என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் ரிஷப்பண்ட் 2 கேட்ச்களை தவறவிட்டுள்ளார்.

    சிட்னி டெஸ்டில் இன்று விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் 2 கேட்ச்களை தவறவிட்டார். அஸ்வின் ஓவரில் புகோவ்ஸ்கி அடித்த எளிதான கேட்சை அவர் நழுவ விட்டார். இதேபோல முகமது சிராஜ் பந்திலும் புகோவ்ஸ்கி கேட்சை அவர் தவறவிட்டார்.

    இதேபோல பும்ராவும் அவருக்கு எளிதான ரன் அவுட் ஒன்றையும் தவற விட்டார். இறுதியாக புகோவ்ஸ்கி 62 ரன்னில் சைனி பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மா, நவ்தீப் சைனி இடம் பெற்றனர். சைனி டெஸ்டில் அறிமுகமானார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மீண்டும் திரும்பினார். புகோவ்ஸ்கி முதல் முறையாக டெஸ்டில் இடம் பெற்றார். ஜோ பர்ன்ஸ், டிரெவிஸ் ஹெட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப் பட்டனர்.

    இந்தியா: ரகானே (கேப்டன்), ரோகித் சர்மா ( துணை கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விகாரி, ரி‌ஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், சிராஜ், பும்ரா, சைனி.

    ஆஸ்திரேலியா:டிம் பெய்ன் (கேப்டன்), வார்னர், புகோவ்ஸ்கி, லபுசேன், ஸ்டீவ் சுமித், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹாசல்வுட்,

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும், முகமது சிராஜும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள்.

    4-வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடியை சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் பிரித்தார். வார்னர் 5 ரன்னில் அவரது பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.அப்போது ஸ்கோர் 6 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு புகோவ்ஸ்கியுடன் மார்னஸ் லபுசேன் ஜோடி சேர்ந்தார்.

    ஆஸ்திரேலிய அணி 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது புகோவ்ஸ்கி 14 ரன்னிலும், லபுசேன் 2 ரன்னிலும் இருந்தனர்.

    இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய ஆஸ்திரேலுயா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புதுமுக ஆட்டகாரரான புகோவ்ஸ்கி முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து கலக்கினார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைனி பந்து வீச்சில் வெளியேறினார். 

    இந்நிலையில் லபுசேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் விக்கெட் இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்தது. ஸ்மித் 31 ரன்களிலும் லபுசேன் 67 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

    இந்திய அணி தரப்பில் சிராஜ் சைனி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    மெல்போர்ன் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியை 30 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து ரசித்தனர்.

    இந்தநிலையில் மெல்போர்ன் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 வயது கொண்ட அந்த நபர் முதலில் மைதானத்துக்கு வரும்போது தொற்று பாதிப்பு இருக்கவில்லை என்றும், மைதான வளாகத்திலோ, அல்லது அருகே இருந்த வர்த்தக வளாகத்தில் இருந்தோ அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து டிசம்பர் 27-ந்தேதி அந்த மைதானத்தில் ‘‘ஜோன்-5’’ பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கொரோனா பரிசோதனைச் செய்துகொள்ளுமாறும், அறிகுறி இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதன்காரணமாக இன்று சிட்னியில் தொடங்கிய 3-வது டெஸ்டில் ரசிகர்களுக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணிந்தவாறு ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர்.

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், பும்ரா.

    ஆஸ்திரேலிய வீரர்கள் விவரம்:-

    வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன்.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் மோதி ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 56-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி வீரர் டேனியல் போக்ஸ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இதனால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது. 79-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி கோல் அடித்தது. அந்த அணியின் பிரைட் நோபாக்ஹரே மின்னல் வேகத்தில் பந்தை கடத்தி சென்று கோல் கீப்பர் உள்பட 5 வீரர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை அற்புதமாக கோல் வளையத்துக்குள் திணித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சியை அந்த அணியால் முழுமையாக கூட கொண்டாட முடியவில்லை. அடுத்த நிமிடத்தில் கோவா வீரர் தேவேந்திர முர்கான்கர் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா அணிகள் சந்திக்கின்றன.
    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.
    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    அடிலெய்டில் 36 ரன்னில் சுருண்டதும் இந்திய அணி இனி தேறாது என்று சவடால் விட்ட முன்னாள் வீரர்கள் பலரும் மெல்போர்னில் இந்திய அணியின் எழுச்சியை கண்டு வாயடைத்து போனார்கள். அதுவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே இந்திய அணி இரு இன்னிங்சிலும் 200 ரன்னுக்குள் அடக்கியது. இதனால் இன்றைய டெஸ்டில் இந்திய வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

    இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி காயத்தில் இருந்து மீண்டு 14 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டி இருந்ததால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா இந்த தொடரில் முதல் முறையாக விளையாட உள்ளார். பார்ம் இன்றி தவிக்கும் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். இதே போல் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடம் பிடித்துள்ளார். தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பக்கபலமாக இருப்பார் என்று நம்பலாம்.

    மெல்போர்ன் டெஸ்டில் கேப்டன் அஜிங்யா ரஹானே சதம் விளாசி அசத்தினார். ஆனால் ‘பொறுமையின் சிகரம்’ புஜாராவின் ஆட்டம் பெரிய அளவில் எடுபடவில்லை. அவரும் ரன் குவிக்கும் போது இந்தியாவின் பேட்டிங் வரிசை பலப்படும். புஜாரா இன்னும் 97 ரன்கள் எடுத்தால் டெஸ்டில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    2-வது டெஸ்டில் லெக்சைடில் அதிகமான பீல்டர்களை நிறுத்தி அதற்கு ஏற்ப பந்து வீசச்செய்த ரஹானேவின் வியூகத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்ததுடன், ரன்ரேட்டும் மந்தமானது. இந்த டெஸ்டில் அவரது திட்டமிடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை உள்நாட்டில் பேட்டிங்கில் தடுமாறுவது ஆச்சரியமே. எப்போதும் ரன்மழை பொழியும் ஸ்டீவன் சுமித் முதல் இரு டெஸ்டிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்ட அவர் அதற்கு பரிகாரம் தேட தீவிரம் காட்டுவார்.

    காயத்தால் முதல் இரு டெஸ்டில் ஆடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் வருகையும் ஆஸ்திரேலியாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். சிட்னி அவருக்கு ராசியான மைதானமாகும். இங்கு அவர் 4 சதங்கள் அடித்துள்ளார். இடுப்பு பகுதியில் லேசான வலி இருந்தாலும் அதை சமாளித்து பேட்டிங் செய்வதற்கு அவர் தயாராகி விட்டார். அவருடன் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்று தெரிகிறது. மற்றபடி பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் வழக்கம் போல் வரிந்து கட்டுவார்கள். சிட்னி ஆடுகளம் பெரும்பாலும் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் நாதன் லயன் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சாதனையின் விளிம்பில் உள்ள நாதன் லயன் இன்னும் 6 விக்கெட் எடுத்தால் 400 விக்கெட் என்ற இலக்கை அடைவார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிட்னியில் எங்களது வெற்றியும், சாதனையும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான பந்து வீச்சாளர்களுக்கு இது அவர்களது சொந்த ஊர் மைதானம் ஆகும். அவர்கள் இங்குள்ள ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த டெஸ்டில் வார்னர் நிச்சயம் விளையாடுவார். அவர் அற்புதமான ஒரு வீரர். யாருக்கு எதிராக விளையாடினாலும் வார்னர் இருந்தால் நாங்கள் மேலும் சிறந்த அணியாக இருப்போம்’ என்றார். தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் முதல் நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 48 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்தில் தினமும் 10 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆடுகளம் குறித்து அதன் பராமரிப்பாளர் ஆடம் லீவிஸ் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே இங்கு நடந்த டெஸ்டுக்குரிய ஆடுகளம் போன்று இப்போதும் இருக்குமா? என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை வித்தியாசமாக இருக்கிறது. இந்த முறை ஆடுகளத்தை தயார்படுத்துவதில் மழை எங்களுக்கு இடையூறாக இருந்தது. கணிசமான புற்களுடன் கூடிய கடின தரை ஆடுகளத்தை கொடுக்க முயற்சித்துள்ளோம்’ என்றார். இதனால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடலாம். முதல் இரு நாட்கள் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், பும்ரா.

    ஆஸ்திரேலியா: வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் அல்லது டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன்.

    இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ஆஸ்திரேலிய பயணம் தொடங்கியதில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். கடைசி டெஸ்ட் நடக்கும் பிரிஸ்பேனில் இதைவிட கெடுபிடி அதிகமாக இருக்கும். அங்கு வீரர்கள் முற்றிலும் ஓட்டலிலேயே முடங்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல தயங்குவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பொறுப்பு கேப்டன் ரஹானே நேற்று பதில் அளித்து கூறியதாவது:-

    தனிமைப்படுத்தும் நடைமுறைக்குள் இருப்பது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய சவாலாகும். ஆனால் ஒரு அணியாக நாங்கள் டெஸ்ட் போட்டி மீதே கவனமுடன் இருக்கிறோம். எங்களை தவிர்த்து வெளியே பார்த்தால், சிட்னியில் மக்களின் வாழ்க்கை இயல்பாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் ஓட்டலுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். வீரர்கள் என்ற வகையில் இதை நாங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதை பற்றி நாங்கள் புகார் செய்யப்போவதில்லை. தற்போது சிட்னி டெஸ்ட் மீதே முழு கவனமும் உள்ளது. வெளியே முற்றிலும் இயல்பான நிலை இருக்கும் போது, நாங்கள் மட்டும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பது சவால் தான். இதற்காக நாங்கள் கோபப்படபோவதில்லை. நாங்கள் இங்கு வந்தது கிரிக்கெட் விளையாடுவதற்கு தான். அதை செய்யவே விரும்புகிறோம். மற்ற விஷயங்களை அணி நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பார்த்துக்கொள்ளும்.

    இவ்வாறு ரஹானே கூறினார்.
    சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா இணைந்திருப்பதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் இந்திய நேரப்படி நாளை விடியற்காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தொடக்க வீரராகத்தான் களம் இறங்குவார் என்பதை ரஹானே உறுதி செய்துள்ளார்.

    மேலும் ரஹானே கூறுகையில் ‘‘முதலில், ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உயர்ந்த அளவிலான அவருடைய அனுபவம் முக்கியமானது. வலைப்பயிற்சியின்போது சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 7 முதல் 8 செசன் பயிற்சி மேற்கொண்டார். 2-வது டெஸ்ட் முடிந்த பின்னர் மெல்போர்ன் வந்த ரோகித் பயிற்சியை தொடங்கினார்.

    கடந்த சில தொடர்களில் தொடக்க வீரராக களம் இறங்கி ரன்கள் குவித்தார். ஆகவே, அவரை தொடக்க வீரராக நீங்கள் பார்க்கலாம்.

    உமேஷ் யாதவ் எங்களின் முக்கிய பந்து வீச்சாளர். அவர் எங்களுக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளார். துரதிருஷ்டவசமாக அவர் காயம் அடைந்துள்ளார். அவரை உண்மையிலேயே தவறவிடுகிறோம். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. பும்ரா, அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்’’ என்றார்.
    டேவிட் வார்னர் சிட்னி போட்டியில் விளையாடுவது, ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

    3-வது டெஸ்ட் நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை இழக்காது. இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் முன்னணி வகிக்க விரும்பும்.

    முதல் இரண்டு போட்டிகளில் வார்னர் விளையாடவில்லை. இந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. டேவிட் வார்னர் அணியில் இருந்தால் எப்போதுமே நாங்கள் வலுவான அணி என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

    டேவிட் வார்னர் குறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘டேவிட் வார்னர் அணியில் இடம்பிடித்து, களம் இறங்கி விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மூலம் வரும் ரன்கள், அல்லது எனர்ஜி மூலம் அவர் அணியில் இருக்கும்போதெல்லாம் ஆஸ்திரேலியா அணி சிறந்த அணியாக திகழும்.

    மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் ஸ்மித்துடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பாதுகாப்பார். எதிரணி பந்து வீச்சாளர்கள் சற்று சோர்வடையும்போது மற்ற வீரர்கள் பேட்டிங் செய்ய வருவது சாதகமாக இருக்கும். ஆகவே, டேவிட் வார்னர் எங்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பார்’’ என்றார்.
    சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சைனி இடம்பிடித்துள்ளார்.
    சிட்னி மைதானத்தில் இந்திய அணி 12 டெஸ்டில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    1978-ம் ஆண்டு பி‌ஷன் சிங் பெடி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 டெஸ்டில் தோற்றது. 6 போட்டி டிரா ஆனது. 42 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி மைதானத்தில் ரகானே தலைமையிலான இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    101-வது மோதல்

    இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 100 டெஸ்டில் இந்தியா 29-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 போட்டிகள் டிரா ஆனது. ஒரு டெஸ்ட் டை ஆனது.

    சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுகம் ஆகிறார். மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் காயம் அடைந்துள்ளதால் விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதமும் ( 238 ரன்), ஹென்றி நிக்கோல்ஸ் (157 ரன்), மிச்சேல் (102 ரன்) ஆகியோர் சதமும் அடித்தனர்.

    362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.

    நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 186 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 176 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அசார் அலி அதிகபட்சமாக தலா 37 ரன் எடுத்தனர். கெய்ல் ஜேமிசன் 48 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். போல்ட் 3 விக்கெட்டும், வில்லியம்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2 தொடரை இழந்து ஏமாற்றம் அடைந்தது.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் நம்பர்ஒன் இடத்தை பிடித்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணி முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

    மேலும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் நியூசிலாந்து பெறுகிறது.
    சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நவ்தீப் சைனி அறிமுகமாகிறார்.

    ரஹானே தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
    14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடந்தது.

    இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்தியாவில் நடக்குமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படுமா? என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தியாவில் நடத்தப்பட்டால் போட்டி நடக்கும் மைதானங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

    14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் விவரங்களை ஜனவரி 21-ந்தேதி முதல் அந்த மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அதோடு அணி மாறும் வீரர்கள் விவரங்களையும் அறிவித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×