search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோரூட்
    X
    ஜோரூட்

    அனைத்து துறைகளிலும் வீழ்ந்து விட்டோம் - தோல்வி குறித்து ஜோரூட் கருத்து

    2-வது டெஸ்டில் இந்திய அணி எங்களை அனைத்து துறையிலும் வீழ்த்திவிட்டது என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியிடம் 227 ரன் வித்தியாசத்தில் தோற்றதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் மூலம் 4 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 5-வது மிகப் பெரிய ரன் வித்தியாச வெற்றி இதுவாகும். 2015-ம் ஆண்டு டெல்லியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 337 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதல் நிலையாக இருக்கிறது.

    இந்த வெற்றி மூலம் விராட் கோலியின் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியால் இங்கிலாந்து அணி 4-ம் இடத்தில் பின் தங்கியது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு சென்னையை சேர்ந்த அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார்.

    96 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் சதம் அடித்தும் (106 ரன்) சாதித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    தனது முதல் டெஸ்டில் விளையாடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார். அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 9-வது வீரர் என்ற பெயருமையை அவர் பெற்றார்.

    விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் 21-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அவர் டோனியின் சாதனையை சமன் செய்தார்.

    இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து விராட் கோலி கூறும்போது, ‘‘நாங்கள் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், ரி‌ஷப் பண்ட் ஆகியோரது பணி பாராட்டுக்குரியது. இந்த டெஸ்டில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கவில்லை’’ என்றார்.

    தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கூறியதாவது:-

    2-வது டெஸ்டில் விளையாடிய சேப்பாக்கம் ஆடுகளம் சவாலாக இருந்தது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அதுதான் எங்களது தோல்விக்கு உத்தரவாதமாக இருந்தது என்று சொல்ல மாட்டேன்.

    இந்த தோல்வி மூலம் நாங்கள் பல வி‌ஷயங்களை பாடமாக கற்றுள்ளோம். இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் எழுச்சி பெற்று வலிமையுடன் மீண்டு வருவோம்.

    இந்த டெஸ்டில் இந்திய அணி எங்களை அனைத்து துறையிலும் வீழ்த்திவிட்டது. பாராட்டு எல்லாம் இந்திய அணியை சாரும்.

    இவ்வாறு ஜோரூட் கூறினார்.

    Next Story
    ×