என் மலர்
விளையாட்டு
சென்னை:
ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணி நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தியது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே மாதம் 30-ந் தேதி வரை இந்த போட்டி 6 நகரங்களில் நடத்தப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது.
இதில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணிக்கு வெற்றி கிடைத்தது.
பெங்களூர் அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல், பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் காரணமாக இருந்தனர்.
முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கிறிஸ்லின் அதிகபட்சமாக 35 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஹர்ஷல் படேல் 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிவில்லியர்ஸ் 27 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 28 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 29 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். பும்ரா, ஜேன்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. 4-வது வீரர் வரிசைக்கு மேக்ஸ்வெல் பொறுத்தமானவர். அவர் ஆட்டத்தின் வேகத்தையும், தன்மையையும் மாற்றக் கூடியவர். அவர் உத்வேகம் அளிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார்.
முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றது முக்கியமானது. ஏனென்றால் மும்பை அணி மிகவும் வலுவான அணியாகும். டிவில்லியர்ஸ் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட கோப்பையை வெல்வதுதான் முக்கியமானது. நாங்கள் கடுமையாக போராடிதான் தோற்றோம். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
நாங்கள் சில தவறுகளை செய்தோம். டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 14-ந் தேதி எதிர்கொள்கிறது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 13-ந் தேதி சந்திக்கிறது. இந்த 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது.







சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3-வது லீக் ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்காக கொல்கத்தா அணி வீரர்கள் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதிராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், டோனி ஆகியோர் உள்ளனர்.
ஆல்-ரவுண்டரில் ஜடேஜா, சாம் கர்ரன், கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சில் தீபக் சாகர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், கரண் சர்மா, நிகிடி ஆகியோர் உள்ளனர்.
அணிக்கு புதுவரவாக புஜாரா, ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொய்ன் அலி ஆகியோர் வந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது இடத்தை பிடித்து முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
அதற்கு ஏற்றாற்போல் சென்னை அணி வீரர்கள் விளையாடுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.
அந்த அணியில் ஷிகர் தவான், ரகானே, ஸ்டீபன் சுமித், பிரித்விஷா, அஸ்வின், ஸ்டோனிஸ், சாம் பில்லிங்ஸ், நார்ஜே, ரபடா, சுமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கும் முனைப்பில் இருக்கிறது.
சென்னை அணியில் உள்ள அனுபவ வீரர்களுக்கும் டெல்லி அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் போட்டியாக இது இருக்கும். இந்த ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை:
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இன்று தொடங்கி மே 30-ந்தேதி வரை நடக்கிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் சென்னை, பெங்களூர், மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் மோதும். இது அந்த அணிக்கு சாதகமாக அமையும். ஆனால் இந்த சீசனில் எந்த அணிக்கும் அதன் உள்ளூர் மைதானத்தில் போட்டிகள் இல்லை.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடத்தப்படும் இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
அதே போல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள விளையாடுவதை ரசிகர்கள் நேரில் பார்ப்பதை தவற விடுவார்கள் என்பதை உண்மையில் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நல்ல விஷயம் என்ன வென்றால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளோம்.
மேலும் ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால் உள்ளூரில் விளையாடும் சாதகம் இல்லாமல் இருப்பது. உள்ளூர் மைதானங்களில் விளையாடாதது கூட நல்லதுதான். ஒவ்வொரு அணியும் பொதுவான இடங்களில் விளையாடுகின்றன.
இதல் உங்கள் அணியின் வலிமை உண்மையில் வெளிப்படும். கடந்த ஐ.பி.எல். மிகவும் போட்டி நிறைந்ததாக இருந்தது. கடைசி மூன்று அல்லது நான்கு ஆட்டங்கள் வரை அனைத்து அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதை கணக்கிட்டு கொண்டிருந்தன. இந்த போட்டி தொடவது மிகவும் சிறந்தது என்று நான் கருதுகிறேன். இந்த முறையும் போட்டி தொடர் சவாலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






