search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போல்லார்ட்
    X
    போல்லார்ட்

    20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை

    20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை போல்லார்ட் பெற்றார்.
    ஆன்டிகுவா:

    இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 132 ரன் இலக்காக இருந்தது.

    நிசன்கா அதிகபட்சமாக 34 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிரோ‌ஷன் டிக்வெலா 29 பந்தில் 33 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். மெக்காய் 2 விக்கெட்டும், சின்கிளையர், எட்வர்ட்ஸ், ஜேசன் ஹோல்டர், பிராவோ, பேபியன் ஆலன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் போல்லார்ட் 11 பந்தில் 38 ரன்னும் (6 சிக்சர்), ஹோல்டர் 24 பந்தில் 29 ரன்னும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), லீவிஸ் 10 பந்தில் 28 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தில் 2 சாதனை படைக்கப்பட்டது. இலங்கை சுழற்பந்து வீரர் அகிலா தனஞ்செயா 3 பந்தில் 3 விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவரது பந்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் போல்லார்ட் 6 பந்தில், 6 சிக்சர் அடித்து முத்திரையை பதித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியபோது 6-வது ஓவரை தனஞ்செயா வீசினார். இந்த ஓவரில்தான் போல்லார்ட் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை போல்லார்ட் பெற்றார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில், இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தார்.

    சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிப்பது 3-வது நிகழ்வாகும். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (2007-ம் ஆண்டு) தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிப்ஸ் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தார்.

    கிரிக்கெட் போட்டிகளில் இது 7-வது நிகழ்வாகும். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கேரி சோபர்ஸ் 1968-ம் ஆண்டு முதல் முறையாக முதல் தர போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார்.

    ரவி சாஸ்திரி (இந்தியா), அலெக்ஸ் ஹால்ஸ் (இங்கிலாந்து), ஹசரத்துல்லா (ஆப்கானிஸ்தான்) ஆகியோரும் இந்த சாதனை நிகழ்வை செய்திருந்தனர்.

    இந்த ஆட்டத்தில் தனஞ்செயா 4-வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 2-வது பந்தில் லீவிசையும், 3-வது பந்தில் கிறிஸ் கெய்லையும், 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரனையும் அவுட் செய்தார்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 15-வது வீரர் தனஞ்செயா ஆவார். 4-வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    தனஞ்செயாவின் அடுத்த ஓவரில்தான் போல்லார்ட் 6 சிக்சர் அடித்து சாதித்தார். இதனால் அவர் தனது சாதனையை கொண்டாட முடியாமல் வேதனை படும் சூழ்நிலை ஏற்பட்டது.
    Next Story
    ×