என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இன்று தொடங்கி மே 30-ந்தேதி வரை நடக்கிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் சென்னை, பெங்களூர், மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    பொதுவாக ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் மோதும். இது அந்த அணிக்கு சாதகமாக அமையும். ஆனால் இந்த சீசனில் எந்த அணிக்கும் அதன் உள்ளூர் மைதானத்தில் போட்டிகள் இல்லை.

    கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடத்தப்படும் இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

    அதே போல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள விளையாடுவதை ரசிகர்கள் நேரில் பார்ப்பதை தவற விடுவார்கள் என்பதை உண்மையில் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நல்ல வி‌ஷயம் என்ன வென்றால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளோம்.

    மேலும் ஒரு நேர்மறையான வி‌ஷயம் என்னவென்றால் உள்ளூரில் விளையாடும் சாதகம் இல்லாமல் இருப்பது. உள்ளூர் மைதானங்களில் விளையாடாதது கூட நல்லதுதான். ஒவ்வொரு அணியும் பொதுவான இடங்களில் விளையாடுகின்றன.

    இதல் உங்கள் அணியின் வலிமை உண்மையில் வெளிப்படும். கடந்த ஐ.பி.எல். மிகவும் போட்டி நிறைந்ததாக இருந்தது. கடைசி மூன்று அல்லது நான்கு ஆட்டங்கள் வரை அனைத்து அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதை கணக்கிட்டு கொண்டிருந்தன. இந்த போட்டி தொடவது மிகவும் சிறந்தது என்று நான் கருதுகிறேன். இந்த முறையும் போட்டி தொடர் சவாலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கால்பதிக்கும் இந்த சரவெடி போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இ்ந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்ததால் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராவிட்டாலும் ஐ.பி.எல். போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது. இதன்படி 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் சொதப்பிய வீரர்களை கழற்றி விட்டும், புதிய வீரர்களை சேர்த்தும் தங்கள் அணியை பட்டைதீட்டி முழுவீச்சில் தயார்படுத்தி உள்ளன.

    ரோகித் சர்மா


    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட ஆமதாபாத்தில் மே 30-ந்தேதி அரங்கேறுகிறது.

    வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். இது தான் அந்த அணிக்கும் சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. உதாரணமாக சென்னை சேப்பாக்கத்தில் மொத்தம் 10 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சென்னை அணிக்கு இங்கு ஒரு ஆட்டமும் கிடையாது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 10 ஆட்டங்கள் நடந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அங்கு பயணிக்க வேண்டிய தேவையில்லை. ஐதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்கள் இந்த முறை போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிருப்திக்குள்ளாயின. அவர்களை சரிகட்டுவதற்காக யாருக்கும் உள்ளூர் ஆட்டங்கள் இல்லாதவாறு போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் போட்டியை நடத்த வேண்டி இருப்பதால் வீரர்களின் அதிகமான போக்குவரத்தை தவிர்ப்பதற்காக போட்டி நடக்கும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. லீக் சுற்றின் போது ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 3 தடவை மட்டுமே மற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்.


    கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சீசனிலும் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கும் வாய்ப்பு இல்லை. பூட்டிய மைதானத்திலேயே ஆட்டங்கள் நடக்க உள்ளன. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை இந்த முறையும் தொடரும். எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு தென்பட்டால் உடனடியாக அந்த வீரர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்.

    ரோகித் சர்மா, விராட் கோலி


    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் மும்பை அணி வலுவாக இருந்தாலும் தங்களது தொடக்க லீக்கில் தோற்பது அந்த அணிக்கு வாடிக்கையாகும். 2013-ம் ஆண்டில் இருந்து அந்த அணி தொடர்ந்து 8 சீசனில் தங்களது முதல் லீக்கில் தோற்று வருகிறது. அந்த சறுக்கலுக்கு இந்த முறை மும்பை முடிவு கட்டுமா? என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

    தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் சில தினங்களுக்கு முன்பு தான் மும்பை அணியுடன் இணைந்தார். 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவர் முதல் ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இதனால். விக்கெட் கீப்பிங் பணியை இஷான் கிஷன் கவனிப்பார். ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா சகோதரர்கள், பும்ரா, டிரென்ட் பவுல்ட் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களம் காணும் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது.

    இதுவரை பட்டம் வெல்லாத விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனில் அதிக தொகை கொடுத்து இரு வீரர்களை வாங்கியிருக்கிறது. ரூ.14¼ கோடிக்கு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லையும், ரூ.15 கோடிக்கு நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜாமிசனையும் ஏலத்தில் எடுத்துள்ளனர். ஏற்கனவே அதிரடி வேட்டைக்கு டிவில்லியர்சும் காத்திருக்கிறார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டதால் ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். சென்னை ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.

    மொத்தத்தில் சவால்மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் பெங்களூருவும், 17-ல் மும்பையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.

    இரு அணிகளின் உத்தேச அணி வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷம், குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர்-நிலே அல்லது ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தத்தில் 2-வது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி ஓமனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தத்தில் 2-வது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மராட்டியத்தில் வசிக்கும் 22 வயதான விஷ்ணு தற்போது பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் 49 இஆர் கிளாஸ் பிரிவில் இந்தியாவின் கே.சி.கணபதி-வருண் தாக்கர் ஜோடி முதலிடத்தை பிடித்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது. இவர்கள் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். ஏற்கனவே இந்த போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை 23 வயதான நேத்ரா குமணன் (சென்னை கல்லூரி மாணவி) லேசர் ரேடியல் பிரிவில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றதுடன், ஒலிம்பிக் பாய்மரபடகு போட்டியில் அடியெடுத்து வைக்க இருக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்து இருந்தார். ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் இந்தியா ஒரு பிரிவில் தான் பங்கேற்று இருக்கிறது. இந்த தடவை முதல்முறையாக 3 பிரிவு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கிறது. அத்துடன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு 4 இந்தியர்கள் தகுதி பெற்று இருப்பதும் வரலாற்றில் இதுவே முதல் நிகழ்வாகும். டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு அதிக அளவில் இந்தியர்கள் தகுதி அடைந்து சாதனை படைத்து இருப்பதற்கு மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.

    வருண் தாக்கரின் தந்தை அசோக் தாக்கர் கூறுகையில், ‘இந்த விளையாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் வருணுக்கு குறைந்தது ரூ.1½ லட்சம் செலவு செய்கிறேன். இது அதிக செலவு பிடிக்கும் விளையாட்டு. இதற்கான உபகரணங்களின் விலை மிக அதிகம். தினமும் 6 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவார். உழைப்புக்குரிய பலன் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று எனது மகன் தேசத்தை பெருமைப்பட வைத்திருக்கிறார். ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றுக்குள், பெரும்பாலானோர் அவர்கள் விரும்பியதை செய்ய முடியாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஒருபக்கம் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இன்றி மூட்டிய மைதானத்திற்குள் நடைபெற இருக்கிறது.

    நாளை 2021 சீசனில் முதல் போட்டி சென்னையில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கொரோனா நேரத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுவது அதிர்ஷ்டம் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஏராளமான மக்கள் கடினமான நிலையில் உள்ளனர். ஏராளமான மக்கள் அவர்களது வேலையை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் விரும்புவதைக் கூட செய்ய முடியவில்லை. குறைந்த பட்சம் நாங்கள் விரும்புவதை செய்ய முடிகிறது என்பதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

    குறைந்தபட்சம் நான் கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக சற்று அனுசரித்து செல்ல வேண்டுமென்றால், நாம் அனுசரித்துக் கொள்ள வேண்டும். பயோ-பப்பிள் செக்யூரில் நாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.
    பகர் ஜமான் தொடர் நாயகன் விருதை வெல்ல, பாபர் அசார் ஆட்ட நாயகன் விருதை பெற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான்.
    தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

    3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இமாம் உல் ஹக் 57 ரன்களும், பகர் ஜமான் 101 ரன்களும் பாபர் அசாம் 94 ரன்களும் விளாச, இறுதி கட்டத்தில் ஹசன் அலி 11 பந்தில் 32 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது.

    பின்னர் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜென்மன் மலான் 70 ரன்கள் அடித்தார். ஆனால் எய்டன் மார்கிராம் (18), ஸ்மட்ஸ் (17), டெம்பா பவுமா (20) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    வெரைன் 53 பந்தில் 62 ரன்கள் அடித்தால். பெலுக்வாயோ 61 பந்தில் 54 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியே தென்ஆப்பிரிக்கா 49.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பகர் ஜமான், பாபர் அசாம்

    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் அடுத்தடுத்து சதம் விளாசிய பகர் ஜமான் தொடர் நாயகன் விருதையும், பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.
    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய பலத்தை நிரூபித்து இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள்.

    அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனது.

    அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி

    தற்போது, அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். விராட் கோலியை பின்னால் இருந்து தூக்குகிறார் அனுஷ்கா, பின்னர் மீண்டும் தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் தூக்குகிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. 


    ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் பந்துகளை பயன்படுத்த எம்எஸ் டோனி அறிவுரை வழங்கினார். அது தனக்கு பயனுள்ளதாக இருக்கிறது என டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
    எம்எஸ் டோனியுடன் யாருக்கெல்லாம் பழக வாய்ப்பு கிடைத்ததோ, அவர்களெல்லாம் டோனியை புகழ்ந்து கூறுவதுண்டு. ஏனென்றால் அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர ஆலோசனை வழங்குவார்.

    அந்த வகையில் தனக்கும் ஆலோசனை வழங்கினார் என கடந்த ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர் பந்துகளை வீசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

    எம்எஸ் டோனி குறித்து டி நடராஜன் நினைவு கூர்ந்து கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி போன்ற ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அது தனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். டோனி என்னிடம் பிட்னஸ் பற்றி பேசினார். என்னை ஊக்கப்படுத்தினார். நான் அனுபவத்துடன் மிகச் சிறப்பாக வருவேன் என்றார்.

    அவர் என்னிடம் ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் மற்றும் பந்துகளில் வித்தியாசம் ஆகியவற்றை பயன்படுத்தும்படி கூறினார். அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது’’ என்றார்.

    ஐபிஎல் 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11-ந்தேதி சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர்- நவம்பரில் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகச்சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. இதனால் கொரோனா தொல்லை முடிந்தது என மக்கள் நினைக்கையில், திடீரென 2-ம் அலையாக மீண்டும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டைவிட தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இன்று கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

    இந்தக் கொரோனா நெருக்கடிக்குள் ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இன்றி நாளைமறுதினத்தில் இருந்து நடைபெறுகிறது.  இப்படியே சென்றால் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் கேள்விக்குறியாகிவிடும்.

    இதுகுறித்து ஐசிசி-யின் இடைக்கால சிஇஓ அல்லார்டைஸ் கூறுகையில் ‘‘டி20 உலகக்கோப்பை நடத்த திட்டமிட்டுள்ள திட்டத்தின்படிதான் உறுதியாகச் செல்வோம். எங்களிடம் மாற்று திட்டம் உள்ளது. அதுகுறித்து இன்னும் யோசிக்கவில்லை. நாங்கள் பிசிசிஐ-யுடன் இணைந்து இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான நேரம் வந்தால் மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம்.

    கொரோனா காலத்திலும் ஏராளமான நாடுகளில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாங்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு வருகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. அதிலும் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.
    சென்னையில் நடக்கும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஐபிஎல் 2021 சீசன் நாளைமறுதினம் சென்னையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. சென்னையில் முகாமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

    அந்த அணி சமூக வலைத்தளங்களில் சில படங்களை வெளியிட்டது. அந்தப் படங்களில் பொல்லார்டு இடம் பெறவில்லை. இதனால் அவர் சென்னை வந்தாரா? முதல் ஆட்டத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் பொல்லார்டு 7 நாட்கள் கோரண்டைனில் இருந்துள்ளார். அவரது கோரன்டைன் நாட்கள் முடிவடைந்த நிலையில் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்.

    தேவ்தத் படிக்கல்

    ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்துவிட்டார். இதனால் அணியில் இணைய உள்ளார். என்றாலும், முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் தேவ்தத் படிக்கல் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி விராட் கோலியுடன் களம் இறங்க மாற்று தொடக்க வீரரரை தேடிவருகிறது.
    ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் அணி மாறியது குறித்து கவுதம் கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் எப்போதுமே அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் விளையாடிய அவரை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

    மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான் மேக்ஸ்வெல் அணி மாறுவதற்கு காரணம் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் அதிகமான அணிகளுக்காக வி்ளையாடியிருக்கமாட்டார். அவர்கள் அதிக அணிகளுக்காக விளையாடியதற்கு காரணம், அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான்.

    இதற்கு முன் இருந்த அணிகளில் அவரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை எனக் கூற முடியாது. டெல்லிக்காக விளையாடும்போது அவருக்கு சுதந்திரம் அதிகமாக இருந்தது. பெரும்பாலான அணிகள், பயிற்சியாளர்கள், அவர் அணியின் முக்கியமானவர் என்பதால், அவரால் எந்த இடத்தில் ஜெயிக்க முடியுமோ, அதை வழங்கினாரகள்.

    மிகவும் துரதிருஷ்டவசமானது, அவரால் வெற்றி பெற முடியாததுதான். 2014 ஐபிஎல் தொடரில் மட்டும் தீப்பொறியாக இருந்தார். அப்படியே விளையாடியிருந்தால் எந்த அணியும் அவரை ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்திருக்காது. அந்த்ரே ரஸலை எடுத்துக்கொண்டால் கொல்கத்தா அணியில் அவர் நீண்ட காலமாக இருக்கிறார்’’ என்றார்.
    நாளை மறுநாள் ஐபிஎல் 2021 கிரிக்கெட் சீசன் தொடங்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டேனியல் சாம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் 2021 சீசன் கிரிக்கெட் திருவிழா நாளைமறுநாள் சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஐபிஎல் (2020) சீசனை பிசிசிஐ கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பாக நடத்தி முடித்தது. 2021 சீசன் இந்தியாவில் ஆறு மைதானங்களில் நடக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

    இதனால் போட்டியை நடத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், ஸ்டாஃப்கள், கிரவுண்ட் ஸ்டாஃப்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னையில் நாளைமறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

    இந்த நிலையில் ஆர்சிபி அணியின் டேனியல் சாம்ஸ்-க்கு எடுக்கப்பட்ட 2-வது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது.

    டேனியல் சாம்ஸ்

    அவருக்கு அறிகுறி ஏதுமில்லை. மருத்துவ வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என ஆர்சிபி அணி தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே ஆர்சிபி அணியின் படிக்கல், டெல்லி அணியின் அக்சார் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது.
    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசரும், முன்னாள் வீரருமான கிரண்மோரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் இந்த போட்டிக்காக தயாராகி வரும் வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்கள், இந்திய கிரிக்கெட் வாரிய பணியாளர்களை கொரோனா தாக்கி வருகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதில் இருந்து மீண்டு இருக்கும் நிதிஷ் ராணா அணியினருடன் இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டார். மற்ற இரு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் ஊழியர்கள் 10 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பை சந்தித்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அந்த மைதான பணியாளர்களில் மேலும் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் குழுவின் ஆலோசகருமான 58 வயது கிரண்மோரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கும் கிரண்மோரே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சுகாதார வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிரண்மோரேவும் பின்பற்றி வருகின்றனர் என்றும் மருத்துவ குழுவினர் கிரண்மோரேவின் உடல் நலனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 10 லீக் ஆட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் ஐ.பி.எல். போட்டியை மும்பையில் கட்டுப்பாடுகளுடன் நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி அளித்து இருப்பதால் இந்த போட்டிக்கு இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
    ×