என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.
    மும்பை:

    பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் பெண்கள் சேலஞ்சர் கிரிக்கெட் இந்த முறை நடத்தப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது.

    இந்த நிலையில் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்திய வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 3 அணிகள் இடையிலான இந்த போட்டி நவம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த வீரராவது கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    போட்டி அட்டவணை மற்றும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்து ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நேற்று ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பரஸ் மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள், இதர விவரங்கள் வருமாறு:-

    * ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒளிபரப்பு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. எப்போதுமே இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை தான் அரங்கேறும். முதல்முறையாக இப்போது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10-ந்தேதி) நடக்க உள்ளது.

    * கொரோனா தொற்றினால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    * ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    * சீன செல்போன் நிறுவனமான விவோ உள்ளிட்ட எல்லா ஸ்பான்சர்ஷிப்பும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும். மொத்தம் 10 நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம் பெறுகிறது.

    ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி விட்டது. மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வார இறுதிக்குள் அது வெளியாகும் என்று தெரிகிறது.
    31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் 9-ந்தேதி வரை இத்தாலியில் நடக்கிறது.
    பாலெர்மோ:

    31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் 9-ந்தேதி வரை இத்தாலியில் நடக்கிறது. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி தடைப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் முதல் சர்வதேச டென்னிஸ் தொடர் இதுவாகும். இந்த போட்டியில் விளையாட இருந்த வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரா மார்டிச் (குரோஷியா), மரியா சக்காரி (கிரீஸ்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கோன்டாவெய்ட் (எஸ்தோனியா), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மிலாடெனோவிச் (பிரான்ஸ்) உள்ளிட்ட வீராங் கனைகள் களம் இறங்குகிறார்கள்.
    எனக்கு தெரிந்தவரை டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    எனக்கு தெரிந்தவரை டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன். டோனி இனி நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. ஓய்வு குறித்து அவர் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காததால் அதை பற்றி நாமும், ஊடகத்தினரும் பேசிக் கொண்டு இருக்கிறோம். மனதில் என்ன உள்ளது என்பதை அவர் தான் அறிவிக்க வேண்டும். வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டோனிக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்ற கருத்தை நான் நம்பவில்லை.

    ஏனெனில் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவதற்கும், சர்வதேச போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை பொறுத்தவரை டோனியின் ஆட்டத்திறன் ஒரு போதும் குறையாது. டோனி விளையாட விரும்பினால், கேப்டனோ, பயிற்சியாளரோ, தேர்வாளரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்.

    இவ்வாறு நெஹரா கூறினார்.

    39 வயதான டோனி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடாத டோனி தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறார்.
    பார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி போட்டியில் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
    பார்முலா 1 கார் பந்தயத்தின் பிரட்டிஷ் கிராண்ட் பிரி இன்று நடைபெற்றது. இதில் மெர்சிடஸ் வீரர் லிவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

    பிரிட்டிஷ் கிராண்ட் பிரியில் ஹாமில்டனின் 7-வது வெற்றி இதுவாகும். இதனுடன் ஒட்டு மொத்தமாக 87-வது வெற்றியை ருசித்துள்ளார். இன்னும் நான்கு கிராண்ட் பிரியை வென்றால் கார்பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை  முறியடிப்பார்.

    ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2-வது இடத்தை பிடித்தார். இந்த வருடத்திற்கான பார்முலா 1-ல் இதுவரை நான்கு கிராண்ட் பிரி நடைபெற்றுள்ளது. இதில் மூன்றில் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.
    ஐபிஎல் 2020 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

    ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2-ந்தேதி (இன்று) நடைபெறும் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இன்று ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வரும் 26-ந்தேதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பெண்கள் ஐபிஎல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார் அனில் கும்ப்ளே.
    இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் 132 போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியது இவரது சாதனையாகும்.

    இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேகருக்கு அடுத்தப்படியாக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேதான்.

    தற்போது டி.ஆர்.எஸ். முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடுவர் கொடுக்கும் முடிவில் சந்தேகம் இருந்தால், 3-வது நடுவரிடம் முறையிட முடியும். கள நடுவர் கொடுத்தது தவறு என்றால், சரி செய்து கொள்ள முடியும்.

    ஆனால் அனில் கும்ப்ளே விளையாடிய காலத்தில் டி.ஆர்.எஸ். கிடையாது. கள நடுவர் என்ன சொல்கிறாரோ? அதுதான் இறுதி தீர்ப்பு. பொதுவாக அனில் கும்ப்ளே வீசும் பந்து பேட்ஸ்மேனில் காலில் படும்போது எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டால் ஸ்டமிற்கு மேல் பந்து செல்ல வாய்ப்புள்ளதாக கருதி நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்துவிடுவார்கள். ஆனால் வார்னே பந்து வீசும்போது நடுவர்கள் கொடுத்து விடுவார்கள். இதுகுறித்து வெளிப்படையாக ரசிகர்கள் விமர்சிப்பது உண்டு.

    இந்நிலையில் டி.ஆர்.எஸ். மட்டும் இருந்திருந்தால் நான் எப்போதே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியிருப்பேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நான் பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆறு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தபோது தேனீர் இடைவேளை வந்தது. ஆகவே, தேனீர் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கியபோது கொஞ்சம் சோர்வாக இருந்தேன். ஏனென்றால், உணவு இடைவேளையில் இருந்து தேனீர் இடைவேளை வரை தொடர்ச்சியாக பந்து வீசினேன்.

    தேனீர் இடைவேளைக்குப்பிறகு, முன்னதாக பந்து வீசியதுடன் சிறப்பாக பந்து வீச முடிவும் என்று எண்ணினேன். ஆனால் 10 விக்கெட் வீழ்த்துவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    போட்டியின்போது நீங்கள் 10 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அதற்கு ஏற்றபடி நீங்கள் தயாரானாலும் அணியில் முதல் வீரரில் இருந்து 11-வது வீரர் வரைக்கும் எப்படி பந்து வீச முடியும்?. அதனால் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து நினைக்க முடியாது.

    8-வது மற்றும் 9-வது விக்கெட்டை வீழ்த்தியபின் என்னுடைய ஓவர் முடிவடைந்தது. ஓவர் முடிந்து தேர்டு மேன் நிலையில் பீல்டிங் செய்ய சென்றபோது, ரசிகர்கள் கவலைப்படாதீர்கள், 10 விக்கெட் வீழ்த்துவீர்கள் என்றார்கள்.

    அப்போது ஸ்ரீநாத் ஒருபக்கம் பந்து வீசி கொண்டிருந்தார். நான் ஸ்ரீநாத்திடம் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து ஏதும் கூறவில்லை. ஆனால் நான் 10 விக்கெட் வீழ்த்த அனைவரும் முயற்சி மேற்கொண்டனர்.

    ஒருவர் தொடர்ச்சியாக வைடாக பந்து வீசுவது எளிதான காரியம் இல்லை. ரமேஷ் வேண்டுமென்றே கேட்ச் மிஸ் செய்தார் என்று நினைக்க வேண்டாம். அவர் இதுகுறித்து அறிந்திருக்கவில்லை. ரசிகர்கள் கேட்ச்-ஐ விடுங்கள் என்று கூச்சலிட்டனர். பந்து அவரை விட்டு விலகிச் சென்று விட்டது. இல்லையென்றால் அவர் பிடித்திருப்பார்.

    அனில் கும்ப்ளே

    என்னுடைய அடுத்த ஓவரை வாசிம் அக்ரம் எதிர்கொண்டார். அவர் தாக்குப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அக்ரம் மிட்-ஆஃப், மிட்-ஆன் திசையில் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் அடிக்க விட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இரண்டு பந்துகள் வீசிய பின்னர், அவர் ஒரு ரன் அடிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

    அதனால் பீல்டர்களை அருகில் கொண்டு வந்து பந்து வீசினேன். ஸ்ரீநாத் மேலும் ஒரு ஓவரை அப்படி வீசுவார் என்று என்னால் நினைக்க முடியவில்லை. வாசிம் அக்ரம் பந்து டர்ன் ஆகும் என்று நினைத்தார். ஆனால் பந்து டர்ன் ஆகவில்லை. பந்து எட்ஜ் ஆகியது. லட்சுமண் சிறப்பாக கேட்ச் பிடித்தார். ஆகவே, என்னுடைய சாதனை ஒரு அணியின் ஒட்டுமொத்த முயற்சி. எனக்கு 10 விக்கெட் வீழ்த்தும் அதிர்ஷ்டம் இருந்தது.

    டி.ஆர்.எஸ். வாய்ப்பு மட்டும் வழங்கப்பட்டிருந்தால் பாகிஸ்தானுக்கு முன்னதாகவே நான் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பேன்’’ என்றார்.
    அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது
    அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குரிய தகுதி சுற்றான "சூப்பர் லீக் " லாக கணக்கிடப்படுகிறது.

    கடந்த 30-ந்தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய  2-வது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவாக சவுத்தாம்ப்டனில் நடந்தது.

    முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்தது. கேம்பர் அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். அவர் கடந்த ஆட்டத்திலும் அரைசதம் அடித்து இருந்தார்.

    அடில் ரஷித் 3 விக்கெட்டும், டேவிட் வில்லே, சகீப் மக்மூத்  தலா 2 விக்கெட்டும், ஜேம்ஸ் வின்ஸ், ரீஸ் டாப்ளே தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 32.3  ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 216  ரன் எடுத்து 4  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பேர்ஸ்டோவ் 41 பந்தில் 82 ரன் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும்  அடங்கும். டேவிட் வில்லே 47  ரன்னும், சாம் பில்லிங்ஸ் 46 ரன்னும் எடுத்தனர்.

    லிட்டில் 3 விக்கெட்டும், கேம்பர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

     இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி போட்டி  வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
    இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. 

    இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான், நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.
    பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது.
    சில்வர்ஸ்டோன்:

    பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதில் 306.198 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய காத்திருக்கிறார்கள்.

    இதுவரை நடந்துள்ள 3 சுற்று முடிவில் 6 முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 58 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இன்றைய ரேசிலும் உள்ளூர் நாயகன் ஹாமில்டனே ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. நேற்று நடந்த தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்ததால் இன்றைய போட்டியில் அவரது கார் முதல் வரிசையில் இருந்து புறப்படும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
    இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டு காதலை வெளிப்படுத்தினர்.

    அதன்பின் லாக்டவுன் காலத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. புகைப்படம் வெளியானபோதுதான் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா- நடாசா ஸ்டான்கோவிச் தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பாண்ட்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
    இனிமேல் விதிகளை மீற மாட்டேன் எனத் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் இருந்தார்.

    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சஞ்சய் மஞ்ச் ரேக்கர் கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

    ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பி.சி.சி.ஐ. விதிப்படி நடந்து கொள்கிறேன். இனிமேல் ஒருபோதும் விதிகளை மீற மாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன். 

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் தொடர்பாக கங்குலி விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×