என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்தார்.
    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சிப்லி (2), கிரவுலி (9) இருவரையும் சுழற்பந்து வீரர் அக்சர் பட்டேல் விரைவில் வெளியேற்றினார். 

    அதன்பின்னர் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. எனினும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் எதிர்பார்த்த ரன் ரேட்டை எட்ட முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டும் சரிந்தது.

    75.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். லாரன்ஸ் 46 ரன்களும், பேர்ஸ்டோவ் 28 ரன்களும், போப் 29 ரன்களும் சேர்த்தனர்.

    இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட், சிராஜ் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
    சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

    இந்த போட்டியை ஏப்ரல் 8-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் தொடங்க முடிவு செய்துள்ளது. மே மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மும்பையில் மட்டும் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா 2-வது அலை வீசுவதால் மும்பையில் எந்த ஒரு ஐ.பி.எல். ஆட்டத்தையும் நடத்த பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.

    சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல். போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான இடங்கள் குறித்து ஆட்சிமன்ற குழுவில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டிக்கான இடங்கள் தொடர்பாக மாநில அரசுகளிடம் கிரிக்கெட் வாரியம் முதலில் உத்தரவாதம் தரவேண்டும்.

    பஞ்சாப்பா? அல்லது ஐதராபாத்தா? என்று யூகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. எந்த இடங்களில் போட்டி நடைபெறும் என்பது குறித்து ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவில் இறுதி முடிவு செய்யப்படும்.

    மும்பையில் கொரோனாவின் தன்மை குறித்து கண்காணிக்கப்படும் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவில் விவாதிக்கப்படும்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை போல்லார்ட் பெற்றார்.
    ஆன்டிகுவா:

    இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 132 ரன் இலக்காக இருந்தது.

    நிசன்கா அதிகபட்சமாக 34 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிரோ‌ஷன் டிக்வெலா 29 பந்தில் 33 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். மெக்காய் 2 விக்கெட்டும், சின்கிளையர், எட்வர்ட்ஸ், ஜேசன் ஹோல்டர், பிராவோ, பேபியன் ஆலன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் போல்லார்ட் 11 பந்தில் 38 ரன்னும் (6 சிக்சர்), ஹோல்டர் 24 பந்தில் 29 ரன்னும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), லீவிஸ் 10 பந்தில் 28 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தில் 2 சாதனை படைக்கப்பட்டது. இலங்கை சுழற்பந்து வீரர் அகிலா தனஞ்செயா 3 பந்தில் 3 விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவரது பந்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் போல்லார்ட் 6 பந்தில், 6 சிக்சர் அடித்து முத்திரையை பதித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியபோது 6-வது ஓவரை தனஞ்செயா வீசினார். இந்த ஓவரில்தான் போல்லார்ட் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை போல்லார்ட் பெற்றார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில், இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தார்.

    சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிப்பது 3-வது நிகழ்வாகும். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (2007-ம் ஆண்டு) தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிப்ஸ் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தார்.

    கிரிக்கெட் போட்டிகளில் இது 7-வது நிகழ்வாகும். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கேரி சோபர்ஸ் 1968-ம் ஆண்டு முதல் முறையாக முதல் தர போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார்.

    ரவி சாஸ்திரி (இந்தியா), அலெக்ஸ் ஹால்ஸ் (இங்கிலாந்து), ஹசரத்துல்லா (ஆப்கானிஸ்தான்) ஆகியோரும் இந்த சாதனை நிகழ்வை செய்திருந்தனர்.

    இந்த ஆட்டத்தில் தனஞ்செயா 4-வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 2-வது பந்தில் லீவிசையும், 3-வது பந்தில் கிறிஸ் கெய்லையும், 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரனையும் அவுட் செய்தார்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 15-வது வீரர் தனஞ்செயா ஆவார். 4-வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    தனஞ்செயாவின் அடுத்த ஓவரில்தான் போல்லார்ட் 6 சிக்சர் அடித்து சாதித்தார். இதனால் அவர் தனது சாதனையை கொண்டாட முடியாமல் வேதனை படும் சூழ்நிலை ஏற்பட்டது.
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது.

    முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இந்திய அணியில் இன்று ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர் பும்ரா இடத்தில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.

    இதேபோல இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் இருந்தது. ஆர்ச்சர், பிராட் ஆகியோருக்கு பதிலாக டான் லாரன்ஸ், டாம்பெஸ் சேர்க்கப்பட்டனர். இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: வீராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரி‌ஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்‌ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.

    இங்கிலாந்து: ஜோரூட் (கேப்டன்), டாம் சிப்லி, கிரவுலி, பேர்ஸ்டோவ், பென்ஸ் ஸ்டோக்ஸ், ஆலிவ் போப், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், டாம் பெஸ், ஜேக் ரீச், ஆண்டர்சன்.

    இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். டாம் சிப்லியும், கிரவுலியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    சுழற்பந்து வீரர் அக்‌ஷர் படேலின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் இங்கிலாந்து தொடக்க வீரர்களை எளிதில் சாய்தார். சிபிலி 2 ரன்னில் போல்டு ஆனார். கிரவுலி 9 ரன்னில், முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    7.5 ஓவர்களில் 15 ரன் எடுப்பதற்குள் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ்- ஜோரூட் ஜோடி ஆடி வருகிறது.
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்க உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில் வெளிநாட்டு ரசிகர்களை ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்க வாய்ப்பே இல்லை, இது பற்றி இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

    இதற்கிடையே, ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டுமா? வேண்டாமா? என்று அந்த நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 58 சதவீதம் பேர் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு 47 சதவீதம் பேர் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும், 44 சதவீதம் பேர் ரசிகர்கள் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
    வெலிங்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.
     3
    ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஆவார். நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் மார்க் சாப்மன் சேர்க்கப்பட்டார்.

    இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (69 ரன், 44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் (70 ரன், 31 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் விளாசினர். இதில் ஜேம்ஸ் நீஷம் வீசிய ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி, 2 சிக்சர் என்று 28 ரன்கள் திரட்டி அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் (4 ரன்), கேப்டன் கேன் வில்லியம்சன் (9 ரன்) விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் சாய்த்து ஆரம்ப ரன் வேகத்தை முடக்கினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் ஒரே ஓவரில் (13-வது ஓவர்) 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலைய செய்ததுடன், கடைசி கட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினார்.

    நியூசிலாந்து அணி 17.1 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 43 ரன்னும், கான்வே 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்டன் அகர் 6 விக்கெட்டும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதில் 30 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

    இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை ருசித்து 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி இதே மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி காலை 11.30 மணி) நடக்கிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் ஏலத்துக்கு முன்னதாகவே விலகினார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஏலத்துக்கு முன்னதாகவே விலகினார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் ஸ்டெயின் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டியை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரர்களும், அதிக அளவில் பிரபலமான வீரர்களும் இடம் பெற்று வருகிறார்கள். இந்த போட்டியின் மூலம் வீரர்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் சில சமயங்களில் கிரிக்கெட் ஆட்டத்தின் தனித்தன்மை மறக்கப்படுகிறது. ஆனால் மற்ற லீக் போட்டிகளில் ஆட்டத்தின் தன்மை குறித்து அதிகம் பேசப்படுகிறது’ என்று தெரிவித்து இருந்தார். ஸ்டெயினின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். பற்றிய தனது கருத்துக்கு ஸ்டெயின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். எனக்கு மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் சிறப்பானதாகவே அமைந்து இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியை மற்ற லீக் ஆட்டங்களுடன் ஒப்பிட்டு தரம் தாழ்த்தவோ? அல்லது அவமதிக்கவோ? நான் ஒருபோதும் நினைத்ததில்லை. சமூக வலைதளங்கள் பெரும்பாலும் தவறான அர்த்தங்களை வெளியிடக்கூடும். என்னுடைய கருத்து யாரையாவது வேதனைப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டெயின் ஐ.பி.எல். போட்டியில் 95 ஆட்டங்களில் ஆடி 97 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இதன் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளில் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது கட்டத்தின் 2-வது நாளான நேற்று மத்திய மந்திரிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
    ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 37), சர்வதேச அரங்கில் தொடர் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இது அவர் பங்கேற்கும் இரண்டாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டி ஆகும்.

    இந்நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் தங்கள் அனுபவங்களை மற்ற வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வதுடன், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தும் வகையிலும், ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் இயக்குனர் குழு அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் மேரி கோம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

    மேரி கோம் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளார். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சாம்பியன்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கமிட்டியின் தலைவர் பொறுப்பை வழங்கியமைக்காக, சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் உமர் கிரெம்லெவ் மற்றும் குத்துச்சண்டை குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மேரி கோம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

    மேலும், சர்வதேச குத்துச்சண்டை சங்க மேம்பாட்டிற்காக தனது சிறந்த பங்களிப்பை வழங்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார் மேரி கோம்.

    ஐ.பி.எல். போட்டியில் பணத்துக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் கிரிக்கெட் பின்னால் சென்று விட்டது எனவும் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

    கராச்சி:

    தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீரர் டேல் ஸ்டெய்ன். கடந்த ஐ.பி.எல். போட்டியில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார்.

    கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்டெய்ன் அறிவித்திருந்தார். உலகில் நடைபெறும் மற்ற லீக் போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் பணத்துக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிரிக் கெட் பின்னால் சென்று விட்டது என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கிறார்கள். அதில் அதிக அளவில் பிரபல வீரர்கள் உள்ளனர். அவர்கள் போட்டியின் மூலம் ஈட்டும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப் படுகிறது.

    ஒரு கட்டத்தில் அந்த போட்டியில் கிரிக்கெட் தன்மை பின் தள்ளப்படுகிறது. மற்ற லீக் போட்டிகளில் விளையாடுவதால் பெயர் கிடைக்கிறது.

    பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு நான் இருக்கும் நாட்களில் கடைசியாக எந்த போட்டியில் விளையாடினேன். அது எவ்வாறு இருந்தது என்று பேசுகிறார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் இருந்தால் யார் என்ன விலைக்கு வாங்கப்பட்டனர் என்பது குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது.அதிலிருந்து நான் விலகியிருக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

    37 வயதான ஸ்டெய்ன் ஐ.பி.எல். போட்டியில் 97 விக்கெட் (95 ஆட்டம்) கைப்பற்றி உள்ளார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கிளாடியேட்டர் அணியில் 20 ஓவர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    விராட் கோலி தலைமையிலான அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். டிரா செய்து தொடரை வெல்லுமா? அல்லது இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையவும் இதே நிலைதான். இந்த டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டும். இதனால் இந்திய வீரர்கள் டிரா அல்லது வெற்றிக்காக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    இங்கிலாந்து அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஒருவேளை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வாய்ப்பை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    கடந்த டெஸ்ட் போட்டி 2 தினங்களிலேயே முடிந்தது. இதனால் அகமதாபாத் ஆடுகளம் குறித்து மிகுந்த சர்ச்சை எழுந்தது. டெஸ்ட் போட்டிக்கு உகந்தது இல்லை என்று பிட்ச் குறித்து விமர்சிக்கப்பட்டது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 296 ரன்கள் எடுத்துள்ளார்.

    அஸ்வின் 3 டெஸ்டிலும் சேர்த்து 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கிறார். இதேபோல அக்‌ஷர் படேல் 2 டெஸ்டில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

    தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இதனால் அந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

    இரு அணிகளும் மோதிய 125 டெஸ்டில் இந்தியா 28-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
    ஆமதாபாத்:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 58 வயது ரவிசாஸ்திரி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். தடுப்பூசி எடுத்துக்கொண்ட படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரவிசாஸ்திரி பதிவிட்ட கருத்தில், ‘கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவை வலிமையானதாக மாற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த வீரரான 69 வயது மதன்லால் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்.
    ×