என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தங்கள் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறிய புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
    சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு 3 மாதங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் ஊக்க மருந்து பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சில வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சரியான தகவலை அளிக்கவில்லை. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள்.

    தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் விதிமுறையை முறையாக கடைப்பிடிக்க தவறிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

    இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவின் அகர்வால் கூறுகையில், ‘‘தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் கேட்கப்படும் எங்கு இருக்கிறேன்? என்பது குறித்த விவரத்தை வீரர்கள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யலாம். சம்பந்தப்பட்ட வீரரே அதனை எங்கள் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அல்லது வீரர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். சில விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இணையதளத்தில் இந்த விவரங்களை பதிவிடுவது எப்படி என்பது தெரியாமல் கூட இருக்கலாம். எனவே இந்த விவரங்களை அளிக்கும் பொறுப்பை விளையாட்டு சம்மேளனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

    இதேபோல்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இதனை பூர்த்தி செய்ய தகுதி படைத்தவர்கள் என்றாலும் நேரமின்மை உள்பட சில காரணங்களால் அவர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று செய்து வருகிறது. இணையதள நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீரர்கள் இருப்பிடம் குறித்த விவரத்தை தெரிவிப்பதில் காலதாமதமாகி விட்டது என்றும் தற்போது அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த விளக்கம் குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்’’ என்றார்.

    வீரர் ஒருவர் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலை முறைப்படி தெரிவிக்க தவறினால் அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையில் இடம் இருக்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.
    அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் பொது இடத்தில் காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அப்ரிடிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்க இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தைப் பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் குறித்து நினைவிருக்கிறதா?” என பதிவிட்டிருந்தார்.

    இதற்கிடையே, சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமையில் இருந்து தனக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    சலாம் கிரிக்கெட் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவுதம் கம்பீர், கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும். அப்ரிடியுடன் தனக்கு அரசியல் ரீதியான கருத்து மாறுபாடு உண்டு என்றாலும், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் அதிகபட்சமாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,25,933 ஆக உயர்ந்துள்ளது.

    பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 2,463 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 40,247 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 15-வது இடத்தில் உள்ளது.

    டுவிட்டர்

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், என் உடல் மோசமாக வலியை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக தான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  ரைவஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட்   வீரர் சாகித் அப்ரிடி என்பது குறிப்பிடத்தக்கது.
    இனரீதியாக தன்னை இழிவுபடுத்திய வீரரிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டேரன் சமி, தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது சில வீரர்கள் என்னை ‘கலு’ என்று அழைத்தார்கள். அப்படி அழைக்கும் போது சிலர் சிரிப்பதும் உண்டு. அந்த சமயத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது இனரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் அந்த வார்த்தை சொல்லப்பட்டதாக நான் அறிகிறேன்.

    எந்த நோக்கில் அவ்வாறு என்னை அழைத்தார்கள் என்பதை அந்த நபர்களிடமே கேட்க விரும்புகிறேன். எனவே அப்படி என்னை அழைத்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும். அவர்கள் தவறான எண்ணத்தில் பேசி இருந்தால் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஆதங்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சம்பந்தபட்ட வீரர் ஒருவர் டேரன் சேமியுடன் பேசியதை அடுத்து அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்.

    இது குறித்து டேரன் சேமி தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு வீரர் என்னுடன் மனம் விட்டு பேசினார். அந்த விவாதம் சிறப்பானதாக அமைந்தது. அந்த சகோதரர் பாசத்தின் காரணமாகவே அதுபோல் என்னை அழைத்ததாக உறுதிபட கூறினார். அதனை நானும் நம்புகிறேன். இதனால் இந்த விஷயத்தில் இனிமேல் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. நடந்த எதிர்மறையான விஷயங்களில் கவனத்தை செலுத்துவதை விடுத்து, இதனை ஒரு பாடமாக நினைத்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது. லா லிகா கால்பந்து போட்டியில் செவில்லா- ரியல்பீட்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் தான் நடந்தது.
    மாட்ரிட்:

    ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து தொடர் கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அங்கு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் லா லிகா போட்டியை தொடர்வதற்கு ஸ்பெயின் அரசு பச்சைகொடி காட்டியது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு லா லிகா கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. செவில்லி நகரில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் செவில்லா கிளப் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்ஸ் அணியை தோற்கடித்தது. முதல் கோலை லுகாஸ் ஒகாம்போஸ் (56-வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியும், 2-வது கோலை பெர்னாண்டோ தலையால் முட்டியும் அடித்தனர்.

    இந்த சீசனில் பங்கேற்றுள்ள 20 அணிகளில் பார்சிலோனா கிளப் 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் கிளப் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. செவில்லா 28 ஆட்டங்களில் விளையாடி 14 வெற்றி, 8 டிரா, 6 தோல்வி என்று 50 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.

    லா லிகா கால்பந்து போட்டியில் இப்போதைக்கு ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செவில்லா- ரியல்பீட்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் தான் நடந்தது. வழக்கமாக ரசிகர்களின் கரவொலி அரங்கையே அதிர வைக்கும். ஆனால் நிசப்தமான சூழலில் விளையாடியது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. முன்னதாக சுமார் 200 ரசிகர்கள் மைதானம் முன் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

    லா லிகா தலைவர் ஜாவியர் டெபாஸ் கூறுகையில், ‘நாங்கள் மீண்டும் லாலிகா போட்டியில் விளையாடுவோம் என்று எப்போதும் நம்பினேன். அதன்படியே தொடங்கி விட்டோம். இந்த சீசன் ஜூலை 19-ந்தேதி நிறைவடைகிறது. உரிய பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைசி கட்டத்தில் 10 முதல் 15 சதவீத ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்’ என்றார். நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் நாளை களம் இறங்குகின்றன.
    இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. புதுமுக வீரர் ஹைதர் அலி, முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
    லாகூர்:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்குவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிக முனைப்பு காட்டி வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக இருந்ததை தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ரசிகர்கள் இன்றி இந்த போட்டித் தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரும் காலி மைதானத்தில் மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடக்க இருக்கிறது.

    இங்கிலாந்து போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இது தவிர 4 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த சோதனையில் எந்த வீரராவது தேறாமல் போனால் மாற்று வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்துக்கு சென்ற பிறகு தேர்வாளர்கள் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியை இறுதி செய்வார்கள்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம் பேட்ஸ்மேன் ஹைதர் அலிக்கு முதல்முறையாக தேசிய அணியில் கால்பதிக்கும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த உள்ளூர் போட்டித் தொடரில் 22 விக்கெட்டுகள் வீழ்த்திய 36 வயதான வேகப்பந்து வீச்சாளர் சோகைல் கான் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டது விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் கூறுகையில், ‘இங்கிலாந்து தொடரில் வெற்றிகரமாக செயல்பட வாய்ப்புள்ள பாகிஸ்தான் அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்து இருக்கின்றனர். மார்ச் மாதம் முதல் எந்தவித போட்டியிலும் நாங்கள் விளையாடாததால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் எங்களுக்கு சவாலானதாக இருக்கும். கொரோனா பாதிப்பு சூழலை எங்கள் வீரர்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த சவாலை எதிர்கொள்ளும் அளவுக்கு மனரீதியாக வலுவாக இருக்கிறார்கள்’ என்றார்.

    இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி வருமாறு:-

    அபித் அலி, பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), ஆசாத் ஷபிக், பவாத் ஆலம், ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், சர்ப்ராஸ் அகமது, பஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், இம்ரான் கான், முகமது அப்பாஸ், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, சோகைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ், இமாத் வாசிம், காஷிப் பாத்தி, ஷதாப் கான், யாசிர் ஷா.
    இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குடும்பத்துடன் சாலையில் திரிந்த மாடுகளுக்கு உணவளித்தார்.
    கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் அண்மைக்காலமாக பல்வேறு பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் தனது குடும்பத்துடன் சாலையில் திரியும் மாடுகளுக்கு ஷிகர் தவான் குடும்பத்துடன் உணவளித்த வீடியோவை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தவானும், அவரது மகனும் மாடுகளுக்குக் காய்கறிகளை வழங்குகின்றனர்.

    வீடியோவுடன் கருத்தையும் பதிவிட்டுள்ள தவான், ‘‘ஒரு தந்தையாக எனது மகனுக்கு வாழ்க்கையில் உண்மையான மதிப்பு எது என்றும், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துவதையும் கற்றுக்கொடுப்பதை முக்கியமாக நினைக்கிறேன்.

    குறிப்பாக யாருக்குத்தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவ வேண்டும். பசியுடன் இருக்கும் கால்நடைகளுக்கு இந்தக் கடினமான நேரத்தில் உணவளியுங்கள். இந்த முக்கிய பாடத்தை எனது மகனுக்குக் கற்றுக்கொடுப்பதில் பெருமை அடைகிறேன். அனைவரும் அவர்களால் முடிந்தவரை உதவ வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் பார்முலா 1 கார் பந்தயத்தின் அஜர்பைஜான், சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    பார்முலா 1 கார்பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும்.

    எல்லா சுற்றுகளிலும் அதிக புள்ளிகள் பெறும் வீரருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்நிலையில் அஜர்பைஜான், சிங்கப்பூர், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பார்முலா 1-க்கு ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

    மேலும், 8 சுற்றுகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்படும். நிலைமை சரியானால் அதற்கு தகுந்த வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் முதலில் ஜூன் 7-ந்தேதி நடைபெற இருந்தது. சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் செப்டம்பர் 20-ந்தேதி நடைபெற இருந்தது.

    ஆஸ்திரியா கிராண்ட் பிரிக்ஸ் ஜூலை மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிப்புற பயிற்சியை மேற்கொள்ள பிசிசிஐ-யின் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுமார் 90 நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ரசிகர்கள் இன்றி வெளிப்புற மைதானத்தில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இதுவரை பிசிசிஐ வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

    ஜூலை மாதம் இலங்கை சென்று இந்திய அணி விளையாடும் என்று பிசிசிஐ முதலில் அறிவித்தது. இதனால் பயிற்சியை மேற்கொள்ளலாம் என வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே தொடர்களை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதால் வீரர்களை பயிற்சி மேற்கொள்ள வைப்பதில் அவசரம் காட்டாமல் உள்ளது.

    இந்நிலையில் வீரர்கள் பியற்சி மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆனால் பிசிசிஐ-யின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதி அளித்ததும், ஷர்துல் தாகூர் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ‘‘மீண்டும் எங்கள் பழைய பார்முக்கு வர சில நெட் செசன் தேவை. 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும்போது அதை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும்போது சுற்றி சில வீரர்கள் இருப்பார்கள். அதன்பின்தான் பந்தை எதிர்கொள்வோம். இதனால் மனதளவில் வலிமையாக பயிற்சி செசன் முக்கியமானது.

    எளிதானது கிடையாது என்றாலும், அதேநேரத்தில் நாங்கள் தொழில்முறை வீரர்கள். நாங்கள் பல ஆண்டுகள் விளையாடி இந்த நிலையை எட்டியுள்ளோம். அதனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நீண்ட காலம் எடுக்காது’’ என்று ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி .இந்தியாவில் விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி எந்தவித போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் உள்ளது.

    இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததால் இந்தியாவுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை அணி விரும்பியது. இந்தியாவும் இலங்கை வந்து விளையாட சம்மதம் தெரிவித்தது.

    ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனாவில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தொடரை நேற்று ரத்து செய்தது.

    ஜிம்பாப்வே அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. தற்போது இந்தத் தொடரையும் பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

    பிசிசிஐ முதன்முறையாக இரண்டு தொடர்களை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இந்தத் தகவலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
    செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் டி20 போட்டிகள் நடத்தப்படலாம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்தது.

    இது குறித்து நேற்றுமுன்தினம் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘‘ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் ‘‘செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது ஐசிசியின் முடிவில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலக கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தவில்லை என்றால். அந்தத் தேதிகளை ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம்.

    எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பின்புதான் அடுத்தகட்டம் குறித்து யோசிக்க முடியும்’’ என்றார்.
    2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    லண்டன்:

    2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு நாள் தாமதமாக 2022-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
     
    கொரோனா தாக்கத்தினால் 2021-ம் ஆண்டு நடக்க இருந்த சர்வதேச அளவிலான முக்கியமான போட்டிகள் 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அமெரிக்காவில் நடக்கிறது. காமன்வெல்த் போட்டி தேதியில் செய்யப்பட்ட மாற்றம், தடகள வீரர், வீராங்கனைகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு கூடுதலாக ஒரு நாள் கிடைக்கும். இதே போல் பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியின் அரைஇறுதி ஆட்டங்கள் அதே ஆண்டில் ஜூலை 27-ந்தேதி நடக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
    ×