என் மலர்
விளையாட்டு
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் 286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணியின் அக்ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 17-ம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொண்டார்.
2 மணி 16 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் போக்னினியை விரட்டியடித்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்த 10-ம் நிலை வீரரான இத்தாலியின் பெரேட்டினி முந்தைய சுற்று ஆட்டத்தின் போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சிட்சிபாஸ் 4-வது சுற்றில் ஆடாமலேயே 2-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.
தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மெக்டொனால்டை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார். மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 29 நிமிடம் தேவைப்பட்டது. இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 7-6 (7-3) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் போது அவரை எதிர்த்து ஆடிய 28-ம் நிலை வீரரான காஸ்பெர் ரூட் (நார்வே) வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் ஆந்த்ரே ரூப்லெவ் வெற்றி பெற்று முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் மெட்விடேவ்-ஆந்த்ரே ரூப்லெவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீராங்கனையான செல்பி ரோஜர்சை (அமெரிக்கா) விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா 7-6 (7-5), 7-5 என்ற நேர்செட்டில் 16-வது இடத்தில் உள்ள எலிசி மெர்டென்சுக்கு (பெல்ஜியம்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் கரோலினா முசோவா, ஆஷ்லி பார்ட்டியை எதிர்கொள்கிறார்.
இதேபோல் 61-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-1, 7-5 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றி முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி கண்டார். கால்இறுதியில் ஜெனிபர் பிராடி- ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

சேப்பாக்கம் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. சுழற்பந்து வீரரான அவர் 43 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் கும்ப்ளேக்கு அடுத்தபடியாக அஸ்வின் 2-வது இடத்தை பிடித்தார். அவர் ஹர்பஜன்சிங்கை முந்தினார்.
35 வயதான அஸ்வின் 76 டெஸ்டில் 391 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதில் இந்தியாவில் 268 விக்கெட் (45 டெஸ்ட்) எடுத்துள்ளார். சொந்த மண்ணில் கும்ப்ளே 350 விக்கெட் (63) வீழ்த்தி உள்ளார். ஹர்பஜன் சிங் 265 விக்கெட் (55) எடுத்துள்ளார். ஆனால் சராசரியில் கும்ப்ளே யை விட அஸ்வின் சிறப்பான நிலையில் உள்ளார்.
இடக்கை பேட்ஸ்மேனான ஸ்டூவர்ட் பிராட்டை அஸ்வின் அவுட் செய்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் இடது கை பேட்ஸ்மேன்களில் 200 விக்கெட் கைப்பற்றிய (மொத்த விக்கெட் 398 ) முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போதுள்ள வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) 190 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 29-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5-வது நிகழ்வாகும். கும்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக உள்ளார். இவர் 35 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சேப்பாக்கம் ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்பியதால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆனாலும் இந்திய வீரர்களில் ரோகித்சர்மா, ரகானே, ரிஷப்பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள்.ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் சிறப்பாக ஆட முடியவில்லை.
இதற்கிடையே இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சேப்பாக்கம் ஆடுகளத்தை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டார். இதற்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே பதில் அளித்தார். இருவருக்கும் இடையே நடந்த வாதம் டுவிட்டரில் வார்த்தை போராக மாறியது. அதன் விவரம் வருமாறு:-
வாகன்:- சேப்பாக்கம் ஆடுகளம் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியா சிறப்பாக ஆடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது 5 நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட ஆடுகளம் அல்ல.
வார்னே:- டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானது. காரணம் முதல் டெஸ்டில் முதல் 2 நாட்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. ஆனால் 2-வது டெஸ்டில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்புகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவை 220 ரன்களுக்கு சுருட்டி இருக்க வேண்டும்.
இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரோகித் சர்மா நிரூபித்து காட்டி உள்ளார்.
வாகன்:- இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ததை போல் முதல் டெஸ்டில் ஆடி இருந்தால் டிரா செய்து இருக்கலாம். இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்தது அல்ல.
வார்னே:- முதல் டெஸ்டில் கடைசி சில நாட் களில் தான் ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை என்ற போது ஆடுகளம் குறித்து யாரும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
இந்த டெஸ்டில் குறைந்த பட்சம் இரண்டு அணிகளுக்கும் முதல் பந்தில் இருந்தே ஒரே நிலை தான். இங்கிலாந்து மோசமாக பந்து வீசியது. ரோகித், ரிஷப்பண்ட், ரகானே ஆகியோர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காண்பித்துள்ளனர்.
பந்து பிட்ச் ஆன பிறகு பாதையில் விலகுவதற்கும், சுழல்வதற்கும் வித்தியாசம் இல்லை. பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையே எப்போதும் நியாயமான போட்டி வேண்டும்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை விட இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. அபாரமாக பந்தும் வீசியுள்ளது. இந்த ஆடுகளம் அதிகப்படியாக பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது.
வாகன்:- அனைத்து வகையிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் முதல் பந்தில் இருந்தே ஆடுகளம் ஒரே மாதிரி இல்லை. உள்நாட்டில் சாதகம் பெற ஆடுகளத்தை எப்படி வேண்டுமோ அப்படி தயாரித்துக்கொள்ளலாம்.
ஆனால் டெஸ்ட் ஆட்டத்துக்கு இந்த ஆடுகளம் மோசமானது. நான் இந்திய அணியாக இருந்திருந்தால் இதையே தான் செய்திருப்பேன்.
இவ்வாறு இருவரும் டுவிட்டரில் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து விவாதித்து கொண்டனர்.
சென்னை:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது.
பென் போக்ஸ் அதிகபட்சமாக 42 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட்டும், இசாந்த் சர்மா, அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
195 ரன்கள் முன்னிலையில் 2-வதுஇன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்து இருந்தது.
சுப்மன் கில் 14 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 25 ரன்னிலும் , புஜாரா 7 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 249 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 65 ரன்னில் 4 விக்கெட்டுகள் விழுந்தன.
ரோகித்சர்மா 26 ரன்னிலும், ரிஷப்பண்ட் 8 ரன்னிலும் லீச் பந்தில் ஆட்டம் இழந்தனர். புஜாரா 7 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
ரகானே 10 ரன் எடுத்து இருந்த போது மொய்ன் அலி பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்ஷர் படேல் 7 ரன்னிலும் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தது. பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகள் எளிதில் விழுகின்றன. இதனையடுத்து விராட் கோலியும் அஸ்வினும் நிதானாமாக ஆடி வருகின்றனர்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 351 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் இந்த டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டை பொறுத்த வரை இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, (7-4), 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) வெளியேற்றி 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் பெற்ற 300-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் செர்பியாவின் துசன் லாஜோவிச்சை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.






