கே வந்தபோது தொடரை 0-1 எனத் தோற்றோம். தற்போது இருப்பது அதே அணியல்ல. தற்போது நாங்கள் முழுமையடைந்த அணியை பெற்றுள்ளோம். நியூசிலாந்து திறமையான பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், சிறந்த பீல்டர்களை கொண்ட அணி. அவர்கள் எளிதான ஆட்டத்தை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள்.

    வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியான பயன்படுத்தி போட்டியை நம் பக்கம் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
    ×