என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இனிமேல் விதிகளை மீற மாட்டேன் எனத் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் இருந்தார்.

    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சஞ்சய் மஞ்ச் ரேக்கர் கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

    ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பி.சி.சி.ஐ. விதிப்படி நடந்து கொள்கிறேன். இனிமேல் ஒருபோதும் விதிகளை மீற மாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன். 

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் தொடர்பாக கங்குலி விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வர முடியாதது துரதிருஷ்டம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்தான்.

    இதனால் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார். பென் ஸ்டோக்ஸ் போன்ற மேட்ச் வின்னர் இந்திய அணிக்குத் தேவை. இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வராதது துரதிருஷ்டம் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறி்தது இர்பான் பதான் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு போட்டிகளை வென்று கொடுத்த வகையில் பென் ஸ்டோக்ஸ் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராகியுள்ளார். இதேபோன்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் நபர் தேவை. யுவராஜ் சிங் அதுபோன்ற வீரராக திகழ்ந்தார். அணியில் ஆல்-ரவுண்டர் இருப்பது வேறு விசயம். ஆனால் முற்றிலும் டெஸ்ட் போட்டியை பற்றி நான் பேசுகிறேன்.

    இந்திய அணிக்காக எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியின் ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் முதல் 10 இடத்திற்குள் ஹர்திக் பாண்ட்யா இல்லாதது துரதிருஷ்டவசமானது. அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு  வெற்றிக்கு தேடிக்கொடுக்க முடியும் என்றால், இந்த அணி வெல்ல முடியாததாக இருக்கும்’’ என்றார்.
    ஐபிஎல் போட்டியை காண 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறோம் என ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.  ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார். அக்டோபர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு 30 முதல் 50 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

    இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி கூறுகையில் ‘‘இந்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டது என்று பிசிசிஐ எங்களுக்கு தெரிவித்த உடன், நாங்களும், பிசிசிஐ-யும் தயார் செய்யும் பரிந்துரை மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் எங்கள் அரசிடம் கொண்டு செல்வோம்.

    பிரபலமான இந்தத் தொடரை எங்களது மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், இது குறித்த அனைத்து முடிவுகளும் அரசை சார்ந்தது. பெரும்பாலான போட்டிகள் இங்கு நடைபெறும் போது 30 முதல் 50 சதவீத ரசிகர்கள் வருவார்கள். தற்போது அதே அளவு ரசிகர்கள் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு அனுமதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.’’ என்றார்.
    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடக்க இருந்த 5-வது சீசன் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இத்தொடர் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஆகஸ்.,31-ந்தேதி வரை எவ்வித விளையாட்டு போட்டிகளையும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட்  சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார். TNPL தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
    இந்தியாவில் மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது. 

    செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள்.



    அந்த வகையில் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    ‘ரகிட ரகிட’ பாடலை தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.
    வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் 4 மாதம் விளையாடுகிறார்.
    வெலிங்டன்:

    8-வது கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் விளையாடுகிறார். அவர் தொடர்ச்சியாக 4 மாதம் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த வாரத்தில் சொந்த நாட்டை விட்டு புறப்படுகிறார்.

    சி.பி.எல். போட்டியில் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடும் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் காணுகிறார். இதே போல் நியூசிலாந்தை சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (சி.பி.எல்.) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐ.பி.எல்.) அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுகிறார். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி சி.பி.எல். போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடுகிறார். ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இருக்க உள்ளார்.
    இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி வீரர்களான ஆர்.அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), எம்.விஜய் (சென்னை சூப்பர் கிங்ஸ்), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), விஜய் சங்கர் (ஐதராபாத்), வாஷிங்டன் சுந்தர் (பெங்களூரு) ஆகியோர் விளையாட உள்ளனர். இதனால் அந்த நேரத்தில் டி.என்.பி.எல். போட்டியை நடத்துவது பொருத்தமாக இருக்காது.

    ஐ.பி.எல். முடிந்ததும், உள்ளூர் ஆட்டமான ரஞ்சி கிரிக்கெட் தொடங்குகிறது. எனவே டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு உகந்த காலம் கிடைப்பது மிகவும் கடினமாகும். இதனால் இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல். போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது பற்றி அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் பேட்டியளித்து உள்ளார்.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி நேற்று அளித்த பேட்டியில், ‘கவுரவமிக்க இந்த போட்டியை எங்கள் நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

    இங்கு நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் 30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. நாங்களும் அதே சதவீத எண்ணிக்கையை எதிர்பார்க்கிறோம். ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.

    அமீரக அரசின் தீவிரமான நடவடிக்கையால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு (தற்போது 6,200 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்) குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம்.

    ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து விடும். 14 அணிகள் இடையிலான உலக கோப்பை தகுதி சுற்றை கடந்த ஆண்டு நடத்தினோம். இதே போல் இந்த மெகா தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்’ என்றார்.
    ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. 
    ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது. 

    இதற்கான அனுமதி கிடைத்ததையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி நடத்துவதற்கான முன்னெற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் சிலர் தங்கள் வீடுகளிலேயே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரு அணியாக இதுவரை எந்த அணியும் பயிற்சியை தொடங்கவில்லை.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் நாடான ஐக்கிய அரபு அமீரகத்திலேயே சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் வரும் 9 ஆம் தேதி (ஆகஸ்ட் 9) சென்னை வந்தடைகின்றனர். 

    பின்னர் சென்னையில் இருந்து அடுத்தநாளே (ஆகஸ்ட் 10) சிறப்பு விமானம் மூலம் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அபீரகத்திற்கு செல்கின்றனர்.

    அமீரகம் சென்ற உடன் அங்கு சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிஎஸ்கே வீரர்கள் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தாலும் இந்த பயணம் தொடர்பான தேதிகள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதிக்காக சென்றுள்ளதாகவும் அனுமதி கிடைத்த உடன் சிஎஸ்கே வீரர்களின் பயண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக உள்ளது என்று அசார் அலி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    முதல் டெஸ்ட் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற தொடரில் பந்து வீசிய வகையில் அவர்களை இருவரையும் அணியில் பெற்றிருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி அனுபம் பெற்றுள்ள முகமது அப்பாஸை பெற்றுள்ளது சிறப்பானது.

    சோஹைல் கான் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளார். வீரர்களுடன் இவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். யாசீர் ஷாவின் அனுபவத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் லெக்-ஸ்பின்னர். இளம் வீரர்களை வழிநடத்துவது முக்கியமானது.

    நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி

    சில நேரம் ரன்கள் அடிக்கலாம், சில நேரம் ரன்கள் அடிக்க முடியாமல் போகலாம். ஆனால், எங்களுடைய வீரர்கள் நல்ல டச்சில் உள்ளனர். பேலன்ஸ் கொண்ட  அணி எப்போதும் சிறப்பானதாக இருக்கும். பாகிஸ்தான் ஏற்கனவே இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி உள்ளது.

    லாக்டவுன் காரணமாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது ஒரு சவாலான அனுபவம். முகாமில் முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. மெதுவாக பந்து வீசினார். அதன்பின் பயிற்சி மூலம் பழைய நிலையை அடைந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களின் வொர்க்லோடு சிறப்பாகவே உள்ளது’’ என்றார்.
    இந்திய அணியின் ரோகித் சர்மா மிகவும் அபூர்வமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் லூக்கி பெர்குசன். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோற்ற நிலையிலும் அந்த தொடரில் 21 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இந்நிலையில் பெர்குசன் அளித்த பேட்டியில் ‘‘இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சிரமமான செயல். அவரை தொடக்கத்திலேயே அவுட் ஆக்கவில்லை என்றால் பிறகு வீழ்த்துவது மிகவும் கடினம். ரோகித் சர்மா உலக தரத்திலான ஆட்டக்காரர். ரோகித் சர்மாவின் மிகபெரிய ரசிகன்.

    சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினம்’’ என்றார்.
    என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்சங் குற்றச்சாட்டில் பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

    பின்னர் நீதிமன்றத்தால் அவரது தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தலைவராக உள்ளார்.

    இந்தநிலையில், அவர் பேட்டி ஒன்றில் தனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை எனக் கூறி உள்ளார்.

    இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில், ‘‘நடந்த சம்பவங்கள் குறித்து நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியாது.

    நான் போராட முடிவு செய்தேன். 12 ஆண்டுகள் கழித்து இதில் இருந்து விடுபட்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். பிசிசிஐ ஏஜிஎம் கூட்டத்தில் கூட கலந்து கொண்டேன்.

    நான் 16 முதல் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். இதைவிட அதிகமாக நான் என்ன கேட்க முடியும். கிரிக்கெட் பயணம் தனக்கு திருப்தி அளித்தது’’ என்றார்.

    முகமது அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 99-வது டெஸ்ட் போட்டிதான் அவரின் கடைசி போட்டியாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னால் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என்பது குறித்து தான் கவலை அடையவில்லை என்றும் கூறினார்.
    ×