search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவிஎஸ் லட்சுமண்
    X
    விவிஎஸ் லட்சுமண்

    இந்தியா 6 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்க வேண்டும்: லட்சுமண் சொல்கிறார்

    வெலிங்டனில் நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது. பொதுவாக இந்தியா உள்நாட்டில் ஐந்து பேட்ஸ்மேன்களுடனும், வெளிநாட்டில் ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாடி வருகிறது.

    வெலிங்டன் போட்டிக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என விராட் கோலி தெரிவித்துவிட்டார். இதனால் ஆறு பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர், நான்கு பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாடினால் மட்டுமே ஹனுமா விஹாரிக்கு அணியில் இடம் கிடைக்கும்.

    அப்படி இருந்தால் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். ஆடுகளத்தை பார்த்த பின்னர்தான் இந்திய அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணி குறித்து முடிவு செய்யும்.

    இந்நிலையில் இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விவிஎஸ் லட்சுமண் கூறுகையில் ‘‘இது இரு அணிகளுக்கும் சமமான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நியூசிலாந்தை அவர்களது மண்ணில் தோற்கடிப்பது மிகமிக கடினம். ஆனால், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது.

    வெளிநாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பேட்ஸ்மேன் இந்த டெஸ்ட் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நின்று, முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தால், வெற்றியை ருசிக்கலாம்.

    இதுபோன்ற வெளிநாட்டு தொடரின்போது இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்க வேண்டும். சகா விக்கெட் கீப்பராகவும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற வேண்டும்.

    பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா விஹாரி சதம் அடித்தார். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும் போட்டிகளில் எல்லாம் ஹனுமா விஹாரி வெளியில் இருக்கிறார். புஜாராவுடன் நீண்ட நேரம் களத்தில் நின்று ஹனுமா விஹாரி விளையாடினால் டெஸ்ட் போட்டியாக சிறப்பாக தொடங்க சரியானதாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×