என் மலர்
விளையாட்டு
வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போனர் 90 ரன்னிலும், சில்வா 92 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 82 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 409 ரன்கள் குவித்தது.
வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜயத், தைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 71 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் ரஹிம் 54 ரன்னும், விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் 71 ரன்னும், மெஹிதி ஹசன் 57 ரன்னும் எடுத்தனர். இறுதியில், வங்காளதேசம் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கார்ன்வால் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 113 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அரை சதம் (51 ரன்) அடித்து ஆட்டமிழந்தார். பஹிம் அஷ்ரப் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரிடோரியஸ் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 145 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ், வான் பிஜியன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் மற்றும் வான் பிஜியன் தலா 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 25 ரன்னும், கிளாசன் 17 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் பிரிடோரியஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 14-ம் தேதி நடைபெற உள்ளது.
2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணி விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. ஷுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரஹானே, 6. ரிஷப் பண்ட், 7. அக்சார் பட்டேல், 8. அஷ்வின், 9. குல்தீப் யாதவ், 10. இஷாந்த் சர்மா, 11. முகமது சிராஜ்.
இங்கிலாந்து அணி:-
1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி, 3. டேனியல் லாரன்ஸ், 4. ஜோ ரூட், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஒல்லி போப், 7. பென் போக்ஸ், 8. மொயீன் அலி, 9. ஸ்டூவர்ட் பிராட், 10. ஜேக் லீச், 11. ஒல்லி ஸ்டோன்
முதலாவது டெஸ்டில் தடுமாற்றம் கண்ட இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே சென்னையில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சொந்த மண்ணில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறோம். கடைசியாக உள்ளூரில் நாங்கள் விளையாடிய டெஸ்ட் தொடரில் எனது ஸ்கோரை (2019-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிராக 86, 61 ரன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 59 மற்றும் 115 ரன் எடுத்தார்) பார்த்தால் அதில் நான் எப்படி விளையாடி இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.
எந்த ஒரு தனிப்பட்ட வீரரின் சாதனையை விட ஒரு அணியாக எப்படி செயல்படுகிறோம் என்பதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. அணிக்கு நம்மால் எப்படி பங்களிப்பு அளிக்க முடியும் என்பதில் தான் எனது முழு கவனமும் உள்ளது. கடந்த 10-15 டெஸ்டுகளில் எனது தனிப்பட்ட செயல்பாட்டை திரும்பிப் பார்த்தால், நான் கணிசமாக ரன்கள் சேர்த்திருப்பது தெரியும். வெளியில் என்னைப் பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் போட்டிக்கான ஆடுகளத்தை பார்க்கவே வித்தியாசமாக தெரிகிறது. நிச்சயம் முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பும். முதல் பகுதியில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விட்டு இதில் கவனம் செலுத்த வேண்டும். இங்குள்ள சூழலை நாங்கள் நன்றாக அறிவோம். இங்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்தார்.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலாவது டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட 50 சதவீதம் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து 2-வது டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன் லைனில் விற்கப்பட்ட டிக்கெட் அரைமணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தினமும் 14 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரில் போட்டியை கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் வருகை இந்திய அணி வீரர்களுக்கு எழுச்சி பெறுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.
எஞ்சிய மூன்று டெஸ்டுகளில் ஒன்றில் தோற்றாலும் இ்ந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. குறைந்தது 2 வெற்றி, ஒரு டிரா என்ற வகையிலாவது முடிவு காண வேண்டும். அந்த வகையில் இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்றே சொல்லலாம்.
முதலாவது டெஸ்டில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி விட்டனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்ததுமே ஆட்டம் ஏறக்குறைய நமது கையை விட்டு போய் விட்டது. முதலாவது இன்னிங்சில் புஜாரா, ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட்கோலி, சுப்மான் கில் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இருப்பினும் யாராவது ஒருவர் மூன்று இலக்கத்தை கடந்து பெரிய ஸ்கோரை எட்டியிருந்தால் தோல்வியில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உருவாகி இருக்கும். துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவின் (1, 0) தடுமாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
இதே போல் சுழலில் ஷபாஸ் நதீம், வாஷிங்டன் சுந்தர் வள்ளல் பவுலர்களாக மாறிப் போனார்கள். இதனால் இந்த டெஸ்டில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை. கால்முட்டி காயத்தால் அவதிப்பட்ட ஆல்-ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான அக் ஷர் பட்டேல் குணமடைந்து விட்டதால் இந்த டெஸ்டில் அவர் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கிறார். ஷபாஸ் நதீம் நீக்கப்படுகிறார். வாஷிங்டன் சுந்தரை பொறுத்தவரை அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார்களா? என்பது போட்டிக்கு முன்பே தெரிய வரும். மொத்தத்தில் முதலாவது டெஸ்ட் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.
இங்கிலாந்து அணி தொடக்க டெஸ்டில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும். ஆனாலும் ஆச்சரியப்படும் வகையில் அந்த அணி 4 மாற்றங்களை செய்துள்ளது. வீரர்களுக்கு பணிச்சுமையை குறைக்க சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ தாக்குதலில் மிரள வைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன், சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மற்றும் வலது முழங்கையில் காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், மொயீன் அலி, ஆலி ஸ்டோன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
தொடக்க டெஸ்டில் இரட்டை சதம் நொறுக்கி ஹீரோவாக ஜொலித்த கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரைத் தான் இங்கிலாந்து அதிகம் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று விளையாடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும் என்பதில் சந்தேகமில்லை. முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் இன்றைய டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் தங்களை தயார்படுத்தி உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எஞ்சிய 3 டெஸ்டில் குறைந்தது 2-ல் வெற்றி பெற வேண்டி இருப்பதால் இந்த டெஸ்ட் இங்கிலாந்துக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
முதலாவது டெஸ்டுக்கான ஆடுகளத்தில் முதல் இரண்டரை நாட்கள் சுழல் துளியும் எடுபடவில்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மலைபோல் ரன் குவித்து விட்டனர். இந்த டெஸ்டுக்கு அருகில் உள்ள மற்றொரு ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. முதலாவது டெஸ்டுக்குரிய ஆடுகளம் முழுக்க முழுக்க செம்மண்ணால் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆடுகளத்தில் மேல் அடுக்கில் கரிசல் மண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெயிலில் ஆடுகளம் நன்கு காய்ந்து உலரும் போது, வெடிப்பு ஏற்பட்டு சீக்கிரமாகவே பந்து சுழன்று திரும்ப தொடங்கி விடும். அதாவது முதல் நாளிலேயே பந்தில் ஓரளவு சுழற்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கு உகந்ததாக அமையுமா? அல்லது இந்த சூழலையும் இங்கிலாந்து சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அச்சுறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கையே விரும்பும்.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சுப்மான் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக் ஷர் பட்டேல், ஜஸ்பிரிபுத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ்.
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, டேன் லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், கிறிஸ் வோக்ஸ் அல்லது ஆலி ஸ்டோன்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் நடக்கிறது.
இந்த ஏலப்பட்டியலில் 814 இந்தியர்கள், 283 வெளிநாட்டினர். ஆக மொத்தம் 1,097 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். மேலும் 17 வீரர்கள் பதிவு செய்ததால் மொத்தம் எண்ணிக்கை 1,114 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 292 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும் மூன்று அசோசியேட் நாட்டு அணி வீரர்களும் ஏலம் விடப்படுகிறார்கள்.
புதிதாக பதிவு செய்யப்பட்ட 17 பேரில் ஷான்மார்ஷ் (ஆஸ்திரேலியா), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), மார்னே மார்கல் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேக் வில்தர் மூத் இடம் பிடித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தனது தடை காலம் முடிந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் அவரது பெயர் ஏலத்துக்காக இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஏலப்பட்டியலில் உள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியின் மகன் சாகித் கிர்மானி இடம் பெற்று இருக்கிறார்.
தங்களது அணிகளால் கழட்டி விடப்பட்ட மேக்ஸ் வெல், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), காலின் இங்கிராம் (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட், மொய்ன்அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், பிளான் கட் (இங்கிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) மற்றும் இந்தியாவை சேர்ந்த கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகிய 11 வீரர்களுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், ஸ்டீவ் சுமித்தை ராஜஸ்தான் அணியும் கை கழுவியது. அவர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலெக்ஸ் கேரி, முஜுபுர் ரகுமான், டாம் கரண், டேவிட் மலன் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.1.5 கோடியும், விகாரி உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.1 கோடியும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தாலும் இருந்தாலும், 61 வீரர்கள்தான் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதற்காக 8 அணிகளும் 196.6 கோடியை செலவழிக்க தயார் நிலையில் உள்ளது.
ஏற்கனவே 8 அணிகளும் 139 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.483.39 கோடியை செலவழித்து உள்ளது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- அனஸ்தசியா பொடபோவா (ரஷியா) மோதினர்.
இதில் செரீனா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஜா 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஜரினா தியாசை (கஜகஸ்தான்) தோறகடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் சபாலென்சா (பெலாரஸ்), சு-வெய் (தைவான்) ஆகியோர் வென்றனர்.
சென்னை;
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப் பாக்கம் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு இந்தியா 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற 2 டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட் கோலி அணிக்கு இருக்கிறது. 3 வது டெஸ்ட் பகல் இரவாக நடைபெறுவதால் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது அவசியமானதாகும். இங்கிலாந்தை பழி தீர்த்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது
சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகும் இந்திய அணி தோற்றதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.
இதனால் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும். முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அக்ஷர் படேல் குணமடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் 2-வது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் இடம் பெற்றுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. முதல் டெஸ்டில் அணியில் சேர்க்கப்பட்ட ஷபாஸ் நதீம், ராகுல் சாகர் ஆகியோர் திரும்ப பெறப்பட்டுள்ளனர். இதனால் நளைய டெஸ்டில் அக்ஷர் படேல் விளையாடுவார்.
வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவார்.
சுழற்பந்தில் அஸ்வின் ஒருவரே நேர்த்தியாக பந்து வீசுகிறார். அவர் கடந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது. பும்ராவும், இஷாந்த் சர்மாவும் தொடர்ந்து இடம்பெறுவார்கள்.
மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு ரகானே இதுவரை நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ரோகித் சர்மா கடந்த 3 டெஸ்டிலும் சேர்த்து 147 ரன்களே எடுத்துள்ளார். இதனால் இருவரும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கேப்டன் விராட் கோலி, புஜாரா, சுப்மன்கில் , ரிஷப்பண்ட் ஆகியோர் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் முதல் இன்னிங்சில் அதிக அளவில் ரன்களை குவிக்க முடியும்.
இந்த டெஸ்டிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வது டெஸ்டில் ஆடுகளம் மாற்றி அமைக்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. கேப்டன் ஜோ ரூட் அந்த அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருக்கிறார்.
அவர் கடந்த 3 டெஸ்டிலும் இரண்டு இரட்டை சதம் உள்பட 3 சதம் அடித்து முத்திரை பதித்து உள்ளார். முதல் டெஸ்டில் ஜோ ரூட் மொத்தம் 258 ரன்கள் குவித்தார்.அவர் தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். இந்திய பவுலர்களுக்கு அவர் தொடர்ந்து சவாலாக விளங்குவார்.
இதுதவிர பென் ஸ்டோக்ஸ், டாம் சிப்லி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் பட்லருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் பென் போக்ஸ் இடம்பெறுகிறார்.
முன்னணி வேகப்பந்து வீரரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அல்லது கிறிஸ் வோக்ஸ் இடம்பெறலாம். ஆண்டர்சன், டாம் பெஸ், ஜேக் லீச் ஆகியோர் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இரு அணிகளும் மோதிய 123 டெஸ்டில் இந்தியா 26ல், இங்கிலாந்து 48ல் வெற்றி பெற்றுள்ளன.49 டெஸ்ட் டிரா ஆனது.
நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






