என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.
    கோவா:

    11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 109-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்தித்தன. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ஐதராபாத்தும், டிரா செய்தாலே அரைஇறுதி வாய்ப்பு என்ற சூழலில் கோவாவும் களம் இறங்கின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் எல்லையை நெருங்கி வந்தார்களே தவிர கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனால் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதிசுற்றை எட்டுவது இது 6-வது முறையாகும். 29 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்த ஐதராபாத் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இரவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை தோற்கடித்தது.

    லீக் சுற்று நிறைவில் டாப்-4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி (40 புள்ளி), ஏ.டி.கே. மோகன் பகான் (40 புள்ளி), நார்த் ஈஸ்ட் யுனைடெட் (33 புள்ளி), கோவா (31 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. எஞ்சிய 7 அணிகள் வெளியேறின. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. 20 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    அரைஇறுதி ஆட்டங்களில் மும்பை சிட்டி-எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதி சுற்று வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
    சர்வதேச மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
    கீவ்:

    சர்வதேச மல்யுத்த போட்டி உக்ரைனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் (பெலாரஸ்) மோதினார். இதில் தொடக்கத்தில் எதிராளியை மடக்கித்தள்ளி 4-0 என்று வினேஷ் முன்னிலை பெற்றார். அதன் பிறகு பதிலடி கொடுத்த கலாட்ஜின்ஸ் 4-4 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார்.

    தொடர்ந்து மேலும் சில புள்ளிகளை பெற்று நெருக்கடி கொடுத்தார். 25 வினாடி மீதம் இருந்த போது கலாட்ஜின்சை நிமிர விடாமல் மடக்கி அமுக்கி தொடர்ச்சியாக 4 புள்ளிகளை வசப்படுத்திய வினேஷ் போகத் முடிவில் 10-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மல்யுத்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
    முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
    அகமதாபாத்:

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சில தினங்களுக்கு முன்பு டெஸ்டில் 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் 77 டெஸ்டுகளில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே (619 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், வரும் ஆண்டுகளில் கும்பிளேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதா? என அஸ்வினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

    கும்பிளேவின் சாதனையை எட்ட வேண்டும் என்றால் இன்னும் 218 விக்கெட்கள் தேவை. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற சாதனைகள் பற்றி சிந்திப்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.

    ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் என்னால் என்ன செய்ய முடியும், எப்படி ஆட்டத் திறனை மேம்படுத்துவது, அணிக்கு அதிக அளவில் எப்படி பங்களிப்பு அளிப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தனிப்பட்ட முறையிலும், கிரிக்கெட் வீரராகவும் மேலும் சிறந்த முறையில் செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்.

    கடந்த 15 ஆண்டுகளாக இதைத் தான் நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதையே தொடர விரும்புகிறேன் என தெரிவித்தார்.
    சென்னை, பெங்களூரு. அகமதாபாத் உள்பட ஆறு இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதால் மூன்று அணிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
    ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும்.

    கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. வாய்ப்ப இருந்தால் மும்பை வான்கடே.

    அமகதாபாத் எந்த அணிக்கும் சொந்த மைதானம் கிடையாது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

    ‘‘நாங்கள் மூன்று அணிகள் மோசமாக பாதிக்கப்படுவோம். சொந்த மைதானத்தில் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சொந்த மைதானத்தில் ஐந்து அல்லது ஆறில் வெற்றி பெற்று, வெளியில் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு சொந்த மைதானம் கூடுதல் அனுகூலமாக இருக்கும். நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டியுள்ளது’’ என மூன்று அணிகளில் ஒரு அணியின் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக உள்ளார். சமீப காலமாகத்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

    இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 66 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் விளாசினார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 20 புள்ளிகள் பெற்று 742 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இது அவரின் அதிகபட்ச ரேங்க் ஆகும்.

    11 விக்கெட் வீழ்த்தி அக்சார் பட்டேல் 30 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார். அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்ய உரிமை இல்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அமகதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 2 நாட்களிலேயே போட்டி முடிவடைந்தது. 30 விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 28-ஐ கைப்பற்றினர்.

    இதனால் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்ய உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘நாம் உலகளின் பல இடங்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடி 47 அல்லது 60 ரன்களில் எதிரணியை ஆட்டமிக்கச் செய்துள்ளோம். யாரும் ஆடுகளம் குறித்து பேசவில்லை. ஆனால், பந்து முதல் நாளில் இருந்து சுழன்றால் இதுகுறித்து விமர்சனம் செய்யவதை உலகளவில் பார்க்க முடிகிறது. எனக்கு அதுபோன்று வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக இருக்கிறேன். அது மிகப்பெரிய வேடிக்கையாக இருக்கும்.

    நான் போட்டியை இரவு முழுவதும் உட்கார்ந்து பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. சிட்னி ஆடுகள பராமரிப்பாளரும் இது போன்று உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இங்கிலாந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதை கடந்து செல்கிறோம். இதைவிட என்ன சொல்வது?’’ என்றார்.
    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஏ டிவி‌ஷன் கைப்பந்து லீக் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’ டிவி‌ஷன் கைப்பந்து லீக் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது. மார்ச் 10-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), 2-வது இடத்தை பிடித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சுங்க இலாகா, இந்தியன் வங்கி, வருமான வரி, தமிழ்நாடு போலீஸ், ஐ.சி.எப், செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி, சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். கடந்த முறை பி டிவி‌ஷனில் இருந்து வெற்றிபெற்ற சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப், 2-வது இடத்தை பிடித்த இந்தியன் வங்கி, தற்போது ஏ டிவி‌ஷனுக்கு முன்னேறி உள்ளது.

    கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சில போட்டிகளோடு ஆட்டம் கைவிடப்பட்டது. அந்த போட்டிதான் தற்போது நடத்தப்படுகிறது.

    இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.3.5 லட்சம் ஆகும். டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் மையம் மற்றும் ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் இந்த போட்டிக்கு ஸ்பான்சர் செய்கின்றன.

    இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்ரபாண்டியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
    அடிலெய்டு:

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) 66 நிமிடங்களில் தோற்கடித்து மகுடம் சூடினார்.

    அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. முதல் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை 5 ஆட்டங்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 19 வயதான ஸ்வியாடெக் கைப்பற்றிய 2-வது பட்டம் இதுவாகும். தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் ஸ்வியாடெக் இந்த வெற்றியின் மூலம் நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.
    புனேயில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனால், ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது. போட்டி நடத்தப்படும் இடத்தை மும்பைக்கு மாற்றலாம் என்ற தகவலும் வெளியானது.

    இந்நிலையில், புனேயில் 3 ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்திப்புக்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தற்போதைய தீவிரத்தை கவனத்தில் கொண்டு, முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு பிறகு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. 4வது போட்டி மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

    இந்நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (வயது 27) விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார். கடைசி போட்டியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பிசிசிஐயிடம் கூறியிருக்கிறார். அதன்படி, அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதில் கூடுதல் வீரர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4வது போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பன்ட், விர்த்திமான் சகா, அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
    அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    ஆமதாபாத்:

    ஆமதாபாத் டெஸ்டில் 66 மற்றும் 25 ரன்கள் வீதம் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுழல் இன்றி நேராக வந்த பந்துகளில் தான் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் பேட்டிங்கின் போது நிறைய தவறிழைத்து விட்டோம். முதல் இன்னிங்சில் எங்களது பேட்டிங் சரியில்லை. ஆடுகளத்தில் பயமுறுத்தும் அளவுக்கு பூதமோ, பூச்சாண்டியோ இல்லை. பேட்டிங் செய்வதற்கு அருமையாக இருந்தது. நிலைத்து நின்று விட்டால் ரன் குவிக்கலாம் என்பதை பார்க்க முடிந்தது.

    இது போன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது, மனஉறுதியும், ரன் எடுக்கும் முனைப்பும் அவசியமாகும். தொடர்ந்து தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டு கொண்டிருக்க முடியாது. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, சீராக ரன் எடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதே சமயம் நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் தான் எனது அணுகுமுறை இருந்தது. தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும். ஸ்வீப் ஷாட்டில் ஆட்டம் இழந்த அந்த பந்துக்கு முன்பு வரை எனது திட்டமிடல் சரியாகவே இருந்தது.

    எனவே ஆடுகளத்தை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. சொல்லப்போனால் இது வழக்கமான இந்திய ஆடுகளம் என்பதே எனது கருத்து. 2-வது டெஸ்ட் நடந்த சென்னை சேப்பாக்கத்தில் இதை விட பந்து அதிகமாக சுழன்று திரும்பியது. ஆனால் அங்கு நிறைய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்தனர். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இங்கு நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
    அதிரடி பேட்ஸ்மேனான யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப் பதான்.  அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தார்.

    இவர் தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    38 வயதாகும் யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதம், 3 அரைசதம் அடங்கும். 33 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 22 டி20 போட்டிகளில் விளையாடி 236 ரன்கள் அடித்துள்ளார். 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    2007-ம் ஆண்டு டி20-யிலும், 2008-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

    சச்சின் உடன் யூசுப் பதான்

    ‘‘எனக்கு ஆதரவாக இருந்து என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணிகள், பயிற்சியாளர்கள், நாட்டின் அனைத்து ஆதரவாகர்கள் என அனைவருக்கும் நன்றி. அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இன்று வந்துள்ளது. நான் அதிகாரப்பூர்வமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.

    இரண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது, உலகக்கோப்பையை வென்று சச்சினை தோளில் சுமந்து சென்றது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம்’’ என்றார்.
    ×