என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    விராட் கோலி தலைமையிலான அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். டிரா செய்து தொடரை வெல்லுமா? அல்லது இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையவும் இதே நிலைதான். இந்த டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டும். இதனால் இந்திய வீரர்கள் டிரா அல்லது வெற்றிக்காக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    இங்கிலாந்து அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஒருவேளை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வாய்ப்பை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    கடந்த டெஸ்ட் போட்டி 2 தினங்களிலேயே முடிந்தது. இதனால் அகமதாபாத் ஆடுகளம் குறித்து மிகுந்த சர்ச்சை எழுந்தது. டெஸ்ட் போட்டிக்கு உகந்தது இல்லை என்று பிட்ச் குறித்து விமர்சிக்கப்பட்டது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 296 ரன்கள் எடுத்துள்ளார்.

    அஸ்வின் 3 டெஸ்டிலும் சேர்த்து 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கிறார். இதேபோல அக்‌ஷர் படேல் 2 டெஸ்டில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

    தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இதனால் அந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

    இரு அணிகளும் மோதிய 125 டெஸ்டில் இந்தியா 28-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
    ஆமதாபாத்:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 58 வயது ரவிசாஸ்திரி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். தடுப்பூசி எடுத்துக்கொண்ட படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரவிசாஸ்திரி பதிவிட்ட கருத்தில், ‘கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவை வலிமையானதாக மாற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த வீரரான 69 வயது மதன்லால் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்.
    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி லுட்மைலா கிச்செனோக் இணையை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.
    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மீண்டும் சர்வதேச டென்னிசுக்கு திரும்பிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா, சுலோவேனியா வீராங்கனை ஆந்ரேஜா கிளெபக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-4, 6-7 (5-7), 10-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லுட்மைலா கிச்செனோக்- நாடியா கிட்செனோக் இணையை போராடி தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தனர்.

    இந்த ஆட்டம் 1 மணி 38 நிமிடங்கள் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றில் சிக்கிய சானியா மிர்சா அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து புதிய சீசனை வெற்றியோடு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கடைசி டெஸ்டுக்கான ஆடுகளத்திலும் சுழற்பந்து வீச்சு தான் எடுபடும் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.
    ஆமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், அடுத்த இரு டெஸ்டுகளில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    3-வது டெஸ்ட் போட்டியும் இதே ஆமதாபாத்தில் தான் நடந்தது. பகல்-இரவாக பிங்க் பந்தில் நடந்த அந்த டெஸ்ட் வெறும் 2 நாட்களில் முடிந்து போனது. சுழற்பந்து வீச்சின் சொர்க்கமாக திகழ்ந்த அந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது நாளிலேயே பிங்க் பந்து டெஸ்ட் முடிந்ததால் ஆடுகளம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தரமற்ற ஆடுகளம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் சாடினர்.

    இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கூறியுள்ளார். காணொலி மூலம் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2-வது டெஸ்ட் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆடுகளம் எப்படி இருந்ததோ அதே போன்று தான் இந்த ஆடுகளமும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது சுழற்பந்து வீச்சுக்குரிய ஆடுகளம். இத்தகைய ஆடுகளத்தில் பிங்க் பந்தில் விளையாடிய போது வித்தியாசமாக இருந்தது. சிவப்பு நிற பந்தை காட்டிலும் பிங்க் பந்து மிக வேகமாக வந்தது. அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு ஆட வேண்டி இருந்தது. எது எப்படியோ கடைசி டெஸ்டுக்கான ஆடுகளம், 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் போன்றே இருக்கும்.

    ஆடுகளம் குறித்து விமர்சனவாதிகள் தாங்கள் நினைத்த எதையும் சொல்லலாம். இதுவே நாங்கள் வெளிநாடு சென்று விளையாடும் போது, எப்படி இந்த அளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தை அமைக்கலாம் என்று யாரும் பேசுவதில்லை. அப்போது பேட்டிங்கில் இந்திய வீரர்களின் தொழில்நுட்பம் குறித்து பேசுவார்கள்.

    எங்களது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் போட்டியின் முதல் நாளில் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். அதில் புற்கள் இருந்து பந்து தாறுமாறாக எகிறும் போது, ஆடுகளம் அபாயகரமாக தோன்றும். ஆனால் அது பற்றி நாங்கள் புகார் சொல்வதில்லை. ஆடுகளம் சரியில்லை என்று பேசுவதும் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களின் கருத்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

    பந்து நன்கு சுழன்று திரும்பும் ஆடுகளங்களில், சரியான லைனில் கணித்து விளையாட வேண்டும். அதுவே பந்து அதிகமாக சுழன்றால் அது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் வழக்கம் போல் ஆட வேண்டும். எந்த ஆடுகளமாக இருந்தாலும் உங்களது தடுப்பாட்டத்தில் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும்.

    இங்கிலாந்து அணியை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் மிகச்சிறந்த அணி. கடந்த இரு டெஸ்டில் நாங்கள் நன்றாக விளையாடி வெற்றி பெற்றோம். முதலாவது டெஸ்டில் உண்மையிலேயே இங்கிலாந்து அணியினர் அபாரமாக ஆடினர். எந்த வகையிலும் அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது உலக கோப்பைக்கு நிகரானது என்று இஷாந்த் ஷர்மா கூறியது நிச்சயம் சரி தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது எங்களது கவனம் உள்ளது. அதே சமயம் இப்போது முழு கவனமும் 4-வது டெஸ்ட் மீதே இருக்கிறது.

    இவ்வாறு ரஹானே கூறினார்.

    கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்னில் ஆல் அவுட்டானது.
    அபுதாபி:

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அப்துல் மாலிக், ஆபிரகாம் சட்ரன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால் ஜிம்பாப்வே அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சசாய் 37 ரன்னும், சட்ரன் 31 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், நிவாசி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் சீன் வில்லியம்சும், சிக்கந்தர் ராசாவும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.  சிக்கந்தர் ராசா 43 ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அமீர் ஹம்சா 4 விக்கெட் வீழ்த்தினார்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து பும்ரா விலகியுள்ள நிலையில், திருமணத்திற்கு தயாராக இருப்பதால் விடுமுறை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய அணியின் முன்னணி் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 4-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வந்த நிலையில், பும்ரா தனிப்பட்ட காரணத்திற்காக தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதால் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்படவில்லை.

    தற்போது அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு தயாராக வேண்டியிருப்பதால் விடுப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    பும்ரா பிசிசிஐ-யிடம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி விடுமுறை கேட்டார். அது மிகப்பெரிய நாளிற்கு தயாராக உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த அணியாக திகழும் இந்தியா ஏன் பயப்பட வேண்டும். நியாயமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டி 2 நாட்களிலேயே முடிவடைந்தது. ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே ஸ்கொயராக சுழற்பந்து டர்ன் ஆகும் வகையில் தயார் செய்யப்பட்டதாக விமர்சனம் எழும்பியது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அகமதாபாத் ஆடுகளம் குறித்து கூறுகையில் ‘‘3-வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தியது போன்ற ஆடுகளத்தில் விளையாட வேண்டுமா? ஆடுகளம் மிகப்பெரிய அளவில் டர்ன் ஆகியது. போட்டி 2 நாட்களில் முடிவடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதுபோன்ற சாதகம் மிகவும் அதிகமானது. இந்தியா 400 ரன்கள் அடித்து இங்கிலாந்து 200 ரன்னில் ஆட்டமிழந்தால், இங்கிலாந்து மோசமாக விளையாடியது என்று கூறலாம். இந்தியா 145-க்குள் ஆட்டமிழந்தது.

    இந்தியா மிகப்பெரிய, சிறந்த அணி. இந்தியா இங்கிலாந்தை இன்னும் வெல்ல முடியும் என்பதால், நியாயமான விளையாட்டு, நியாயமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். இந்தியா பயப்பட வேண்டியதில்லை. இந்தியாவுக்காக இப்படிபட்ட ஆடுகளம் தயார் செய்ய வேண்டியதில்லை.

    அடிலெய்டில் இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளம் தயார் செய்யப்பட்டதா? மெல்போர்னில் இந்தியாவுக்கு ஆதரவாக ஆடுகளம் தயார் செய்தார்களா? அவர்கள் எப்படி தொடரை வென்றார்கள். நியாயமான ஆடுகளம், கண்டிசனில் விளையாடினால் எங்கே போட்டி நடந்தாலும் வெற்றி பெறலாம்’’ என்றார்.
    ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    கிரபெல்ட்:

    ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி கிரபெல்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    இதில் தொடக்கம் முதலே இந்திய அணியினர் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து ஜெர்மணி அணிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். இதன் பலனாக 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் நீலகண்ட ஷர்மா முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே ஜெர்மனி அணியின் முன்கள வீரர் கான்ஸ்டன்டின் பதில் கோல் திருப்பினார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

    பின்னர் ஜெர்மனி அணியினர், இந்திய அணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர் அத்துடன் அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஸ்ரீஜேஷ் மற்றும் பின்கள வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு ஜெர்மனி அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்த நிலையில் 27-வது, 28-வது நிமிடங்களில் இந்திய அணியின் விவேக் சாகர் பிரசாத் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அணிக்கு முன்னிலையை தேடிக்கொடுத்தார்.

    இந்திய அணியின் முன்கள வீரர்கள் லலித்குமார் உபாத்யாய் 41-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 42-வது நிமிடத்திலும் அருமையாக கோல் வளையத்துக்குள் பந்தை திணித்தனர். பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 47-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இதனால் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

    ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் உள்பட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த அணியால் இந்திய அணியின் தடுப்பு அரணை தகர்த்து மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு முதல் சர்வதேச போட்டியில் ஆடிய இந்திய அணி வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கி அசத்தி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

    இதேபோல் துஸ்செல்டோர்ப் நகரில் நடந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஜெர்மனியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஜெர்மனி அணியில் அமெலி வோர்ட்மேன் 24-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது
    அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் போட்டி முடிவு மாறுபட்டதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே ‘ஸ்கொயராக டர்ன்’ ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் டர்ன் பந்தைவிட நேராக சென்ற பந்தில்தான் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது என்றனர்.

    இந்த நிலையில் முதன்முறையாக நாங்கள் 200 ரன்கள் அடித்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ஜீத்தன் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியா, ஆசியாவில் இதுபோன்ற ஆடுகளத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவாக டர்ன் ஆகும் என எதிபார்க்கவில்லை. விளையாடுவதற்கு சவாலாக ஆடுகளம்.

    முதல் இன்னிங்சில் டாஸ் வென்று 112 ரன்கள் அடித்தால் எந்த ஆடுகளத்திலும் போதுமான ஸ்கோராக இருக்காது. அது ஸ்பின், பிளாட் அல்லது வேகபந்து வீச்சு ஆடுகளமாக இருந்தாலும் கூட. நாங்கள் இந்தியாவை 140 ரன்னுக்குள் சுருட்டியதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், மீண்டும் 2-வது இன்னிங்ஸ் எங்களுக்கு கிளிக் ஆகவில்லை’’ என்றார்.
    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சூப்பர் லீக் டி20-யில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இன்று இஸ்லாமாபாத்- குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோத இருந்தன. 

    இந்த நிலையில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந் சுழற்பந்து வீச்சாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 20-ந்தேதியில் இருந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆடுகளம் முதல் நாளில் இருந்து டர்ன் ஆகியது, அதுபோல் ஆடுகளத்தை 4-வது போட்டிக்கு வைக்கக்கூடாது என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. பந்து ஸ்கொயராக டர்ன் ஆனது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால் அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பனேசர், 3-வது போட்டிக்கான ஆடுகளம் போன்று 4-வது போட்டிக்கும் அமைக்கப்பட்டால், ஐசிசி இந்திய அணிக்கு புள்ளிகள் வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘‘அடுத்த போட்டிக்கான ஆடுகளமும் அப்படியே அமைக்கப்பட்டால், அதன்பின் ஐசிசி புள்ளிகளை வழங்கக் கூடாது. உலகின் மிகப்பெரிய மைதானத்தில் தற்போது போட்டி நடைபெறுவதால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    குறைந்த பட்சம் ஆடுகளம் பராமரிப்பாளர் சிறந்த ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். டர்னிங் பிட்ச் ஆக இருந்தாலும் கூட சென்னை ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்தனர். அதைவிட 3-வது போட்டிக்கான ஆடுகளம் மோசம். டர்னிங் பிட்ச் தயார் செய்தாலும் போட்டி 3 அல்லது மூன்றரை நாட்களாகவது செல்ல வேண்டும். இந்தியா அதுபோன்று ஆடுகளம் தயார் செய்யும்போது, போட்டி மூன்று நாட்களுக்காவது செல்ல வேண்டும்’’  என்றார்.
    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.
    கோவா:

    11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 109-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்தித்தன. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ஐதராபாத்தும், டிரா செய்தாலே அரைஇறுதி வாய்ப்பு என்ற சூழலில் கோவாவும் களம் இறங்கின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் எல்லையை நெருங்கி வந்தார்களே தவிர கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனால் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதிசுற்றை எட்டுவது இது 6-வது முறையாகும். 29 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்த ஐதராபாத் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இரவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை தோற்கடித்தது.

    லீக் சுற்று நிறைவில் டாப்-4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி (40 புள்ளி), ஏ.டி.கே. மோகன் பகான் (40 புள்ளி), நார்த் ஈஸ்ட் யுனைடெட் (33 புள்ளி), கோவா (31 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. எஞ்சிய 7 அணிகள் வெளியேறின. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. 20 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    அரைஇறுதி ஆட்டங்களில் மும்பை சிட்டி-எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதி சுற்று வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
    ×