search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    இன்னும் மூன்று ஆண்டுகள் இதே உத்வேகத்துடன் விளையாடுவேன்: விராட் கோலி

    ஒரு ஆண்டில் 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறேன், மூன்று வருடங்கள் கழித்து ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘‘இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடக்கும் 20 ஓவர் கோப்பை போட்டி முடிந்ததும் ஏதாவது ஒரு வடிவிலான போட்டியை துறக்கும் எண்ணம் உள்ளதா?’ என்று கேட்கப்பட்டது.

    அதற்கு கோலி பதில் அளிக்கும்போது, ‘‘அடுத்த 3 ஆண்டுகளில் கடினமான மிகப்பெரிய போட்டிகள் உள்ளன. அதற்கு இப்போதிலிருந்தே என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதன் பிறகு நான் வேறு விதமாக சிந்திக்கலாம்’’ என்று பதில் அளித்தார்.

    மேலும் 31 வயதான கோலி கூறியதாவது:-

    8-9 ஆண்டுகள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட், பயிற்சிகள், அதற்குரிய பயணம் என்று ஆண்டுக்கு கிட்டத்தட்ட 300 நாட்களை மைதானத்தில் செலவிடுகிறேன். எல்லா நேரமும் வேகமும், தீவிரமும் இருப்பதால் உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இதுகுறித்து வீரர்களும் யோசிக்காமல் இல்லை.

    விராட் கோலி

    தொடர்ச்சியான போட்டி அட்டவணை வீரர்களுக்கு ஓய்வு அளிக்க அனுமதிக்காது என்ற போதிலும் கூட தனிப்பட்ட முறையில் நாங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) விளையாடும் வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவையாகும்.

    கேப்டனாக இருப்பது எளிதான பணி அல்ல. பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவது, ஆட்டம் குறித்து திட்டமிடுவது உள்ளிட்ட விஷயத்திலும் பணிச்சுமை இருக்கிறது. இதனால் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது எனக்கு சரியாக இருக்கிறது.

    அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன், உற்சாகத்துடனும் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. 34 அல்லது 35 வயதை எட்டும்போது, அந்த சமயம் உடல் ஒத்துழைக்காத பட்சத்தில், வேறு விதமாக யோசிக்கலாம்.

    விராட் கோலி

    இப்போதைக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அணிக்கு எனது பங்களிப்பு நிறைய தேவை என்பதை புரிந்து வைத்துள்ளேன். இதை சரியாக செய்யும்போது, 5-6 ஆண்டுகளுக்கு பிறகு அணியை அடுத்த கட்ட வீரர்களுடன் கட்டமைக்கும் பணி எளிதாகும்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    வெலிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கோலி கூறுகையில், ‘‘இந்திய தூதரகத்துக்கு செல்வது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. அங்கு நமது தேசத்தினருடன் சந்தித்து உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. ‘நம்பர் ஒன்’ இடத்தை எந்த அணியிடமாவது பகிர்ந்து கொள்வதாக இருந்தால் எங்களது தேர்வு நியூசிலாந்து அணியாகத்தான் இருக்கும்.

    எப்போதும் சரியான உத்வேகத்துடன் விளையாடும் ஒரு அணி நியூசிலாந்து. இங்கு அளிக்கப்படும் வரவேற்பும், விருந்தோம்பலும் வியப்புக்குரியது. ஒரு நாள் தொடரை இழந்தாலும் டெஸ்ட் தொடரில் சாதிக்கும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×