என் மலர்
விளையாட்டு
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் அங்கமான இந்த தொடர் கடந்த ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தற்போது அரங்கேறுகிறது.
கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் திரும்பி இருக்கிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகிய மேத்யூஸ் உடல் தகுதியை எட்டியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வருகை அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கும். இந்த தொடரில் மேத்யூஸ் 19 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடப்பார்.
ஆடுகளம் சுழலுக்கு சாதகமானது என்பதால் இங்கிலாந்து அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்கும் வியூகத்துடன் களம் காணுகிறது. 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி, இலங்கையை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தி இருந்தது. அதே போல் மீண்டும் சாதிக்கும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் இங்கிலாந்தும், 8-ல் இலங்கையும் வெற்றி ெபற்றுள்ளன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக உள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வீராட் கோலி திகழ்கிறார். தனது விளையாட்டு மூலம் மட்டுமில்லாமல் விளம்பரங்கள் வாயிலாகவும் அவர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
கிரிக்கெட் வீரர்களில் விளம்பரங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் வீரராக வீராட் கோலி திகழ்கிறார். அவரது பிராண்ட் மதிப்பும் அதிகமாக இருக்கிறது. இதுதவிர இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவர் தனது வருவாயை பெருக்கிக் கொண்டுள்ளார்.
வீராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தை பிறந்ததையொட்டி மேலும் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன. குழந்தைகளுக்குரிய பேம்பர்ஸ், ஷூ மற்றும் குளிர்பான நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன.
ஆனால் கோலி இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. விரைவில் அவர் அதில் கையெழுத்து இடுவார். இதன் மூலம் அவரது விளம்பரங்கள் மேலும் அதிகரிக்கும். வீராட் கோலி ஏற்கனவே பல்வேறு விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை சந்தித்தார். 78 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-16,24-26, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத் 16-21, 10-21 என்ற நேர்செட்டில் கன்டபோன் வாங்சரோனிடம் (தாய்லாந்து) தோல்வி அடைந்து நடையை கட்டினார். கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடி 21-11, 27-29, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹபிஸ் பைஜல்-குளோரியா விட்ஜே இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
சிட்னி:
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்-விகாரி ஜோடியை வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன், லபுசேன், மேத்யூ வாடே ஆகியோர் “சிலெட்ஜிங்”கில் ஈடுபட்ட னர். அஸ்வின் களத்தில் இருந்த போது டிம்பெய்ன் வார்த்தைகளால் உசுப்பேற்றி சீண்டினார். மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.
4-வது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்துக்கு வா, பார்ப்போம் என்று சீண்டினார். இதற்கு அஸ்வின், “நீ இந்தியா வா பார்ப்போம். அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பெய்ன் சீண்டியதால், அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விகாரி அடித்த கேட்சை பெய்ன் கோட்டை விட்டார்.
இந்தநிலையில் ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் செயல்பட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழிநடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
நெருக்கடி காரணமாகவே நான் தவறாக செயல்பட்டு விட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட நான் குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களது மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன்.
நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன். அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்சை விட்டு விட்டேன் என்று கூறி எனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன்பின் எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாங்காக்:
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.
30 வயதான இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
சாய்னாநேவால் இன்று முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற இருக்கும். தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார்.
இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட 3-வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாய்னா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக அவரை கொரோனா தாக்கி உள்ளது.
இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் சாய்னா குறைந்தபட்சம் 10 நாட்கள் தனிமையில் இருப்பார்.
இதேபோல் முன்னணி வீரர்களில் ஒருவரான பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இதன் காரணமாக இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்திக் கொண்டார்.






