என் மலர்tooltip icon

    விளையாட்டு

    7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 51-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 51-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வி, 3 ‘டிரா’வுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியை பெற்றுள்ளது. 5 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. அந்த அணி 11 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியில் அரிதானே சான்டனா (ஸ்பெயின்) 5 கோலும், ஹாலிக்சரன் நர்சரி (இந்தியா) 3 கோலும் அடித்து நட்சத்திர வீரர்களாக உள்ளார். நார்த் ஈஸ்ட் அணியில் குலேசி அப்பியா (இங்கிலாந்து) 3 கோல் அடித்துள்ளார்.

    பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்திய அணி வீரர்கள், கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கடைப்பிடித்தால் மட்டுமே பிரிஸ்பேனுக்கு வரலாம். இல்லையென்றால் இங்கு வர வேண்டாம் என்று குயின்ஸ்லாந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் இந்திய அணி பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதிய கடித்தத்தில், பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடத்த வேண்டுமானால் கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு பிரிஸ் பேனில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு அறிவித்துள்ளது.

    அங்கு ஓட்டல் ஒன்றில் ஊழியர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண மந்திரி அனாஸ்டாசியா கூறியதாவது:-

    இது நம்ப முடியாத அளவுக்கு தீவிரமானது. கிரேட்டர் பிரிஸ்பேன் பகுதியை ஒரு ஹாட்ஸ்பாட் என்று நாங்கள் அறிவிக்கிறோம்’ என்றார்.

    தற்போது சிட்னியில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் முடிந்த பிறகு இரு அணிகளும் பிரிஸ்பேனுக்கு 12-ந் தேதி புறப்படும் வகையில் பயணம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆனால் தற்போது பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தளர்த்த வாய்ப்பில்லை. ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த முடியாத பட்சத்தில் தற்போது 3-வது டெஸ்ட் நடக்கும் சிட்னியிலேயே நடத்தப்பட லாம் என்று கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் அடித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.  டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முதல் நாளில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இன்று 2வது நாள் நடந்த ஆட்டத்தில் 105.4 ஓவர்களில் அந்த அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதன்பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடினர்.

    இந்த போட்டியில் 16வது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்சர் அவருக்கு வரலாறு படைக்க உதவியது.  சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    அவர் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 63 சிக்சர்கள் விளாசியுள்ளார்.  இதுவே, 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் ஆகும்.

    இதுதவிர வேறு சில வரலாற்று சாதனைகளையும் ரோகித் படைத்துள்ளார்.  அவர் இன்று அடித்த சிக்சரால், மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது.  கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

    அவரது இந்த சிக்சருக்கு பின்னர், கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார்.  வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (476) ஆகியோர் ரோகித்துக்கு முன்னாள் அடுத்தடுத்து உள்ளனர். 

    எனினும், ஒற்றை அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரோகித் முதல் இடத்தில் இல்லை.  ஏனெனில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கெய்ல் அனைத்து நிலைகளிலும் சேர்த்து 140 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

    இந்த போட்டியில் ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோகித் 26 ரன்களில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது.
    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அப்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. புதுமுக வீரர் புகோவ்ஸ்கி - லபுஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடியது. புகோல்ஸ்கி 62 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து லபுஸ்சேனுடன் ஸ்டீவன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    இவர்கள் இந்திய பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தனர். லபுஸ் சேன் அரை சதம் அடித்தார்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 55 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து இருந்தது. லபுஸ்சேன் 67 ரன்னுடனும், ஸ்டீவன் சுமித் 31 ரன்னுடனும் களத் தில் இருந்தனர். மழையால் முதல் நாளில் 35 ஓவர் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் தொடர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் லபுஸ்சேன் அவுட் ஆனார். லபுஸ்சேன் 196 பந்தில் 91 ரன் (11 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 206 ரன்னாக இருந்தது. அடுத்து களம் வந்த மாத்யூ வாடே (13 ரன்) விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார்.

    ஸ்டீவன் சுமித்துடன் ஜோடி சேர்ந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் தடுமாறினார். அவர் 21 பந்தை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    அதேபோல் கேப்டன் டிம் பெய்ன் (1 ரன்) பும்ரா பந்திலும், கம்மின்ஸ் (0) ஜடேஜா பந்திலும் போல்டு ஆனார்கள். அப்போது ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 278 ரன்னாக இருந்தது.

    அடுத்து மிட்செல் ஸ்டார்க் களம் வந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று சதம் அடித்தார்.

    76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 27-வது சதம் ஆகும். முதல் இரண்டு டெஸ்டுகளில் ஸ்டீவன் சுமித் சொதப்பியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    ஆஸ்திரேலியா 100.1 ஓவரில் 300 ரன்னை தொட் டது. மிட்செல் ஸ்டார்க் 24 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை நவ்தீப் சைனி வீழ்த்தினார். அடுத்து வந்த நாதன் லயன், ஜடேஜா பந்தில் டக்-அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 315 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது. இதனால் ஸ்டீபன் சுமித் ரன்களை துரிதமாக சேர்க்கும்படி விளையாடினார்.

    அவர் 131 ரன் (226 பந்து 16 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார்.

    ஆஸ்திரேலியா 105.4 ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹேசில்வுட் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள், பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 2 டெஸ்டில் அசத்திய அஸ்வின் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

    பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையா டியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன்கில் ஆகியோர் களம் இறங்கினர். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவரில் 26 ரன் எடுத்து இருந்தது. ரோகித்சர்மா 11 ரன்னுடனும், சுப்மன்கில் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை ஹசில்வுட் பிரித்தார். அவர் பந்து வீச்சில் ரோகித் சர்மா அவுட் ஆனார். 77 பந்துகள் சந்தித்து 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். அவர் அவுட் ஆன சிறுது நேரத்தில் சுப்மான் கில் கம்மின்ஸ் ஓவரில் வெளியேறினார். அவர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அதில் 8 பவுண்டரி அடங்கும்.

    இந்நிலையில் புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க இருவரும் தொடர்ந்து பல ஓவர்களை மெய்டன் செய்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்தது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. ஸ்மித் 31 ரன்களிலும் லபுசேன் 67 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற ஸ்மித் சதம் கடந்து அசத்தினார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

    இந்தியா தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, சைனி தலா 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மான் கில் களமிறங்கி நிதானமாக விளையாடினர்.
    இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
    லண்டன்:

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அக்டோபர் 14-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது.

    முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 18-ந் தேதியும், 2-வது ஆட்டம் 20-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந் தேதியும் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் பயணம் செய்து விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும். இதே நேரத்தில் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    இந்த போட்டிகள் பெண்கள் 20 ஓவர் போட்டி நடைபெறும் அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் அதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி 2005-ம் ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக பாகிஸ்தான் செல்ல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது. ஒடிசா அணிக்கு முதல் கோல் சுய கோலாக 22-வது நிமிடத்தில் வந்தது.

    ஸ்டீவன் டெய்லர் 42-வது நிமிடத்திலும், டிகோ மவுரிசியோ 50-வது மற்றும் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தரப்பில் ஜோர்டான் முர்ரே 7-வது நிமிடத்திலும், கேரி ஹூபெர் 79-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். 9-வது ஆட்டத்தில் ஆடிய ஒடிசா அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். கேரளா அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.
    சிட்னி டெஸ்டில் அறிமுக வீரர் புகோவ்ஸ்கி கொடுத்த எளிதான இரண்டு கேட்ச்களை ரிஷப் பண்ட் பிடிக்க தவறியதால், புகோவ்ஸ்கி அரைசதம் சதம் அடித்தார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் அறிமுக வீரரான புகோவ்ஸ்கி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 ரன்னில் வீழ்ந்தார்.

    புகோவ்ஸ்கி முன்னதாகவே அவுட் ஆகியிருக்கனும். அவர் கொடுத்த இரண்டு எளிதான கேட்ச்களை ரிஷப் பண்ட் பிடிக்க தவறினார். இதனால் 3 ஓவருக்குள் 26, 32 ஆகிய ரன்களில் தப்பினார்.

    ரிஷப் பண்ட் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால் உலகத்திலேயே மற்ற விக்கெட் கீப்பர்களை விட அதிக கேட்ச்களை விட்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஆகத்தான் இருப்பார் என ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்துள்ளார்.

    ரிஷப் பண்ட் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘இன்று ஒருவருக்கே இரண்டு கேட்ச்களை பிடிக்க தவறினார். அவற்றை பிடித்திருக்க வேண்டும். பேட்ஸ்மேனுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் புகோவ்ஸ்கி சதம் அல்லது இரட்டை சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது ரிஷப் பண்ட்-க்கு அதிர்ஷ்டம். ஆடுகளத்தின் மேற்பரப்பு நம்பமுடியாத வகையில் இருக்கிறது.

    ரிஷப் பண்ட்

    கேட்ச்களை தவற விட்டபோது, இன்றைக்கு புகோவ்ஸ்லி அபாரமாக ஆடப்போகிறார். விட்டதற்கு தண்டனை தரப்போகிறார் என்று ரிஷப் பண்ட் நினைத்திருக்கனும். ஆனால் புகோவ்ஸ்கி இன்று 62 ரன்னில் ஆட்டமிழந்துவிட்டார்.

    ரிஷப் பண்ட் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால், மற்ற விக்கெட் கீப்பர்களை விட அதிக கேட்ச்களை விட்டிருப்பார். அவரது விக்கெட் கீப்பர் பயிற்சியில் ஹோம்ஒர்க் பெற வேண்டும் ’’ என்றார்.
    சிட்னி போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கும்போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எமோசனாகி கண்ணீர் விட்ட காட்சி வீடியோ வைரலாகி வருகிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மைதானத்தில் வரிசையாக நிற்க, இருநாட்டின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்படும்.

    இந்திய தேசியக் கீதம் ஒலித்தபோது, மெல்போர்ன் போட்டியில் அறிமுகம் ஆன முகமது சிராஜ் எமோஷனலாகி கண்ணீர் விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் வீரர்களான முகமது கைஃப் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் முகமது சிராஜ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியா தொடர் தொடங்குவதற்கு முன் முகமது சிராஜின் தந்தை காலமானார். அதற்காக இந்தியா திரும்பாமல் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தார். மெல்போர்னில் டெஸ்டில் அறிமுகம் ஆகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி அனைவரது ஆதரவையும் பெற்றார்.

    இன்று தொடங்கிய சிட்னி டெஸ்டிலும் வார்னர் சொற்ப ரன்களில் வெளியேற்றினார்.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர், விளம்பர வருமானம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.

    இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெங்களூரை தலைமை இடமாக கொண்டு கேலக்டஸ் பன்வேர் டெக்னாலஜி நிறுவனம் செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு செயலியான மொபைல் பிரீமியர் லீக் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இதில் விராட் கோலி, விளம்பர தூதராகவும் இருக்கிறார். மேலும் அந்த நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலி 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகி இருக்கிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் விராட் கோலியிடம் விளக்கம் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இரண்டு டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

    நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த மாதிரியான கொள்கையை வெளிப்படுத்துகிறதோ அதுபோன்ற கிரிக்கெட்டை தான் பார்க்க முடியும். பாகிஸ்தான் அணியில் சராசரியான வீரர்கள் தான் இருக்கிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பள்ளி மாணவர்கள் மாதிரி தான் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் அணி எப்போது டெஸ்டில் விளையாடுகிறதோ அப்போது எல்லாம் அவர்களது சாயம் வெளுத்துவிடுகிறது. கிரிக்கெட் வாரியமும் பள்ளியில் விளையாடும் வீரர்களை போன்றவர்களை தான் அணியில் வைத்துள்ளது.

    இனியாவது கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் எப்போது மாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) தலைவரான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள உட்லான்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.

    இதில் ஒரு அடைப்பு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் நீக்கப்பட்டது. மற்ற அடைப்புகள் நீக்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படுகிறது. இதன் பிறகு கங்குலி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கங்குலி இன்று டிஸ்சார்ஜ் ஆனார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் மிகவும் நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    48 வயதான கங்குலி தனியார் வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தினசரி கண்காணிப்பில் இருப்பார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    ×