என் மலர்
விளையாட்டு
உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
நேற்று முன்தினம் பெரு தலைநகர் லிமாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பெருவை சந்தித்தது. 6-வது நிமிடத்திலேயே பெரு வீரர் ஆந்த்ரே கரில்லோ கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் 28-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். 59-வது நிமிடத்தில் பெரு வீரர் ரெனட்டோ டாபியா கோல் போட மறுபடியும் அந்த அணி முன்னிலை பெற்றது. 64-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் பந்தை வலைக்குள் திணித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய நெய்மார் கடைசி நிமிடத்தில் 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். முடிவில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 28 வயதான நெய்மார் இதுவரை 64 சர்வதேச கோல்கள் (103 ஆட்டம்) அடித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரொனால்டோவை (62 கோல்) பின்னுக்கு தள்ளினார். முதலிடத்தில் உள்ள பீலேவையும் (77 கோல்) விரைவில் முந்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் அர்ஜென்டினா மாற்று ஆட்டக்காரர் ஜோகுவைன் கோரியா 79-வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இன்னொரு ஆட்டத்தில் ஈகுவடார் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவேக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
மும்பை:
உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் 2018-ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
36 வயதான டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன் எடுத்தார். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் ஒருவரால் மட்டுமே அதிரடியாக ஆட முடிந்தது. அவரது ஆட்டத்தை கேப்டன் வீராட் கோலி பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தாவுக்கு எதிராக டிவில்லியர்சின் ஆட்டம் அற்புதமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இதை பார்க்கும்போது கனவா? நினைவா? என்று எண்ண தோன்றியது.
இதனால் நீங்கள் (டிவில்லியர்ஸ்) ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விளையாட வாருங்கள்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை அணி 3-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.
வாட்சன் 38 பந்தில் 42 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு 34 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சாம் கரண் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஐடேஜா 10 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
சந்தீப் சர்மா, கலீல் அகமது, தமிழக வீரர் டி. நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்
பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வில்லியம்சன் அதிகபட்சமாக 39 பந்தில் 57 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். கரண் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கரண், ஜடேஜா ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே ஐதராபாத்திடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.
வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
நெருங்கி வந்து இந்த வெற்றியை பெற்றுள்ளது சிறப்பானது. பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்த ஆடுகளத்தில் 168 ரன் இலக்கு போதுமானதா என்பது முதல் 6 ஓவரை பொறுத்துதான் இருக்கிறது. எங்களது வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள்.
இதேபோல சுழற்பந்து வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். எங்களுக்கு எதிராக ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடமாட்டார்கள் என்றுதான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை பயன்படுத்தினோம்.
சாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர்ந்து நீடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பெற முடியும்.
சி.எஸ்.கே. 9-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை வருகிற 17-ந் தேதி சார்ஜாவில் சந்திக்க உள்ளது. ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தாவை 18-ந் தேதி எதிர்கொள்கிறது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 9 அணிகள் இடையே நடந்து வருகிறது. குறிப்பிட்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் முடிவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும். இதுவரை 4 தொடர்களில் ஆடியுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
கொரோனா அச்சத்தால் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டும் உள்ளன. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஒத்திபோட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் லண்டனில் இறுதிப்போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதை நோக்கி பயணிக்கிறோம். எப்படி புள்ளிகளை பகிர்வது, தள்ளிவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.
பாரீசில் நடந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து 13-வது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்து சரித்திரம் படைத்தார். அத்துடன் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையையும் (20 கிராண்ட்ஸ்லாம்) நடால் சமன் செய்தார்.
இந்த நிலையில் அவரது சாதனை குறித்து முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) அளித்த ஒரு பேட்டியில், ‘நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்று கருதுகிறேன். விளையாட்டு உலகில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸ் ஒட்டுமொத்தத்தில் (4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியை சேர்த்து) 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். ஆனால் நடாலோ ஒரே கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே அவரை விட இன்னும் ஒன்று தான் பின்தங்கி உள்ளார். உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்று. நடாலின் சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது. நடாலும், ஜோகோவிச்சும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருந்து ஒரே வயதில் ஓய்வு பெற்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வெல்வதில் அவர்களிடையே தான் போட்டி இருக்கும்’ என்றார்.
சர்வதேச களத்தில் 34 வயதான நடாலுக்கு போட்டியாக உள்ள 39 வயதான பெடரர் 20 கிராண்ட்ஸ்லாமும், 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாமும் கைப்பற்றி உள்ளனர். அதே சமயம் இவர்கள் பிரெஞ்ச் ஓபனை ஒரே ஒரு முறை மட்டுமே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.






