என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த சீசனுக்கான துலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ய வேண்டும் என்று வாசிம் ஜாபர் வலியுறுத்தி உள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் குவித்தவருமான வாசிம் ஜாபர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்த சீசன் எப்பொழுது தொடங்கினாலும் முதல் போட்டியாக ஐ.பி.எல்.-லை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிக்கும். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இரானி கோப்பை போட்டியுடன் உள்ளூர் சீசனை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டும்.

    அதனை அடுத்து ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஸ்தாக் அலி போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த சீசனுக்கான விஜய் ஹசாரே, துலீப், தியோதர் கோப்பை போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். 

    இந்த போட்டிகளை ரத்து செய்வதன் மூலம் மற்ற போட்டிகளை முழுமையாக நடத்த முடிவதுடன், வீரர்களுக்கும் போட்டிக்கு தயாராக போதிய இடைவெளி கிடைக்கும். மாறாக எல்லா போட்டிளையும் நடத்த முயற்சித்தால் வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பது கடினமாகி விடும்.

    இதேபோல் ஜூனியர் பிரிவில் இந்த சீசனில் 23 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டிகளை நீக்க முயற்சிக்க வேண்டும். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறுவதற்கான வழிமுறை கடினமானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

    ரஞ்சி போட்டியில் ‘டி’ பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு கால்இறுதியில் விளையாட வாய்ப்பு வழங்கக்கூடாது. அப்படி வழங்குவது போட்டியை சற்று பலவீனப்படுத்தும்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.
    கொரோனா பாதிப்பு இல்லாத வீரர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. அதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் தடை மூலம் பவுலர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த முடிவு பேட்ஸ்மேன்களுக்கு அனுகூலமாக அமையும் என்றும் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் கருத்து தெரிவிக்கையில்,

    ‘தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையின் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான பிறகு அவர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

    இது குறித்து மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் தான் விரிவாக கருத்து தெரிவிக்க முடியும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தான் எச்சிலை பயன்படுத்துவதை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்து இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது உலக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பந்தை தேய்க்க எச்சிலை பயன்படுத்த தடை விதித்து இருப்பதன் மூலம் பவுலர்கள் மேலும் பாதிப்படைய நேரிடும்’ என்றார்.
    லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    மாட்ரிட்:

    ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 20 அணிகள் இடையிலான இந்த போட்டி ரசிகர்கள் இன்றி காலியான ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் அரங்கேறி வருகிறது. இந்த போட்டி தொடரில் மாட்ரிட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 33 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, அய்பார் அணியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த போட்டியில் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணியின் கை ஓங்கி இருந்தது. முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணியின் அபார ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணியினர் திணறினார்கள். 4-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் கரிம் பென்சிமா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் டோனி குரூஸ் கோலுக்குள் திணித்தார்.

    30-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கோல் அடித்தார். சக வீரர் ஈடன் ஹசார்ட் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை அவர் லாவகமாக கோலுக்குள் திருப்பினார். 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணி வீரர் மார்செலோ இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

    பின் பாதியில் பதில் கோல் திருப்ப அய்பார் அணி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. 60-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பெட்ரோ பிகாஸ் ஆறுதல் கோல் திருப்பினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அய்பார் அணியை வீழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து நடந்த ரியல் சோசிடாட்-ஒசாசுனா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணி இதுவரை 28 ஆட்டங்களில் விளையாடி 17 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 59 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 புள்ளிகள் தான் வித்தியாசம் உள்ளது.

    வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி எங்களது மனவலிமையை அதிகரிக்கும். இந்த சிறப்பான ஆட்டத்தை கண்டு ஆச்சரியப்படவில்லை. நல்ல பார்முக்கு திரும்ப நாங்கள் கடினமாக உழைத்து இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். முதல் பாதியில் காட்டிய வேகத்தை போட்டி முழுவதும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டியின் பின்பாதியில் நடந்த தவறுகளை வரும் ஆட்டங்களில் நடக்காமல் பார்த்து கொள்வோம். அடுத்து வரும் 10 ஆட்டங்களும் எங்களுக்கு இறுதிப்போட்டி போன்றது தான். அதில் அதிக போட்டிகளில் வெற்றி பெற நாங்கள் முயற்சிப்போம்‘ என்றார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் போரட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் நீக்கப்படலாம் எனத் செய்திகள் வெளியாகியுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கிரிக்கெட் ஆஸ்திரேியா போர்டில் வேலை செய்த அதிகாரிகள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

    மேலும், மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியிலும் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா போர்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி விட்டு இடைக்காக அதிகாரியை நியமிக்க போர்டின் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டில் தலைமை நிர்வாகியாக  17 வருடங்களாக ஜேம்ஸ் சுதர்லாந்து இருந்து வந்தார். கடந்த 20 மாதத்திற்கு முன் ஜேம்ஸ் சுதர்லாந்து நீக்கப்பட்டு கெவின் ராபர்ட்ஸ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    47 வயதாகும் ராபர்ட்ஸ் நீக்கப்பட்டால், ரக்பி ஆஸ்திரேலியா அல்லது தேசிய ரக்பி லீக் அணியில் சேர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்எஸ் டோனி 3-வது இடத்தில் களம் இறங்கி இருந்தால் இன்னும் ஏராளமான சாதனைகளை முறியடித்திருப்பார் என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது எம்எஸ் டோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது. அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு எம்எஸ் டோனியை ரசித்திருக்கும். ஒரு முற்றிலும் மாறுபட்ட எம்எஸ் டோனியை நாம் கண்டு இருக்கலாம்.

    அப்படி அவர் களமிறங்கியிருந்தால் இன்னும் ஏராளமான ரன்களை குவித்திருப்பார், பல சாதனைகளை உடைத்திருப்பார். சாதனைகளை விடுங்கள் சாதனைகள் படைக்கப்படுவதே உடைப்பதற்காக தானே. அதைவிட ஒரு மிக நல்ல பேட்ஸ்மேனை கிரிக்கெட் உலகம் ரசித்திருக்கும். அது அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தாலும் சாத்தியப்பட்டிருக்கும்

    எம்எஸ் டோனி, கவுதம் கம்பிர்

    ஒரு பிளாட் பிட்சில் மூன்றாவது பேட்ஸ்மேனாக எம்எஸ் டோனி களமிறங்கியிருந்தால், இப்போதுள்ள பவுலர்களை மனதில் வைத்துப் பார்த்தால் வேறு மாதிரியான சாதனைகளைப் படைத்திருப்பார். உதாரணத்துக்கு இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை நினைத்துப் பாருங்கள்’’ என்றார்.

    2004-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன எம்எஸ் டோனி 3-வது இடத்தில் களம் இறங்கி இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடினார். 3-வது இடத்தில் எம்எஸ் டோனி 82 சராசரி வைத்துள்ளார்.
    லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா கிளப் 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்காவை பந்தாடியது.
    மலோர்கா:

    கொரோனா அச்சத்தால் 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டித் தொடர் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. பாதுகாப்பு கருதி ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மலோர்கா நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி, உள்ளூர் அணியான மலோர்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 64-வது வினாடியிலேயே பார்சிலோனா முதல் கோல் அடித்தது. அந்த அணியின் அர்துரோ விடால் தலையால் முட்டி பந்தை வலைக்குள் திருப்பினார்.

    ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா வசமே பந்து பெரும்பாலும் (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. 37-வது நிமிடத்தில் மார்ட்டின் பிராத்வெய்ட்டும், 79-வது நிமிடத்தில் ஜோர்டி அல்பாவும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியுடன் உதவியோடு கோல் அடித்து அசத்தினர்.

    வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்திருந்த பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 6 மாதங்களுக்கு பிறகு களம் இறங்கினார். 57-வது நிமிடத்தில் மாற்று வீரராக அடியெடுத்து வைத்த சுவாரஸ் இறுதி கட்டத்தில் நெருங்கி வந்து கோல் வாய்ப்பை தவற விட்டார். இதற்கிடையே அவர் தட்டிக்கொடுத்த பந்தை கடைசி நிமிடத்தில் மெஸ்சி வலைக்குள் திணித்து அட்டகாசப்படுத்தினார்.

     மெஸ்சி சாதனை


    இந்த சீசனில் மெஸ்சியின் 20-வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 12-வது சீசனில் 20 மற்றும் அதற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    முடிவில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்காவை வீழ்த்தியது. இதுவரை 28 ஆட்டங்களில் ஆடியுள்ள பார்சிலோனா 19 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி என்று 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ரியல் மாட்ரிட் கிளப் 56 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறது. புள்ளி பட்டியலில் 18-வது இடத்திற்கு தள்ளப்பட்ட மலோர்கா அணி சந்தித்த 17-வது தோல்வி இதுவாகும்.

    முன்னதாக ஆட்டத்தின் 2-வது பாதியின் போது திடீரென ஒரு இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்து விட்டார். அர்ஜென்டினா கால்பந்து அணிக்குரிய சீருடையை அணிந்திருந்த அவர் மெஸ்சியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில் அவரை நோக்கி ஓடி வந்தார். பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து வெளியேற்றினர். ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி உள்ளே வந்தார் என்பது தெரியவில்லை. முககவசமோ, கையுறையோ அணியவில்லை. பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய அவர் மீது போலீசில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என்று லா லிகா கால்பந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து நடந்த அட்லெடிகோ மாட்ரிட்-அத்லெட்டிக் பில்பாவ் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
    நிலைமையை ஆராய்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    மும்பை:

    16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கு நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பதை இறுதிசெய்ய அடுத்த மாதம் வரை காத்திருப்பது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருக்கிறது.

    இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தலைவிதி குறித்து என்னிடம் கேட்டால், அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதே சமயம் நிதி நிலைமை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய அம்சங்களையும் இந்த விவகாரத்தில் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதில் முடிவு எடுப்பது கடினமானது தான். ஆனால் கிரிக்கெட் நடக்க வேண்டும். அதை விட பெரிது எதுவும் இல்லை.’ என்றார்.

    மேலும் தெண்டுல்கர் கூறுகையில், ‘ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது. ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் இல்லாமல் உற்சாகமான சூழலை உருவாக்குவது கடினம். கேலரியில் ரசிகர்களை பார்க்கும் போதெல்லாமல் அதுவே சில நேரம் உங்களுக்குள் உத்வேகத்தை கொண்டு வரும். 25 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் படிப்படியாக மற்ற நாடுகளும் கிரிக்கெட் விளையாட தொடங்கும்.’ என்றார்.

    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, தான் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:

    இந்த ஆண்டில் 20 ஓவர் உலகக் கோப்பை அல்லது ஐ.பி.எல். கிரிக்கெட் இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

    இரண்டுக்கும்.

    தற்போதைய காலக்கட்டத்தில் எந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை நீங்கள் அதிகமாக ரசிக்கிறீர்கள்?

    ஜாசன் ராய் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா)

    ஊரடங்கு முடிந்ததும் அடுத்தகட்ட திட்டம் என்ன?

    மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது தான்.

    டோனி குறித்து ஒரு வார்த்தை?

    ஜாம்பவான்

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ஒரு வார்த்தை?

    (இந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ‘கோலி குறித்து ஒரு வார்த்தை’ என்று கூறியபடி மூன்று விதமான பொம்மைகளை (ஈமோஜி) பதிவிட்டார். சிரித்தபடி காணப்பட்ட அந்த எமோஜிகளைப் பார்த்து அதற்குரிய வார்த்தையை கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டார்.)

    ஒரு நாள் கிரிக்கெட்டில் முச்சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் - இதில் உங்களது விருப்பம்?

    இரண்டுமே நடந்தால் சந்தோஷம் தானே....வேறென்ன?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து?

    மிகச்சிறந்த அணி

    சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரில் உங்களது தேர்வு?

    (சிரித்தபடி) நான் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என பதிலளித்தார்.
    ஐபிஎல் 2020 சீசனை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் நடத்தலாம் என கவாஸ்கர் யோசனை வழங்கியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘‘கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது அக்டோபர் மாதம்வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது பாதுகாப்பானதாக இருக்காது.

    மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர், கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்கலாமா? இல்லையா? என்பதை மதிப்பிடுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

    ஸ்டேடியத்திற்குள் குறைந்த அளவு ரசிகர்களை அனுமதிக்கலாம் என்ற ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்கக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடந்தால் அதன் பிறகு அக்டோபரில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரை நடத்துவது கடினமாகி விடும்.

    எனவே செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். அது பருவமழை காலம் என்பதால் அந்த சமயத்தில் இந்தியாவில் இந்த போட்டியை வைக்க முடியாது. அதற்கு பதிலாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். ஒவ்வொரு அணியும் இரண்டு முறை மோதுவதற்கு பதிலாக தலா ஒரு தடவை மட்டும் மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்க வேண்டும்.

    இந்த வகையில் மட்டுமே இந்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சாத்தியம் உள்ளது. இலங்கை இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தலாம்’’என்றார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்ற வெயின் பிராவோ தெரிவித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான வெய்ன் பிராவோ ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடல் ஒன்றில் கூறியதாவது:-

    கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி. மிக எளிதாக சந்தித்து பேசக்கூடிய வீரர்களில் அவரும் ஒருவர். கிரிக்கெட் களத்திற்கு வெளியே மிக இயல்பாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருப்பார். அவரது அறை கதவு எந்த நேரமும் திறந்தே இருக்கும்.

    மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பற்றி நீங்கள் எப்போது பேசினாலும் சரி. அவர்களில் டோனிதான் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு வாய்ந்த ஒரு அணி. எங்களுக்கு தான் விசுவாசமான ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்சின் வெற்றிக்குரிய எல்லா பெருமையும் கேப்டன் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரையே சாரும். அணி நிர்வாகிகளும் டோனி, பிளமிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது வெளிப்புற தலையீடு எதுவும் இருக்காது. இருவரும் கிரிக்கெட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள். அணி வீரர்களும் டோனி மீது மிகுந்த பாசம் வைத்து உள்ளனர். அந்த சூழலே அருமையானது.

    இவ்வாறு பிராவோ கூறினார்.
    தங்கள் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறிய புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
    சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு 3 மாதங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் ஊக்க மருந்து பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சில வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு சரியான தகவலை அளிக்கவில்லை. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள்.

    தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் விதிமுறையை முறையாக கடைப்பிடிக்க தவறிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

    இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவின் அகர்வால் கூறுகையில், ‘‘தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் கேட்கப்படும் எங்கு இருக்கிறேன்? என்பது குறித்த விவரத்தை வீரர்கள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யலாம். சம்பந்தப்பட்ட வீரரே அதனை எங்கள் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அல்லது வீரர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். சில விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இணையதளத்தில் இந்த விவரங்களை பதிவிடுவது எப்படி என்பது தெரியாமல் கூட இருக்கலாம். எனவே இந்த விவரங்களை அளிக்கும் பொறுப்பை விளையாட்டு சம்மேளனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

    இதேபோல்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இதனை பூர்த்தி செய்ய தகுதி படைத்தவர்கள் என்றாலும் நேரமின்மை உள்பட சில காரணங்களால் அவர்களுக்கான இந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று செய்து வருகிறது. இணையதள நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீரர்கள் இருப்பிடம் குறித்த விவரத்தை தெரிவிப்பதில் காலதாமதமாகி விட்டது என்றும் தற்போது அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த விளக்கம் குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்’’ என்றார்.

    வீரர் ஒருவர் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலை முறைப்படி தெரிவிக்க தவறினால் அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையில் இடம் இருக்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.
    அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் பொது இடத்தில் காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அப்ரிடிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்க இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தைப் பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் குறித்து நினைவிருக்கிறதா?” என பதிவிட்டிருந்தார்.

    இதற்கிடையே, சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமையில் இருந்து தனக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    சலாம் கிரிக்கெட் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவுதம் கம்பீர், கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும். அப்ரிடியுடன் தனக்கு அரசியல் ரீதியான கருத்து மாறுபாடு உண்டு என்றாலும், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
    ×