search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ட்ரீம் லெவன்
    X
    ட்ரீம் லெவன்

    ட்ரீம் லெவன் இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் ஸ்பான்சர் ஆகவில்லை: மேலும் 2 வருடத்திற்கு கேட்கச் சொல்கிறது பிசிசிஐ

    ட்ரீம் லெவன் இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் ஸ்பான்சர் ஆகவில்லை என்றும், மேலும் 2 வருடத்திற்கு ஏலம் கேட்க பிசிசிஐ விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லடாக் மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியது.

    இதனால் புதிய டைட்டில் ஸ்பான்சருக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அதில் எவ்வளவு பணம் என்று தெரிவிக்க தேவையில்லை. விருப்ப மனுவை பெற்றுக் கொண்டு அதற்கு பின் தொகை அறிவிப்பது குறித்து வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ட்ரீம் லெவன், டாட்டா, பதஞ்சலி உள்ளிட்ட பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன.

    இந்நிலையில் நேற்று ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு டைட்டில் ஸ்பான்ஸ்சருக்கு கோரியிருந்ததாகவும், இதுதான் அதிகப்படியானது என்பதால் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை பெற்றதாக செய்திகள் வெளியாகின.

    விவோ ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு தலா 440 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.

    தற்போது விவோ விலகியுள்ளது. போட்டிக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளதால் ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளது. விவோ வழங்குவதை இது பாதி தொகையாகும்.

    ஆனால் பிசிசிஐ மேலும் இரண்டு வருடத்திற்கு சேர்த்து ஏலம் கேட்க வேண்டும் என விரும்புகிறது. 222 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு என்பதில் பிசிசிஐ-க்கு விருப்பம் இல்லை.

    ஒருவேளை அடுத்த வருடமும் விவோ வர முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என பிசிசிஐ யோசிக்கிறது. அதேவேளையில் விவோ இல்லை என்றால் அடுத்த இரண்டு வருடத்திற்கு தலா 240 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக ட்ரீம் லெவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    240 கோடி என்பது மிகவும் குறைவு என்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு கூறுகையில் ‘‘அதிகத் தொகைக்கு விண்ணப்பம் கோரியவருக்குத்தான் டைட்டில் உரிமை என்பது கிடையாது என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். ட்ரீம் லெவன் அதிகத் தொகைக்கு ஏலம் கேட்டுள்ளது. இன்னும் அதற்குத்தான் வாய்ப்புள்ளது. சில பிரச்சினைகள் உள்ளது. அவைகள் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.

    இதற்கிடையே, ட்ரீம் லெவன் நிறுவனத்திலும் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு பங்கு உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
    Next Story
    ×