என் மலர்
விளையாட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையை வென்ற போது ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
தற்போது 20 வயதாகும் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கவுதம் கம்பிர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். கடந்த முறை முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்ற பெற்ற போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
இதனால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்தான் கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘ஷுப்மான் கில் திறமையான, சிறந்த வீரர். அவர் குறைந்த பட்சம் சில திறன்களில் தலைமை பொறுப்பில் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார். அவர் இளம் வீரராக இருந்தாலும் கூட, நீண்ட நாட்களாக விளையாடினால்தான் சிறந்த கேப்டனாக முடியும் என்பதை நான் நம்புகிறவன் அல்ல. இது ஒரு தலைவரின் நடத்தைகளை வெளிப்படுத்துவதாகும். இந்த தொடர் முழுவதும் அவருக்கு தலைமை பொறுப்புகளில் சிலவற்றை வழங்க இருக்கிறோம்.
தினேஷ் கார்த்திக்கை சற்று மாறுபட்ட பகுதியாக பிரித்து பார்க்க வேண்டும். நான் முதன்மையாக விக்கெட் கீப்பிங் பணியை நினைக்கிறேன். இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் அவரும் ஒருவர்’’ என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளைமறுதினம் (ஆகஸ்டு 21-ந்தேதி) நடக்கிறது.
அதன்பின் 28-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.
டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. இயன் மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. டாம் பாண்டன், 5. சாம் பில்லிங்ஸ், 6. டாம் கர்ரன், 7. ஜோ டென்லி, 8. லீவிஸ் கிரேகோரி, 9. கிறிஸ் ஜோர்டான், 10. சாஹிப் மெஹ்மூத், 11. தாவித் மலன், 12. அடில் ரஷித், 13. ஜேசன் ராய், 14. டேவிட் வில்லே.
கரீபியன் பிரிமீயர் லீக் முதல்நாள் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடஸ் அணியும், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியும் வெற்றி பெற்றன.
கரீபியன் பிரிமீயர் லீக் நேற்று தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
முதல் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டிரின்பாகோ டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டது.
தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (0), சந்தர்பால் ஹேம்ராஜ் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹெட்மையர் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 63 ரன்கள் அடித்தார். ராஸ் டெய்லர் 21 பந்தில் 33 ரன்கள் அடித்தார். இதனால் கயானா 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரைன் 28 பந்தில் 50 ரன்கள் விளாச 16.4 ஓவரில் 147 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் பார்படோஸ் டிரிரென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. கே. மேயர்ஸ் 37 ரன்னும், ஹோல்டர் 22 பந்தில் 38 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது.
154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணி விக்கெட்டை இழக்காவிடிலும் ரன்கள் குவிக்க இயல திணறியது. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ட்ரீம் லெவன் 2020 சீசனுக்கு மட்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லடாக் மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியது.
இதனால் ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு விண்ணப்பம் கோரி வெற்றி பெற்றது. பிசிசிஐ 2021 மற்றும் 2022 சீசனுக்கும் சேர்த்தும் ஏலம் கேட்க ட்ரீம் லெவன்-ஐ வலியுறுத்தியது. ஆனால் வருடத்திற்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் ட்ரீம் லெவன் வழங்க மறுத்துவிட்டது.
ஆனால் வருடத்திற்கு 440 கோடி ரூபாய் விவோவிடம் இருந்து வாங்கிய பிசிசிஐ 240 கோடி ரூபாயை ஏற்க ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால் இந்த வருடத்திற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் மட்டும் ட்ரீம் லெவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தன்னுடைய முதல் கார் ‘மாருதி 800’ மீண்டும் தன்னிடம் வந்து சேர, ரசிகர்கள் உதவியை நாடியுள்ளார் சச்சின் தெண்டுல்கர்.
இந்திய கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டில் 100 சதங்கள், அதிக ரன்கள் என பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் மூலமும், தனிப்பட்ட முறையிலும் ஏராளமான கார்களை பெற்றுள்ளார். ஆனால், முதன்முதலாக வைத்திருந்த மாருதி 800 கார் மீது சச்சினுக்கு அதிக பிரியம். தற்போது அந்த கார் அவரிடம் இல்லையாம். இந்த காரைப் பற்றி தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்தவும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘என்னுடைய முதல் கார் மாருதி 800. துரதிருஷ்டவசமாக தற்போது அது என்னிடம் இல்லை. மீண்டும் அது என்னுடைய இருக்க நான் மிகவும் விரும்புகிறேன். ஆகவே, அந்த கார் குறித்த தகவல்கள் தெரிந்த நபர்கள் தொடர்பு கொள்ளலாம்.
எங்கள் வீட்டின் அருகே மிகப்பெரிய திறந்தவெளி தியேட்டர் இருந்தது. மக்கள் காரை பார்க் செய்துவிட்டு, காரில் இருந்தே படத்தை பார்ப்பார்கள். நான் எனது சகோதரருடன் இணைந்து எங்களுடைய பால்கனியில் இருந்து அந்த கார்களை பார்ப்போம்’’ என்றார்.
ட்ரீம் லெவன் இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் ஸ்பான்சர் ஆகவில்லை என்றும், மேலும் 2 வருடத்திற்கு ஏலம் கேட்க பிசிசிஐ விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியது.
இதனால் புதிய டைட்டில் ஸ்பான்சருக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அதில் எவ்வளவு பணம் என்று தெரிவிக்க தேவையில்லை. விருப்ப மனுவை பெற்றுக் கொண்டு அதற்கு பின் தொகை அறிவிப்பது குறித்து வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ட்ரீம் லெவன், டாட்டா, பதஞ்சலி உள்ளிட்ட பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் நேற்று ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு டைட்டில் ஸ்பான்ஸ்சருக்கு கோரியிருந்ததாகவும், இதுதான் அதிகப்படியானது என்பதால் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை பெற்றதாக செய்திகள் வெளியாகின.
விவோ ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு தலா 440 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.
தற்போது விவோ விலகியுள்ளது. போட்டிக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளதால் ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளது. விவோ வழங்குவதை இது பாதி தொகையாகும்.
ஆனால் பிசிசிஐ மேலும் இரண்டு வருடத்திற்கு சேர்த்து ஏலம் கேட்க வேண்டும் என விரும்புகிறது. 222 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு என்பதில் பிசிசிஐ-க்கு விருப்பம் இல்லை.
ஒருவேளை அடுத்த வருடமும் விவோ வர முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என பிசிசிஐ யோசிக்கிறது. அதேவேளையில் விவோ இல்லை என்றால் அடுத்த இரண்டு வருடத்திற்கு தலா 240 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக ட்ரீம் லெவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
240 கோடி என்பது மிகவும் குறைவு என்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு கூறுகையில் ‘‘அதிகத் தொகைக்கு விண்ணப்பம் கோரியவருக்குத்தான் டைட்டில் உரிமை என்பது கிடையாது என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். ட்ரீம் லெவன் அதிகத் தொகைக்கு ஏலம் கேட்டுள்ளது. இன்னும் அதற்குத்தான் வாய்ப்புள்ளது. சில பிரச்சினைகள் உள்ளது. அவைகள் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.
இதற்கிடையே, ட்ரீம் லெவன் நிறுவனத்திலும் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு பங்கு உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
டோனியின் ஓய்வு முடிவு அறிவிப்பு நெஞ்சை பிளந்தது போன்று இருந்தது, அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை அளிக்க விரும்பினோம் என கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
டோனிக்கு ஓய்வைத் தொடர்ந்து ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கான விக்கெட் கீப்பர் போட்டியில் முன்னணியில் இருப்பவர் கே.எல். ராகுல். அடுத்த இடத்தில் ரிஷப் பண்ட் உள்ளார்.
இந்நிலையில் டோனியின் ஓய்வு தன்னை உலுக்கியதாகவும், இதயம் பிளந்தது போன்று இருந்ததாகவும் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எல். ராகுல் கூறுகையில் ‘‘எம்.எஸ். டோனியின் ஓய்வு முடிவு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் உண்மையிலேயே இதயம் பிளந்தது போன்று உணர்ந்தேன். அணியில் உள்ள எல்லோரும் அல்லது அவருடன் விளையாடி வீரர்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை அளிக்க விரும்பினோம் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். இன்னும் ஒரு போட்டியில் அவர் விளையாட விரும்பினால், அவருக்கு சிறப்பாக ஏதாவது செய்ய வாய்ப்பாக அமைந்திருக்கும்.
எங்களை அவர் மிகவும் நன்றாக வழி நடத்தினார். அவர் எங்களிடம் விளையாடுங்கள். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துங்கள், தவறுகள் நடந்தால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்பார்.
எங்களுக்கு எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டால், ஏதாவது விடை கிடைக்க ஒருவரை அணுக வேண்டுமென்றால், அவர் எப்போதுமே அங்கே இருப்பார். வீரர்களை எப்போது கொண்டு வர வேண்டும் என்பது அவருக்கும் தெரியும்.
அவரது ஓய்வு குறித்து அறிந்ததும் வார்த்தையே வரவில்லை. அதாவது, அவர் எவ்வளவு செய்துள்ளார்? எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியுள்ளார், அவரால் எவ்வளவு பேர் உத்வேகம் அடைந்துள்ளார். ஆடுகளத்தில் மட்டுமல்ல, ஆடுகளத்திற்கும் வெளியே சாதனைகள் படைத்துள்ளார். இப்படிபட்ட ஒருவரை பற்றி என்ன சொல்வீர்கள்?’’ என்றார்.
எந்தவித நெருக்கடியும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட இருக்கும் டோனிக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பதான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட இருக்கிறார்.
சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.
ஆகவே, டோனி முழு உத்வேகத்துடன் இருப்பார். பந்து விச்சாளர்கள் ஜாக்கிரதை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் விளையாட வரும்போது, அனைத்து பந்து வீச்சாளர்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி போன்றவர்களுக்கு பந்து வீச விரும்பமாட்டார்கள். ஏனென்றால், டோனி முழு உத்வேகத்துடன் உள்ளார்.
உண்மையிலேயே நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து பந்து வீச்சாளர்களும் கவனமாக இருக்க வேண்டும். டோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது மிகவும் அனுபவித்து விளையாடுவார். ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 416 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 134.63 ஆகும். இதுவரை 190 போட்டிகளில் விளையாடி 4432 ரன்கள் அடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். டி020 லீக்கை பிசிசிஐ நிறுத்தக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
நாளை மறுதினம் வீரர்கள் துபாய் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் போட்டி வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு பொருளாதாரம், வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் பிசிசிஐ தொடரை நிறுத்த வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் லகூ என்பவர் தனது மனுவில் ‘‘ஐபிஎல் அறக்கட்டளை நிகழ்ச்சி கிடையாது. கொரோனா தொற்று அனைத்து தொழில்துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியை இந்தியாவில் நடத்தினால், பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். நாட்டிற்கு தற்போது இதுதான் மிகவும் அவசியமானது’’ என்று தெரிவித்துள்ளார்.
2021 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் டோனியால் அதை மறுக்க முடியாது என்று அக்தர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் டோனி ஓய்வு முடிவை விரைவில் அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டோனியின் ஒய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “டோனிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. அவர் 2021 டி-20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருந்தாலும் ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு.
இந்திய பிரதமர் மோடி தோனியிடம், 2021 டி-20 உலகக் கோப்பை வரை விளையாடலாம் என்று கோரிக்கை வைக்கலாம். அப்படி மோடி கோரிக்கை வைத்தால் அதை டோனியால் மறுக்க முடியாது. இதுபோன்று நிகழ்வுகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. டோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம்“ என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
2023-ல் இந்தியாவில் நடைபெறும் 50 உலக கோப்பையின் இறுதி போட்டிதான் கிரிக்கெட்டில் தன்னுடைய கடைசி தேதி என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் உள்ளார். இவர் சிறந்த தொடக்க வீரராவார். 33 வயதான இவர் நீண்ட காலமாக விளையாடுவாரா? என்ற சந்தேகம் கூட எழுந்துள்ளது.
ஆனால் 2023-ல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலக கோப்பையின் இறுதிப் போட்டிதான் அவரடைய கிரிக்கெட்டில் இறுதி தேதியாக இருக்கும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலககோப்பையின் இறுதி போட்டிதான் என்னுடைய கடைசி தேதியாகும். அதுதான் என்னுடைய இலக்கு. அதில் உறுதியாக இருக்கிறேன்.
அது நீண்ட காலம்தான். இருந்தாலும், என்னால் அந்த காலத்தை உறுதி செய்யமுடியும். அப்போது எனக்கு 36 வயதாகும். ஃபார்ம், காயம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும்’’ என்றார்.
இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பாகிஸ்தான் சென்று விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காலத்திலும் உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று விளையாடி வருகிறது. இதற்கு நன்றிக்கடனாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்புகிறேன் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘நான் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன். அங்கு சென்று விளையாடுவது சிறந்த வாய்ப்பாகும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. துரதிருஷ்டவசமாக என்னால் முடிவு எடுக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதற்கும், அங்கு செல்வதற்கும் சிறந்த நாடு பாகிஸ்தான்’’ என்றார்.






