என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பாகிஸ்தான் சென்று விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் காலத்திலும் உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று விளையாடி வருகிறது. இதற்கு நன்றிக்கடனாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்புகிறேன் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘நான் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன். அங்கு சென்று விளையாடுவது சிறந்த வாய்ப்பாகும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. துரதிருஷ்டவசமாக என்னால் முடிவு எடுக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதற்கும், அங்கு செல்வதற்கும் சிறந்த நாடு பாகிஸ்தான்’’ என்றார்.
    பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார்.
    பார்சிலோனா:

    ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் குயிக் சேட்டின் கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா அணி 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் பணிந்தது. கடந்த 74 ஆண்டுகளில் பார்சிலோனா அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    புதிய பயிற்சியாளராக நெதர்லாந்து முன்னாள் வீரர் 57 வயதான ரொனால்டு கோமேன் நியமிக்கப்படுகிறார். தற்போது நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரொனால்டு கோமேன் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன் ரொனால்டு கோமேன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். 2020-21-ம் ஆண்டு கால்பந்து சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும், மூத்த வீரர் லூயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அந்த அணியை விட்டு விலக விரும்புவதாக மீண்டும் தகவல்கள் கசிந்துள்ளன.
    ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகிய நிலையில், ட்ரீம் லெவன் நிறுவனம் அதை கையகப்படுத்தியுள்ளது.
    உலகளவில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்தப் போட்டிகளின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டிவந்தன.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

    லடாக் எல்லை மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்த விவகாரத்தில், இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதை தொடர்ந்து  ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக சீனாவின் விவோ நிறுவனம் அறிவித்தது. அதனையடுத்து, டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்துவந்தது.

    இந்தநிலையில் பி.சி.சி.ஐ நடத்திய ஏலத்தில் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.
    சச்சின் தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வான்கடே மைதானத்தில் முடித்ததுபோல், எம்.எஸ். டோனி சென்னை சேப்பாக்கத்தில் முடிப்பார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு அறிவித்தார். பிசிசிஐ அவருக்கு விடைபெறுதல் போட்டி (Farewell Game) நடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் பிசிசிஐ-யிடம் கோரிக்கையும் வைக்கவில்லை.

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். அவரது கடைசி போட்டி எங்கே நடக்கும் என்பதை விவிஎஸ் லக்‌ஷ்மண் விவரித்துள்ளார்.

    எம்எஸ் டோனியின் கடைசி போட்டி குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி எம்.எஸ் டோனி பேரார்வமாக உள்ளார். இதை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும். எம்.எஸ். டோனி தலைமையில் மிகவும் வெற்றிகரமான அணியாக அது இருந்து வருகிறது.

    அந்த அணி கோப்பையை வெல்ல முடிந்த அளவிற்கு அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்வார். ஆனால் ரசிகர்களைப் பொருத்தவரை, பரவசம் காணப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    தற்போது வரை அவர் கிரிக்கெட் போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சிஎஸ்கே அணியின் கேப்டன் இருக்கிறார். எம்.எஸ். டோனி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார். அவருடைய ஒவ்வொரு நகர்வையும் அவருடைய ரசிகர்கள் ரசிப்பார்கள். கிரிக்கெட் மைதானத்தில் டோனி செலவழிக்கும் தருணத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடும் கடைசி போட்டியே அவருடைய விடைபெறுதல் போட்டியாகும். சச்சின் தெண்டுல்கர் வான்கடேவில் விடைபெறுதல் போட்டியில் விளையாடினார். அதேபோல் சென்னையில் எம்.எஸ். டோனியின் விடைபெறுதல் போட்டி இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் டோனியின் கடைசி போட்டி நடைபெறும்போது பார்ப்பார்கள்’’ என்றார்.
    2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூறும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. வெற்றிக்கான ரன்னை இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் மூலம் அடித்தார்.

    டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்று. 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பின்னர், டோனி வாங்கிய 50 ஓவர் உலக கோப்பை இதுவாகும். 1983-ம் ஆண்டுக்குப்பின் சுமார் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

    தற்போது டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரை நினைவுகூறும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்க உயர்மட்ட கவுன்சில் உறுப்பினர் அஜிங்க்யா நாய்க் டோனி பெயரில் நிரந்தர இருக்கை அமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

    அஜிங்க்யா நாய்க் அந்த கடிதத்தில் ‘‘கிரிக்கெட்டில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ள எம்எஸ் டோனிக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த கடைசி சிக்ஸ் பந்து எந்த சீட்டில் விழுந்ததோ, அந்த சீட்டிற்கு நிரந்தரமாக டோனியின் பெயரை சூட்ட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கொல்கத்தாவில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கொரோனா காரணமாக லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த 2-வது மற்றும் 3-வது போட்டிகள் கைவிடப்பட்டு தொடர் ஒத்தி்வைக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதி ஆதாரத்தை இழந்துள்ளது. போட்டி ரத்து செய்யபட்டதால் உ.பி. கிரிக்கெட் சங்கமும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை ஈடுசெய்யும் வகையில் அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்போது ஒரு போட்டியை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இரண்டு சங்கங்களும் ஈடுசெய்து கொள்ள முடியும் என பிசிசிஐ-க்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கும்படி தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகும். அதற்கு அடுத்தபடியாக வீரர்-வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன. 

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், குத்துச்சண்டை வீரர்கள் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. 

    இந்த பரிந்துரைகளை தேர்வுக்குழு ஆய்வு செய்து, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்துள்ளது.

    இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்களையும் தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. 
    கொரோனா காலத்திற்கிடையில் இரண்டரை மாதம் இங்கிலாந்தில் தங்கி விளையாடிய பாகிஸ்தானுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் முயற்சியால் ஜூலை 8-ந்தேதி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பயோ-செக்யூர் பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு போட்டி வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

    அதன்பின் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இரண்டு அணிகளும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்றது. அங்கு 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அதன்பின் கொரோனா பரிசோதனைக்குப்பின் பயிற்சி மேற்கொண்டன.

    கொரோனா காலத்தில் வீரர்களின் உயிர்களை பணயம் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விளையாட சம்மதம் தெரிவித்தது.

    இதற்கு நன்றிக்கடனாக 2022-ல் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘கொரோனா காலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது. பயோ-செக்யூர் சூழ்நிலையில் சுமார் இரண்டரை மாதங்கள் இருந்துள்ளனர்.

    ஆகவே, எல்லாமே சரியாக சென்றால் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் அவர்ளுடைய சொந்த மைதானத்தில் விளையாடிய போன்று உணர்வார்கள் என்பதை என்னால் உறுதிப்பட கூற இயலும்.

    அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்று விளையாடினார்கள். அவர்கள் விரும்பி, மகிழ்ச்சியாக விளையாடினர். அவர்கள் சிறப்பானதாக உணர்ந்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அரசு, பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள், அவர்களுடைய ஸ்டாஃப்களுக்கு நான் பாராட்டு தெரிவித்தாக வேண்டும்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆறுமாத கால ஓய்வு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என ரபடா தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா. தென்ஆப்பிரிக்கா கடந்த மார்ச் மாதம் ஒருநாள் கிரிக்கெட் அணி இந்தியா வந்திருந்தபோது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தொடர் பாதிலேயே நிறுத்தப்பட்டடு தென்ஆப்பிரிக்க வீரர்கள் அவசரமாக சொந்த நாடு திரும்பினர்.

    அதில் இருந்து தற்போது வரை அவர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ரபடா விளையாட இருக்கிறார்.

    கொரோனா தொற்று காரணமாக கிடைத்த இந்த ஆறு மாத ஓய்வை மிகவும் மிகிழ்ச்சகரமாக அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரபடா கூறுகையில் ‘‘இந்த விடுமுறையை மிகவும் மிகவும் மகிழ்ச்சிகரமாக செலவழித்தேன். ஐந்து வருடம் ஓய்வில்லாமல் விளையாடியதால், வீட்டில் இருப்பதை விரும்பினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மீண்டும் களம் திரும்ப ஆர்வம் காட்டவில்லை. ஆனால், எப்போதுமே விளையாட்டு வீரராகிய நாம், சிறந்த போட்டியாளர்கள். ஒருமுறை ஆட்டத்திற்கு திரும்பிவிட்டால் வழக்கமாக ஆட்டம் வெளிப்படும்.

    ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக நான் துபாய் செல்ல ஆர்வமாக உள்ளேன். 2014-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாட அங்கு சென்றேன். எப்போதுமே மீண்டும் அங்கு செல்ல நான் விரும்புவேன்’’ என்றார்.
    டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிசின் இறுதி போட்டியில், அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி சாம்பியன் பட்டம் பெற்றார்.
    அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    இதில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியின் இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும், சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மனும் மோதினர்.

    இதில், ஜெனிபர் பிராடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டீச்மனை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை சுரேஷ்ரெய்னா அனுப்பி இருக்கிறார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்த சில நிமிடங்களில் அவரது நண்பரும், இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ்ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

    டோனி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டு தனது ஓய்வு முடிவை பகிரங்கப்படுத்தினார். ஆனால் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஓய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார். ஓய்வை வெளிப்படையாக அறிவித்ததற்கு அடுத்த நாள் தான் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பி இருக்கிறார்.

    ஓய்வு அறிவிக்கும் முன்பு வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இடக்கை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஞாயிற்றுக்கிழமை (சனிக்கிழமை ஓய்வு பெற்றார்) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வாக அனுப்பி வைத்தார். அவரது தலைமையில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ‘டோனி விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம்’ என்று என்.சீனிவாசன் தெரிவித்தார்.
    சென்னை:

    2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்று கொடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியவரான 39 வயது டோனி கடந்த சனிக்கிழமை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் மவுனம் காத்து வந்த அவரின் திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    டோனி


    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் மோசமான தோல்வி காரணமாக அடுத்து வந்த தொடரில் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க தேர்வாளர் ஒருவர் முயற்சி செய்ததாகவும் அதனை தான் தடுத்தி நிறுத்தியதாகவும் அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நமது அணி சிறப்பாக விளையாடவில்லை. எனவே தேர்வாளர் ஒருவர் டோனியை ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பினார். டோனியை எப்படி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நமது அணி அவரது தலைமையில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    டோனிக்கு பதிலாக யாரை கேப்டனாக தேர்வு செய்வது என்பது குறித்து கூட தேர்வு குழுவினர் சிந்திக்கவில்லை. இது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்வு குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக டோனியை அணியில் ஒரு வீரராக மட்டும் தேர்வு செய்ய வழியில்லை என்று நான் தெரிவித்தேன். தேர்வு குழு கூட்டத்தில் டோனியை கேப்டனாக தேர்வு செய்ய தேர்வாளர்கள் மறுக்கிறார்கள் என்று வாரியத்தின் செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தலே எனக்கு தகவல் தெரிவித்தார். அணியில் ஒரு வீரராக தேர்வு செய்ய மட்டுமே சம்மதிப்பதாக கூறினார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி டோனி கேப்டனாக இருப்பார் என்று முடிவெடுக்க வைத்தேன்.

    டோனி விரும்புகிற காலம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். போட்டியை தவிர்த்து வேறு எதனை பற்றியும் ஒருபோதும் டோனி சிந்திக்காதது தான் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாகும். அந்த கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×