என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சேப்பாக்கம் 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அஷ்வின், ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 161 ரன்கள் விளாசினார். அஷ்வின் 8 விக்கெட் வீழ்த்தியதுடன், சதம் அடித்தார். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.

    சதம் விளாசிய ரோகித் சர்மா 14-வது இடத்திற்கு முன்னேறினார். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அவரது சிறந்த இடம் இதுவாகும்.

    சதம் அடித்த அஷ்வின் 14 இடங்கள் முன்னேறி 81-வது இடத்தில் உள்ளார். 8 விக்கெட் வீழ்த்தியதால் பந்து வீச்சு தரவரிசையில் 7-வது இடத்தில் நீடிக்கிறார். 33 புள்ளிகள் அதிகம் பெற்ற அஷ்வின் 6-வது இடத்தில் இருக்கும் ஸ்டூவர்ட் பிராட்டை விட 3 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

    ரிஷப் பண்ட் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அவரின் சிறந்த இடமாகும். முதல் இடத்தில் கேன் வில்லியம்சன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திலும், லாபஸ்சேன் 3-வது இடத்திலும், ஜோ ரூட் 4-வது இடத்திலும், விராட் கோலி  5-வது இடத்திலும் உள்ளனர்.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.
    உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஐபிஎல் முதன்மையாக விளங்குகிறது. சுமார் 60 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் விளையாட அனைத்து நாட்டின் வீரர்களும் விரும்புகிறார்கள். வீரர்களுக்கு அதிகமான பணம் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் அனுபவமும் கிடைக்கிறது.

    இதனால் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா. வெஸ்ட் இண்டீஸ் போன்ற கிரிக்கெட் போர்டுகள் வீரர்களை அனுப்புவதில் தடைஏதும் விதிப்பதில்லை.

    இந்த வருடம் நடைபெறும் ஏலம் மெகா ஏலம் இல்லை என்றாலும், 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இதில் 164 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள்.

    மொத்தம் 1114 வீரர்கள் பதிவு செய்ததில் 292 பேர் இடம் பிடித்துள்ளனர். நாளை சென்னையில் மதியம் 3 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரராக இருக்கலாம். கைவசம் 19.90 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வீரர்களை எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 13.4 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம்) 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 5 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 53.20 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 10.75 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 4 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 15.35 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 37.85 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் 35.40 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவார். கைவசம் 10.75 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    வீரர்கள் எலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - 25-வது இடத்தில் உள்ள கரோலினா முச்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

    இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்லே பார்டி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். முச்கோவா 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்லேவை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    கரோலினா முச்கோவா அரை இறுதியில் 22-ம் நிலை வீராங்கனையான ஜெனிபர் பிராடியுடன் (அமெரிக்கா) மோதுகிறார்.

    பிராடி கால் இறுதியில் 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார்.

    மற்றொரு அரை இறுதியில் நவோமி வசோகா (ஜப்பான்)- செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்)- 5-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த மெட்வதேவ்- ருப்லேவ் மோதுகிறார்கள்.

    2-வது டெஸ்டில் இந்திய அணி எங்களை அனைத்து துறையிலும் வீழ்த்திவிட்டது என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியிடம் 227 ரன் வித்தியாசத்தில் தோற்றதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் மூலம் 4 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 5-வது மிகப் பெரிய ரன் வித்தியாச வெற்றி இதுவாகும். 2015-ம் ஆண்டு டெல்லியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 337 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதல் நிலையாக இருக்கிறது.

    இந்த வெற்றி மூலம் விராட் கோலியின் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியால் இங்கிலாந்து அணி 4-ம் இடத்தில் பின் தங்கியது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு சென்னையை சேர்ந்த அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார்.

    96 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் சதம் அடித்தும் (106 ரன்) சாதித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    தனது முதல் டெஸ்டில் விளையாடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார். அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 9-வது வீரர் என்ற பெயருமையை அவர் பெற்றார்.

    விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் 21-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அவர் டோனியின் சாதனையை சமன் செய்தார்.

    இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து விராட் கோலி கூறும்போது, ‘‘நாங்கள் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், ரி‌ஷப் பண்ட் ஆகியோரது பணி பாராட்டுக்குரியது. இந்த டெஸ்டில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கவில்லை’’ என்றார்.

    தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கூறியதாவது:-

    2-வது டெஸ்டில் விளையாடிய சேப்பாக்கம் ஆடுகளம் சவாலாக இருந்தது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அதுதான் எங்களது தோல்விக்கு உத்தரவாதமாக இருந்தது என்று சொல்ல மாட்டேன்.

    இந்த தோல்வி மூலம் நாங்கள் பல வி‌ஷயங்களை பாடமாக கற்றுள்ளோம். இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் எழுச்சி பெற்று வலிமையுடன் மீண்டு வருவோம்.

    இந்த டெஸ்டில் இந்திய அணி எங்களை அனைத்து துறையிலும் வீழ்த்திவிட்டது. பாராட்டு எல்லாம் இந்திய அணியை சாரும்.

    இவ்வாறு ஜோரூட் கூறினார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4163 ரன்கள் (சராசரி 40.02) அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 10 சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 2020ம் ஆண்டு 199 ரன்கள் அடித்ததே ஒரு இன்னிங்சில் இவரது அதிகபட்ச ரன் ஆகும். 

    இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக டு பிளெசிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் மனம் தெளிவாக உள்ளது. புதிய அத்தியாயத்திற்குள் செல்வதறகு இதுவே சரியான தருணம். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு கவுரவம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

    அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக, எனது கவனம் இந்த குறுகியகால போட்டிக்கு மாறுகிறது. மேலும் உலகம் முழுவதும் முடிந்தவரை இந்த போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இதனால் நான் சிறந்த வீரராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிளெசிஸ், முதல் போட்டியிலேயே சர்வதேச கவனம் பெற்றார். முதல் இன்னிங்சில் 78 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தது மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. இந்த மாத துவக்கத்தில் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதே இவரது கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இனி பஞ்சாப் கிங்ஸ் என அழைக்கப்பட உள்ளது என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று வரும் அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

    இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் புதிய பெயருடன் களம் இறங்க உள்ளது.

    இதுதொடர்பாக,  அந்த அணியின் இணை உரிமையாளர் மொஹித் பர்மன் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இனிமேல் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று அழைக்கப்படும். அணிக்கு புதிய தோற்றம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன.

    இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி நாட்டின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் விளையாடினர்.

    இந்தப் போட்டியின் முதல் செட்டை கடுமையாகப் போராடி அலெக்சாண்டர் 6-7(6) கைப்பற்றினார். ஆனாலும், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றிய ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார்.

    ஏறக்குறைய 3 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 6-7(6), 6-2, 6-4, 7-6(8) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  அவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடிய அஸ்லான் கரத்சேவ் உடன் அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.
    என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
    முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29-வது முறையாக ஐந்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் சதம் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தைப் பதிவு செய்தார். சொந்த மண்ணில் சதம் விளாசுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

    அஸ்வின் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறை ஆகும். இந்த சாதனையை ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் 2 இன்னிங்சிலும் சேர்த்து 119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில், என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என தமிழக வீரர் அஸ்வின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேர்ஸ்டோவ், மார்க் வுட் அணியில் இணைந்துள்ளனர்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகின்றனர். இதனால் வீரர்கள் மனதளவில் பாதிப்படைவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சுழற்சி முறையில் வீரர்களை களம் இறக்கி வருகிறது.

    முதல் டெஸ்டில் ஜோஸ் பட்லர், டொமினிக் பெஸ், ஆர்ச்சர், ஜேம் ஆண்டர்சன் இடம் பெற்றிருந்தனர். 2-வது டெஸ்டில் இவர்கள் நீக்கப்பட்டு ஒல்லி ஸ்டோன், மொயீன் அலி, பென் போக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து மொயீன் அலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மார்க் வுட், பேர்ஸ்டோவ் அணிக்கு திரும்பியுள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜாஃப்ரா ஆர்ச்சர், 4. பேர்ஸ்டோவ், 5. டொமினிக்  பெஸ், 6. ஸ்டூவர்ட் பிராட், 7. ரோரி பேர்ன்ஸ், 8. ஜாக் கிராவ்லி, 9. பென் போக்ஸ், 10. டான்  லாரன்ஸ், 11. ஜேக் லீச், 12. ஒல்லி போப், 13. டொமினிக் சிப்லி, 14. பென் ஸ்டோக்ஸ், 15. ஒல்லி ஸ்டோன், 16. கிறிஸ் வோக்ஸ், 17. மார்க் வுட்.
    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
    சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 69.7 சதவிகிதத்துடன், 460 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக்கில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஆறு அணிகளோடு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.

    அதில் மூன்று தொடர் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும் என்பது நிபந்தனை. அந்த தொடர்கள் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர்களாக இருக்க வேண்டும். அதில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி வரும் ஜூன் 2021-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவித்தது ஐசிசி.

    இப்போது அந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணி 70 சதவிகிதத்துடன் 420 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டியில் விளையாடுவதையும் அந்த அணி உறுதி செய்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக இப்போது இறுதி போட்டியில் விளையாடப் போவது யார் என்பதற்குதான் இப்போது போட்டா போட்டி நடக்கிறது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடும் 4 போட்டிகள் கொண்ட நடப்பு டெஸ்ட் தொடர்தான் இறுதி போட்டியில் விளையாடப் போகும் மற்றொரு அணி எது என்பதை உறுதி செய்யும் தொடராக அமைந்துள்ளது.

    இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது சற்று பின்னடைவாக இருந்தது. ஆனால் இப்போது இரண்டாவது போட்டியில் வெற்றிப்பெற்று சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்புக்கான ரேசில் தனது இடத்தை உறுதி செய்தது இந்தியா.

    இந்தத் தொடரை இந்தியா 3-1, 2-1 என்று வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி இடத்தை உறுதி செய்யும். அதேவேளையில் இங்கிலாந்து 3-1 என வென்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்த நிலையில் விராட் கோலி அதற்கு பதில் அளித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2-வது இன்னிங்சில் 164 ரன்களும் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஆடுகளத்தில் பந்து முதல் நாளின் முதல் பந்தில் இருந்தே டர்ன் ஆக ஆரம்பித்தது. இந்திய அணி டாஸ் தோற்றிருந்தால் போட்டியில் வெற்றி பெற்றிருக்காது. இது ஒரு சவாலான ஆடுகளம் எனத் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி கூறுகையில் ‘‘ஆடுகளம் டர்ன் ஆகிறது, பவுன்ஸ் ஆகிறது என்பது பற்றி நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் எங்களுடைய மனஉறுதியை வெளிப்படுத்தி, சிறந்த ஆட்டத்தை தொடர்ந்தோம். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 600 ரன்கள் சேர்த்துள்ளோம். நாங்கள் போதுமான அளவிற்கு ரன்கள் எடுத்துவிட்டால், பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

    டாஸ் பெரிய விசயமே அல்ல. நீங்கள் எங்களுடைய 2-வது இன்னிங்சை பார்த்தீர்கள் என்றால் ஏறக்குறைய 300 ரன்கள் அடித்திருப்போம். டாஸ்தான் காரணம் என்றால் அது நியாயமானது அல்ல. எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி, இரண்டு அணிகளும், முதல் செசனில் இருந்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். போட்டியில் இதுதான் சரியானது.

    ரசிகர்கள் இன்றி முதல் போட்டியில் விளையாடியது சற்று விசித்திரமாக இருந்தது. முதல் இரண்டரை நாட்களில் ஆடுகளம் மிகவும் பிளாட்ஆக இருந்தது. நான் உள்பட வீரர்கள் எனர்ஜியை பெற முடியவில்லை.

    ரசிகர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த போட்டியில் நாங்கள் மன உறுதியுடன் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த உதாரணம். அதற்கு ரசிகர்கள் கூட்டம் முக்கிய காரணம். கடுமையான வெயில் தாக்கத்தில் நான் பந்து வீச ஓடும்போது, ரசிகர்கள் என்னை உத்வேகம் செய்ய வேண்டியது அவசியம். இது எங்களுக்கு சரியான போட்டியாக அமைந்தது’’ என்றார்.
    ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
    ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப்பை எதிர் கொண்டார்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டு செட்களையும் 6-3, 6-3 என எளிதாக கைப்பற்றி ஹாலெப்பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். செரீனாவுக்கு இது 9-வது அரையிறுதியாகும். ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 40-வது அரையிறுதியாகும்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா தர நிலை பெறாக தைவான் வீராங்கனை சியேஹ் சு-வெய்யை எதிர்கொண்டார். இதில் நவோமி ஒசாகா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இருவரும் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ×