என் மலர்tooltip icon

    விளையாட்டு

    என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்சங் குற்றச்சாட்டில் பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

    பின்னர் நீதிமன்றத்தால் அவரது தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தலைவராக உள்ளார்.

    இந்தநிலையில், அவர் பேட்டி ஒன்றில் தனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை எனக் கூறி உள்ளார்.

    இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில், ‘‘நடந்த சம்பவங்கள் குறித்து நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியாது.

    நான் போராட முடிவு செய்தேன். 12 ஆண்டுகள் கழித்து இதில் இருந்து விடுபட்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். பிசிசிஐ ஏஜிஎம் கூட்டத்தில் கூட கலந்து கொண்டேன்.

    நான் 16 முதல் 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். இதைவிட அதிகமாக நான் என்ன கேட்க முடியும். கிரிக்கெட் பயணம் தனக்கு திருப்தி அளித்தது’’ என்றார்.

    முகமது அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 99-வது டெஸ்ட் போட்டிதான் அவரின் கடைசி போட்டியாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னால் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என்பது குறித்து தான் கவலை அடையவில்லை என்றும் கூறினார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.
    சிட்னி:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனாவின் கோரதாண்டவத்தால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் நடக்கவில்லை. இதனால் அமெரிக்க ஓபன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஒருவித கலக்கத்தில் உள்ளனர். ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 24 வயதான ஆஷ்லி பார்ட்டி கூறுகையில், ‘நானும், எனது அணியினரும் சின்சினாட்டி ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிக்காக இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். அமெரிக்க ஓபன் மற்றும் சின்சினாட்டி இரண்டும் எனக்கு பிடித்தமான போட்டிகள். ஆனால் கொரோனா காரணமாக அங்கு சென்று விளையாடுவதில் குறிப்பிடத்தக்க அபாயம் இன்னும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு அமெரிக்க ஓபனில் ஆடுவதை எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன்’ என்றார்.

    ஏற்கனவே விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) ஆகியோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். அதே சமயம் முன்னாள் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அமெரிக்க ஓபனில் களம் இறங்க இருப்பதாக அவரது குழுவினர் தரப்பு தெரிவித்துள்ளது.

    இதே போல் முதலில் தயக்கம் காட்டிய ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), சிட்சிபாஸ் (கிரீஸ்), டேனில் மெட்விடேவ் (ரஷியா) உள்ளிட்டோர் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆகஸ்டு 22-ந்தேதி தொடங்கும் சின்சினாட்டி ஓபனில் விளையாட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அமெரிக்க ஓபனிலும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது.
    சவுத்தாம்ப்டன்:

    அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்துஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, அயர்லாந்து அணி களமிறங்கியது. 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 59 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.கடைசி கட்டத்தில் மெக் பிரின் 40 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில் அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் வில்லே 5 விக்கெட்டும், சாகிப் முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணி முதலில் இருந்தே அடித்து ஆடத் தொடங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் வீழ்ந்தன.

    சாம் பில்லிங்சும், இயன் மார்கனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சாம் பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னுடனும், இயன் மார்கன் 36 ர்ன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. வில்லே ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை விட எம்எஸ் டோனிதான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    கொரோனாவில் இருந்து குணமடைந்த அப்ரிடி டுவிட்டரில் ரசிகர்களுடனான கேள்வி-பதில் உரையாடலின் போது கூறுகையில் ‘‘அவரிடம் ரசிகர் ஒருவர் பாண்டிங் மற்றும் டோனியில் யார் சிறந்த கேப்டன் என கேட்டதற்கு, எனக்கு தெரிந்தவரை டோனிதான் சிறந்த கேப்டன். ஏனென்றால் அவர் இளம் வீரர்கள் அடங்கிய அணியை கட்டமைத்து வழி நடத்தினார்.

    அப்ரிடி

    ஆனால் பாண்டிங் விஷயத்தில் ஸ்டீவ் வாக்தான் ஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார். அந்த அணியை தான் பாண்டிங் வழி நடத்தினார். அதனால் டோனியா? பாண்டிங்கா? என வரும்போது டோனிதான் சிறந்தவர்’’என பதில் அளித்தார் அப்ரிடி.
    ஹர்திக் பாண்ட்யா - செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டு காதலை வெளிப்படுத்தினர்.

    மனைவியுடன் ஹர்திக் பாண்ட்யா

    அதன்பின் லாக்டவுன் காலத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. புகைப்படம் வெளியானபோதுதான் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில் இன்று மதியம் 3.45 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ந்தேதிக்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
    இந்தியாவில் மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

    அணி நிர்வாகம், பங்குதாரர்கள், ஒளிபரபப்பு நிறுவனம் ஆகியவை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐபிஎல் நிர்வாகம் அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டியை 19-ல் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது.

    ஆனால் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தீபாவளி நவம்பர் 14-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் பண்டிகை வாரத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. இதனால் தீபாவளிக்கு முந்தைய சில தினங்களுக்கு முன்பு வரை போட்டியை நடத்த வலியுறுத்தியது.

    நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும். தற்போது ஸ்டார் நிறுவனம் கேட்டுக்கொண்டதன்படி ஐபிஎல் போட்டியை இரண்டு நாட்கள் நீட்டிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் நவம்பர் 10-ந்தேதி செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10-ந்தேதி அதிகாரப்பூர்வமாக இறுதிப் போட்டி நடைபெறும் என்றால் முதன்முறையாக  ஞாயிற்றிக்கிழமை அல்லாத தினத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும்.

    ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட இருக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இரண்டு வாரத்தில் நான்கு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
    ஐபிஎல் 2020 தொடரில் ஆட உள்ள வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகளின் பணியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது பிசிசிஐ. இரண்டு வார காலத்தில் வீரர்களுக்கு நான்கு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதேபோல, உயிர் பாதுகாப்பு சுழலுக்குள் வந்து விட்ட யாரும் மீண்டும் வெளியே சென்று விட்டு, உள்ளே வர முடியாது.

    2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ களமிறங்கி உள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில்தான் ஐபிஎல் தொடரை நடத்த முடியும் என்ற நிலையில் இருந்தது பிசிசிஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2014 ஐபிஎல் தொடரின் சில போட்டிகள் நடைபெற்று இருந்ததால், அதே நாட்டில் 2020 ஐபிஎல் தொடரையும் நடத்த முடிவு செய்துள்ளது.

    2020 ஐபிஎல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற பிசிசிஐ முயற்சித்து வருகிறது, மறுபுறம் ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் தொடரை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யத் துவங்கி உள்ளது.

    பயோ பபுள் எனும் உயிர் பாதுகாப்பு சுழல் ஏற்படுத்தப்படும். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பேருந்து ஓட்டுனர் வரை அனைவரும் அதை விட்டு விலகக்கூடாது.

    ஒருவேளை யாரேனும் உயிர் பாதுகாப்பு சுழலை விட்டு விலகினால் அவர்களை மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் அனுமதிக்க முடியாது எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது வீரர்களுடன் பயணிக்கும் மனைவி, காதலி அல்லது குடும்பத்தினருக்கும் பொருந்தும்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன். 

    இப்போது அவர் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    டென்னிசில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக சுவிட்சர்லாந்து ஜாம்பவான் பெடரர் கூறியுள்ளார்.
    ஷூரிச்:

    டென்னில் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்த சாதனையாளர் ஆவார்.

    சில மாதங்களுக்கு முன்பு வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பெடரர் இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் களம் திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் 38 வயதான பெடரர் ஓய்வு கட்டத்தை நெருங்கி விட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

    தற்போது தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பெடரர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் இறுதி கட்டத்தில் இருப்பதை அறிவேன். அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன். ஆனால் இப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எப்போது தளர்வடைகிறேனோ அப்போது விளையாடுவதை நிறுத்தி விடுவேன். டென்னிசை பொறுத்தவரை வயதானாலும் நிச்சயம் விளையாட முடியும். ஆனால் தொடர்ந்து கடின பயிற்சியில் ஈடுபட முடியாது.

    ஒலிம்பிக் போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி டோக்கியோவில் நடக்கும் என்று நம்புகிறேன். இதில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றார்.பெடரர் ஏற்கனவே 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் ருசித்து இருக்கிறார். அனேகமாக அவர் அடுத்த ஆண்டுடன் டென்னில் இருந்து விடைபெறுவார் என்று தெரிகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான் என்று இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ்ரெய்னா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான் என்று நான் சொல்வேன். அவரது செயல்பாடுகளை நான் பார்த்து இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை கேட்கக்கூடியவர். சக வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் விருப்பம் கொண்டவர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக தானே முன்னின்று அணியை வழிநடத்துவதை விரும்பக்கூடியவர். அணியை முன்னின்று நடத்தும் அதேநேரத்தில் வீரர்களின் ஓய்வறை சூழலுக்கும் மதிப்பு அளிப்பவர். அப்படி செயல்படும் போது நீங்கள் எல்லாம் கிடைத்தது போன்று உணருவீர்கள். அவர் எல்லோரையும் ஒரு கேப்டனாக நினைப்பார். அவரது கேப்டன்ஷிப் தன்மையை நான் பார்த்து இருக்கிறேன்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது அணி கோப்பையை வென்றபோது அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி உள்ளேன். இளம் வீரர்களான ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை அளித்தார் என்பதை பார்த்து இருக்கிறேன். டோனிக்கு அடுத்து முன்னணி வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா விளங்குகிறார். டோனி புத்திசாலியான கேப்டன். ஆனால் டோனியையும் விட அதிக ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார்.

    இருவருடைய கேப்டன்ஷிப் பண்பும் ஒரே மாதிரி தான் இருக்கும். இருவருமே மற்றவர்களின் கருத்தை கவனிக்கக்கூடியவர்கள். உங்கள் கேப்டன் மற்றவர்கள் சொல்வதை கவனித்தாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்துடன் வீரர்களின் மனரீதியான பிரச்சினையை சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் இருவரும் அற்புதமான கேப்டன்கள்.

    இவ்வாறு ரெய்னா கூறினார்.
    சூதாட்ட புகாருக்கு ஆளான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலின் தண்டனை குறைக்கப்பட்டது.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான உமர் அக்மலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியின்போது சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்டு சூதாட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ஆசைவார்த்தை கூறியதை அவர் கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கவில்லை.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது சூதாட்ட தரகர்கள் தன்னை 2 முறை அணுகியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் நடவடிக்கை எடுத்தது.

    தடையை எதிர்த்து உமர் அக்மல் அப்பீல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து நேற்று உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து உமர் அக்மல் கூறுகையில், ‘எனக்கு முன்பு பல வீரர்கள் இதுபோல் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் என்னை போல் கடுமையான தண்டனை அளிக்கப்படவில்லை. எனது தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என்று மீண்டும் அப்பீல் செய்வேன்’ என்றார். 30 வயதான அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 84 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

    பயோ-செக்யூர் வளையத்திற்குள் சிறிய அணிகளால் போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிய பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.

    இந்தத் தொடர் மிகவும் எளிதாக நடந்துவிடவில்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பாதுகாப்பான இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நெகட்டிவ் முடிவு வந்த பின்னர் அணி வீரர்கள் ஒன்றாக பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோ-செக்யூர் வளையத்தை உருவாக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இந்த வளையத்தை விட்டு எக்காரணம் கொண்டும் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் தனிமைப்படுத்திக் கொண்டு இரண்டு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி மிகவும் வசதியான போர்டு என்பதாலும், மான்செஸ்டர் போன்ற மைதானங்களில் அருகிலேயே ஓட்டல் அமைந்திருப்பதாலும் வசதியாக அமைந்தது. இதனால்தான் அயர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுடன் அடுத்தடுத்து போட்டிகளை நடத்த இருக்கின்றன.

    இந்நிலையில் எங்களை போன்று சிறிய கிரிக்கெட் போர்டுகளால் இதுபோன்று போட்டிகளை நடத்த முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘விரைவில் ஏதாவது அற்புதம் நடைபெறாவிட்டால், சிறிய நாடுகளில் குறைவான போட்டிகளை மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால், அவர்களால் பயோ-செக்யூர் கொடுக்க முடியாது. நாங்கள் தற்போது நான்கு அல்லது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்ளை நடத்தி வருகிறோம். அது இரண்டு அல்லது மூன்றாக குறைந்துவிடும்.

    வெஸ்ட் இண்டீசில் அதிகப்படியாக போட்டிகளை நடத்துவது மிகவும் கடினமானது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. இதை சந்தித்தாக வேண்டும். இது தொடர்பான அதிகாரிகள் உட்கார்ந்து பேசுவது அவசியம்.

    கொரோனா தொற்றுக்கு முன்பு கூட ஐசிசி அளவிலான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளுக்குத்தான் வருமானம் அதிகமாக கிடைக்கும் அளவில் இருந்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து போன்ற அணிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடின. அந்த மூன்று நாடுகளுக்கு எதிராக போட்டிகளை நடத்துவதில் இருந்து வரும் வருமானம்தான எங்களை மிகப்பெரிய அளவில் சார்ந்திருந்தது.

    நாங்கள் உண்மையிலேயே இங்கிலாந்திடம் இருந்து பணத்தை பெறுகிறோம். அதன்பிறகு இந்தியாவிடம் இருந்து என்று நினைக்கிறேன். பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஓரளவு பணம் கிடைக்கும். மற்றநாடுகளுடன் நடைபெறும்போது எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தற்போதைய நிலையில் போட்டியை நடத்த முயற்சிக்க முடியும்.

    கிரிக்கெட் போட்டியை நடத்த சிறிய பிராந்தியங்கள் போராடி வருகின்றன. இந்த வருடத்திற்கு முன் இங்கிலாந்து கரீபியன் வந்தால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு நிதியளவில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டிற்கு இன்னும் இரண்டு காலம் மிகவும் கடினமானது. நாங்கள் மிகப்பெரிய அளவில் சம்பளம் பிடித்தத்தில் உள்ளோம். அதனால் 2020-க்கு முன் தொடர் நடைபெற வாய்ப்பிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.’’ என்றார்.
    ×