என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவாலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

    பாங்காக்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.

    30 வயதான இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

    சாய்னாநேவால் இன்று முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெற இருக்கும். தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார்.

    இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட 3-வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாய்னா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக அவரை கொரோனா தாக்கி உள்ளது.

    இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் சாய்னா குறைந்தபட்சம் 10 நாட்கள் தனிமையில் இருப்பார்.

    இதேபோல் முன்னணி வீரர்களில் ஒருவரான பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    இதன் காரணமாக இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் டிரா ஆனது வெற்றிக்கு நிகரானது என இந்திய அணி பொறுப்பு கேப்டன் ரகானே கூறி உள்ளார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்து தோல்வியில் இருந்து தப்பியது.

    407 ரன் இலக்கு என்ற நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 5-வது வீரராக களம் இறங்கிய ரி‌ஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    அவர் 97 ரன்னிலும், புஜாரா 77 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 272 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.

    இதனால் எஞ்சிய 5 விக்கெட்டுகளை இந்தியா எளிதில் இழந்து தோல்வியை அடைந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 6-வது விக்கெட்டான விகாரி-அஸ்வின் ஜோடி மனம் தளராமல் கடைசி வரை போராடி தோல்வியில் இருந்து தப்பி ஆட்டத்தை டிரா செய்தது.

    கடைசி வரை இந்த ஜோடியை ஆஸ்திரேலிய பவுலர்களால் பிரிக்க முடியாமல் நொந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு இருவரும் மிகவும் கவனத்துடன் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆட்டத்தின் முடிவில் இந்தியா 130 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்தது. விகாரி 161 பந்துகளில் 4 பவுண்டரியுடன், 23 ரன்னும், அஸ்வின் 178 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 39 ரன்னும் எடுத்தனர்.இருவரும் இணைந்து 259 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் எடுத்தனர்.

    சிட்னி டெஸ்ட் டிரா ஆனது வெற்றிக்கு நிகரானது என இந்திய அணி பொறுப்பு கேப்டன் ரகானே கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டியில் விகாரியின் சிறப்பான இன்னிங்சை அனைவரும் பார்த்தோம். இதில் அவர் ஆடிய விதம் 2019-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விகாரி அடித்த சதத்தை விட சிறந்த ஒன்றாகும்.

    காயமடைந்த பிறகும் அவர் போராடி அணியை தோல்வியில் இருந்து மீட்டு உள்ளார். கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் அவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த டிராவானது வெற்றிக்கு நிகரானது.

    இதற்கான அனைத்து பாராட்டுக்களும் விகாரி, அஸ்வின், ரி‌ஷப்பண்ட், புஜாரா ஆகியோரை சேரும். ரி‌ஷப்பண்ட் மிக அற்புதமாக ஆடினார். ஆனால் துரதிருஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.

    இந்திய அணியை பார்த்து உண்மையில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக ரி‌ஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பும், விளையாடியதும் அற்புதமாக இருந்தது. வீரர்களின் ஓய்வு அறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இந்திய கிரிக்கெட் அணியில் ரி‌ஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து இருப்போம். இந்தியா மிகவும் கடினமாக போராடியது. தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. காயம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து இந்திய அணி மீண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

    இதேபோல ஷேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங் திறனை பாராட்டி உள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய வீரர்களின் போராட்ட குணத்தை பாராட்டி உள்ளது.

    காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.
    சிட்னி:

    இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.  

    இதற்கிடையில், சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால், ஏற்கனவே ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

    விஹாரி

    இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் விலகியுள்ளனர்.

    நேற்று பேட்டிங் செய்தபோது விஹாரிக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், பீல்டிங்கின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, ஹனுமா விஹாரி மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களும் பிரிஸ்பென்னில் நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக டி நடராஜன் களமிங்களாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த் ஏழு ஆண்டுகளுக்குப்பின் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கி விளையாடினார்.
    இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பிசிசிஐ ஆயுட்கால தடைவிதித்தது. பிசிசிஐ-யின் தடையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தண்டனைக்காலம் ஏழு ஆண்டாக குறைக்கப்பட்டது.

    அவரது தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி உள்ளூர் போட்டிக்கான கேரள அணியில் சேர்க்கப்பட்டார். சையத் முஷ்டாக் டிராபி டி20 போட்டியில் கேரளா இன்று புதுச்சேரி அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்ரீசந்த் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தார். தொடக்க வீரர் ஃபபித் அகமதுவை க்ளீன் போல்டாக்கினார்.

    4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி 138 ரன்கள் அடித்தது. பின்னர் கேரளா 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்ததால், கடுமையான வார்த்தைகளால் திட்டி மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிட்டேன் என டிம் பெய்ன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.  இந்த போட்டியின்போது புஜாராவுக்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். டிஆர்எஸ் முடிவிலும் அவுட் இல்லை என வந்தது. இதனால் கோபம் அடைந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

    இதனால் போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    போட்டி முடிந்த பின்னர் பேசிய டிம் பெய்ன் விளையாட்டு களத்தில் மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘என்னுடைய வார்த்தைகளால் நான் மிகவும் மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிட்டேன். நான் அவரை நிச்சயமாக அவமரியாதை செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. அது கொஞ்சம் காட்டமான தருணம். நான் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது தேவை.

    ஸ்டம்ப் மைக் ஆன் ஆகி இருக்கும் என்பதும், ஏராளமான குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் என எனக்குத் தெரியும். நான் சிறந்த முன்உதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
    பீல்டிங் அமைப்பது, பந்து வீச்சை மாற்றுவதில் ஆர்வம் காட்டாமல், வார்த்தைப்போரில் ஆர்வம் காட்டு டிம் பெய்ன் கேப்டன் பதவி பறிக்கப்பட்டால் ஆச்சர்யம் இல்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    தலைசிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்ட ஆஸ்திரேலியா அணியால் 131 ஓவர்கள் வீசி இந்திய அணி பேட்ஸ்மேன்களை ஆல்-அவுட் ஆக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் ரிஷப்  பண்ட்-க்கு இரண்டு கேட்ச்களையும், ஹனுமா விஹாரிக்கு ஒரு கேட்சையும் விட்டார்.

    மேலும், அஸ்வினுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். இந்த நிலையில் டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘எனக்குத் தெரியாது, நான் ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் அல்ல. ஆனால், டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. சிறந்த பந்து வீச்சு குழுவைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியால், 130 ஓவர்களுக்கு மேல் இந்திய அணியை பேட்டிங் செய்ய அனுமதி அளித்துள்ளனர். பந்து வீச்சு மாற்றம், பீல்டிங் இடங்களை மாற்றுதல் போன்றவை முடிவுகளை மாற்றும்.

    பீல்டிங் அமைத்தல், பந்து வீச்சை மாற்றுதல் ஆகியவற்றை காட்டிலும், டிம் பெய்ன்  பேட்ஸ்மேன்களிடம் பேசுவதிலேயே ஆர்வம் காட்டினார். இந்தத் தொடருக்குப்பின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி மாற்றப்பட்டால், நான் ஆச்சர்யப்படமாட்டேன்’’ என்றார்.
    சிட்னி டெஸ்ட் டிரா ஆனதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் ஆஸ்திரேலியா, இந்தியா தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளது.
    2019-ம் ஆண்டில் இருந்து 2021 வரை விளையாடும் போட்டிகளை கணக்கில் கொண்டு முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து 600-க்கு 420 புள்ளிகளுடன் 70 சதவீத வெற்றிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா, இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தன. சிட்னி போட்டி டிரா ஆனதால் இரண்டு அணிகளுக்கும் தலா 10 புள்ளிகள் கிடைத்தன. இதன்மூலம் ஆஸ்திரேலியா 450 புள்ளிகளுக்கு 332 புள்ளிகள் பெற்று 7.8 சதவீத வெற்றியுடன் முதல் இடத்திலும், இந்தியா 570-க்கு 400 புள்ளிகள் பெற்று 70.2 சதவீத வெற்றியுடன் 2-வது இடத்திலும் நீடிக்கின்றன.

    இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் 0.2 சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி அல்லது தோல்வி இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
    இந்திய அணி வீரர்கள் காயத்தால் வெளியேறிக்கொண்டிருப்பது, கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலேயே இருந்து இந்திய அணிக்கு, வீரர்கள் காயம் அடைவது பெரும் தலைவலியாக உள்ளது.

    முதல் டெஸ்டில் முகமது ஷமி காயத்தால் வெளியேறினார். 2-வது டெஸ்டில் உமேஷ் யாதவ் காயத்தால் வெளியேறினார். 3-வது டெஸ்டில் ஜடேஜா, ஹனுமா விஹாரி வெளியேறியுள்ளனர். பயிற்சியின்போது கேஎல் ராகுல் காயம் அடைந்துள்ளார்.

    நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இன்றுடன் முடிவடைந்த சிட்னி டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. இங்கு தோல்வியை சந்தித்தது கிடையாது. 15-ந்தேதி தொடங்க இருக்கும் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வாய்ப்பு என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கான வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளது. முதலாவது பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் சாதனை. 2-வது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள வில் புகோவ்ஸ்கி குணமடைந்துவிட்டால், ஆஸ்திரேலியா மாற்றம் ஏதும் இல்லாமல் செல்லும். புகோவ்ஸ்கி குணமடையவில்லை என்றால், ஒரேயொரு மாற்றம் செய்வார்கள். இந்த போட்டியில் மிகவும் சிறந்த வகையில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

    இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்குப்பதில் மாற்று வீரர்களை இந்தியா களம் இறக்க வேண்டும். அவர்கள் இன்னொரு பேட்ஸ்மேன் உடன் விளையாடினால், அவர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார். பண்ட் 6-வது இடத்தில் களம் இறங்குவார். சாஹா 7-வது இடத்தில் களம் இறங்குவார். என்னை பொறுத்தவரையில் இது சிறப்பாக இருக்கும்’’ என்றார்.

    பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா 33 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 13 போட்டிகளை டிரா செய்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 8-ல் தோல்வியடைந்துள்ளது.
    சிட்னி டெஸ்டில் முக்கியமான கட்டத்தில் மூன்று கேட்ச்களை டிம் பெய்ன் பிடிக்க தவறியதால், இந்தியாவுக்கு டிரா செய்யும் வாய்ப்பு கிட்டியது.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதற்கு ரிஷப் பண்ட், அஸ்வின், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

    அதேவேளையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மூன்று கேட்ச்கள் விட்டது, லாபஸ்சேன் ஒரு கேட்ச் விட்டதும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

    ரிஷப் பண்ட் சொற்ப ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு முறை டிம் பெய்ன் கேட்ச் பிடிக்க தவறினார். ஹனுமா விஹாரி பேட்டில் பந்து பட்டு பறந்து சென்றது. இதை டிம் பெய்ன் டைவ் அடித்து பிடிக்க தவறினார்.

    அஸ்வின் கொடுத்த கேட்சை லாபஸ்சேன் பிடிக்க தவறினார். இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டிம் பெய்ன் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அஸ்வினை சீண்டிக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் டிம் பெய்னை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    டிம் பெய்ன்

    டிம் பெய்னின் உதடுகளும், கையுறைகளும் மூடவே இல்லை என்றும், விஹாரி கேட்சை சரியாக பிடிக்கவில்லை என்றும், கேட்ச் மிஸ் செய்யபின் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அறையை பார்க்கனுமே... என்றும்

    அஸ்வினை சீண்டிய அடுத்த ஓவரில் கேட்ச் தவறவிட்டதை, ஸ்லெட்ஜிங் இறுதிகட்ட ஆயுதம் என்றும், அஸ்வின், விஹாரியை சீண்டுவதற்கு கவனம் செலுத்தி கேட்ச்சை கோட்டைவிட்டு விட்டார் என்றும்,

    கேட்ச் பிடிக்க முடியவில்லை, பேட்டிங் செய்ய முடியவில்லை, தற்காலிய கேப்டன், தேவையில்லாமல் பேச மட்டுமே தெரிகிறது என்றும் ட்ரோல் செய்துள்ளனர்.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் நிதிஷ் ராணா, இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாட, மும்பையை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தவான் (23), ஹிடேன் தலால் (24) ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர்.

    அடுத்து வந்த ஹிம்மத் சிங் 32 பந்தில் 53 ரன்களும், நிதிஷ் ராணா 37 பந்தில் 74 ரன்களும் விளாச டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

    பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இளறங்கியது. தொடக்க வீரர்களான யாஷவி ஜெய்ஸ்வால் (0), ஆதித்யா தரே (3), சூர்யகுமார் யாதவ் (7), சித்தேஷ் லாட் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    ஷிவம் டுபே 42 பந்தில் 63 ரன்கள் அடித்தாலும், மும்பை அணி 18.1 ஓவரில் 130 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.  இதனால் டெல்லி அணி 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இசாந்த் சர்மா 3.1 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பிரதீப் சங்வான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    சிட்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி, ஜடேஜா பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், இந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் தோற்ற பின்னரும், இந்தியா சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் காயம் அடைந்தது சற்று கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

    முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, பேட்டிங் செய்யும்போது இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. 4-வது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் ஜடேஜா பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் 4-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    ஹாம்ஸ்டிரிங் காயத்துடன் விளையாடி 161 பந்தில் 23 ரன்கள் அடித்த ஹனுமா விஹாரியும் காயத்தால் பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து விலக இருக்கிறார். அவரது காயத்தின் தன்மை முதல் நிலையாக இருந்தாலும் குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதனால் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடாதது உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே இந்திய அணியில் பலம் காயம் அடைந்துள்ளனர். விஹாரிக்குப் பதில் சாஹா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோரில் ஒருவர்தான் களம் இறங்க வேண்டும். ஒருவேளை சாஹா முழுநேர விக்கெட் கீப்பராகவும், ரிஷப் பண்ட் முழுநேர பேட்ஸ்மேனாகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லை எனில் ரிஷப் பண்ட் கீப்பராகவும், மயங்க் அகர்வால் பேட்ஸ்மேனாகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    ஹனுமா விஹாரி

    ஜடேஜாவுக்குப் பதில் ஷர்துல் தாகூர் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் சற்று குழப்பமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நிலையில் இருக்கும்போது, ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா 338 ரன்னில் ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்தார். விஹாரி 2-வது இன்னிங்சில் அஸ்வினுடன் இணைந்து போட்டியை டிரா ஆக்கினார்.
    ×