என் மலர்
விளையாட்டு

மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நமோமி ஒசாகா (ஜப்பான்)-14-ம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஜெர்மனி) மோதினார்கள்.
இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முதல் செட்டை முகுருஜா 6-4 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதற்கு அடுத்த செட்டில் ஒசாகா சுதாரித்து ஆடி 6-4 என்ற கணக்கில் வென்றார்.
அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது செட்டையும் அவர் 7-5 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 4-6, 6-4, 7-5.
முகுருஜா கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது 4-வது சுற்றோடு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
10-வது வரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் பெலாரசை சேர்ந்த சபலென்காவை எதிர்கொண்டார். இதில் செரீனா 6-4, 2-6, 6-4 என் செட் கணக்கில் வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் சூவி 6-4, 6-2 என்ற கணக்கில் வாண்டரஸ் சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான கேமரூன் நோர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பானக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 14-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி செர்பியாவின் கிராஜ்னோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.
சர்வதேச டென்னிசில் மெத்வதேவ் தொடர்ச்சியாக பெற்ற 17-வது வெற்றி இதுவாகும். அத்துடன் 5 செட் வரை நீடித்த ஒரு ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போனர் 90 ரன்னிலும், சில்வா 92 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 82 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 409 ரன்கள் குவித்தது.
வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜயத், தைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 71 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் ரஹிம் 54 ரன்னும், விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் 71 ரன்னும், மெஹிதி ஹசன் 57 ரன்னும் எடுத்தனர். இறுதியில், வங்காளதேசம் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கார்ன்வால் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 113 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அரை சதம் (51 ரன்) அடித்து ஆட்டமிழந்தார். பஹிம் அஷ்ரப் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரிடோரியஸ் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 145 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ், வான் பிஜியன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் மற்றும் வான் பிஜியன் தலா 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 25 ரன்னும், கிளாசன் 17 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் பிரிடோரியஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 14-ம் தேதி நடைபெற உள்ளது.






