search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் - வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் அடித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.  டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முதல் நாளில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இன்று 2வது நாள் நடந்த ஆட்டத்தில் 105.4 ஓவர்களில் அந்த அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதன்பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடினர்.

    இந்த போட்டியில் 16வது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்சர் அவருக்கு வரலாறு படைக்க உதவியது.  சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    அவர் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 63 சிக்சர்கள் விளாசியுள்ளார்.  இதுவே, 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் ஆகும்.

    இதுதவிர வேறு சில வரலாற்று சாதனைகளையும் ரோகித் படைத்துள்ளார்.  அவர் இன்று அடித்த சிக்சரால், மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது.  கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

    அவரது இந்த சிக்சருக்கு பின்னர், கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார்.  வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (476) ஆகியோர் ரோகித்துக்கு முன்னாள் அடுத்தடுத்து உள்ளனர். 

    எனினும், ஒற்றை அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரோகித் முதல் இடத்தில் இல்லை.  ஏனெனில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கெய்ல் அனைத்து நிலைகளிலும் சேர்த்து 140 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

    இந்த போட்டியில் ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோகித் 26 ரன்களில் வெளியேறினார்.

    Next Story
    ×