என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் பகர் சமானை தந்திரமான முறையில் ரன் அவுட் செய்தார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 17 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த ஆட்டத்தில் 342 ரன் இலக்குடன் பாகிஸ்தானுடன் விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் பகர் சமான் ஒருவரே தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை சமாளித்தார். மற்ற வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர்.

    பகர் சமான் 193 ரன் குவித்து புதிய சாதனை படைத்தார். 155 பந்துகளில் 18 பவுண்ட்ரி 10 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஆனாலும் அவரால் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.

    பகர் சமான் ரன் அவுட் முறையில் ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரது ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் அவரை தந்திரமான முறையில் ரன் அவுட் செய்தார். இது தொடர்பாக குயின்டன் டிகாக் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே 193 ரன் குவித்தும் தோல்வியடைந்தது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் பகர் சமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இரட்டை சதம் அடிக்காதது எனக்கு வருத்தத்தை அளிக்கவில்லை. போட்டியில் தோற்றதுதான் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும்.

    எனது கவனம் எல்லாம் வெற்றி பெறுவதில் மட்டுமே இருந்தது. இரட்டை சதத்தை பற்றி நினைக்கவில்லை. என்னால் இறுதி வரை களத்தில் இருக்க முடியாமல் போனது ஏமாற்றமே.

    இவ்வாறு பகர் சமான் கூறியுள்ளார்.

    கொரோனா தொற்று பரவலின் 2-வது அலை தீவிரத்தால் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    3 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது. பாதுகாப்பு வளையத்தில் இருந்தபோதே வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார்.

    ஐ.பி.எல். திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா தொற்று பரவலின் 2-வது அலை தீவிரத்தால் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும்.

    ஐ.பி.எல். போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்று மும்பை. அங்குள்ள வான்கடே மைதானத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 10 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 10-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. மும்பையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பை மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு நடைபெற உள்ள போட்டியை ஐதராபாத் அல்லது இந்தூரில் நடத்தலாமா என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது.

    இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பால் மராட்டிய மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று கருதப்பட்டது.

    இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல். போட்டிக்காக 4 அணி வீரர்கள் மும்பையில் உள்ள மைதானங்களில் பயிற்சி பெறுகிறார்கள். கட்டுப்பாடுகளுடன் பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்களில் மேலும் 2பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டி நடத்துவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியமும், மும்பை கிரிக்கெட் சங்கமும் தெரிவித்து உள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற 342 ரன்கள் இமாலய இலக்கை பாகிஸ்தான் துரத்தியது. அபாரமாக ஆடிய பகர் சமான் கடைசி ஓவரில் கவனக்குறைவால் தனது விக்கெட்டை ரன் அவுட் மூலம் தாரைவார்த்தார். இதனால், பாகிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

    இந்நிலையில், ரன் இலக்கை துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய உலக சாதனையை பகர் சமான் படைத்துள்ளார். 

    தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவர் 155 பந்துகளில் 193 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். 

    இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்),  ரன்கள் எடுத்து சாதனை பட்டியலில் இடம் பிடித்து இருந்தார். 
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக இருந்த டி.ஜி.பி. அஜித் சிங்கின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக இருந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. அஜித் சிங்கின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யான 70 வயது ஷபிர் உசேன் ஷேகதாம் கந்த்வாவாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து ஷபிர் உசேன் கருத்து தெரிவிக்கையில், ‘உலகின் சிறந்த கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிப்பதை சிறப்பான கவுரவமாக கருதுகிறேன். பாதுகாப்பு விஷயத்தில் எனக்கு இருக்கும் அனுபவம் இந்த புதிய பணிக்கு உதவிகரமாக இருக்கும். சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக ஆக்குகிறார்களோ? இல்லையோ? அது வேறு விவகாரமாகும். சூதாட்டத்தை அனுமதித்தால் அது ‘மேட்ச் பிக்சிங்’ நடக்க வழிவகுக்கும் என்பது போலீஸ் அதிகாரி என்ற முறையில் எனது கருத்தாகும். சூதாட்டத்தை இதுவரை அரசு சட்டப்பூர்வமாக ஆக்காமல் இருப்பது நல்ல முடிவாகும்’ என்றார்.
    ஹியூபெர்ட் இந்த வெற்றியின் மூலம் 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த முதல் போலந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீரர் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 37-வது இடம் வகித்த போலந்து வீரர் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ், 19 வயது ஜானிக் சின்னெரை (இத்தாலி) சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் 7-6 (7-4), 6-4 என்ற நேர்செட்டில் ஜானிக் சின்னெரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 45 நிமிடம் தேவைப்பட்டது.

    வெற்றி மகிழ்ச்சியில் ஹியூபெர்ட்.


    சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ்க்கு ரூ.2.20 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளியும் கிடைத்தது. தோல்வி அடைந்த ஜானிக் சின்னெருக்கு ரூ.1.20 கோடி பரிசுடன், 600 தரவரிசை புள்ளியும் கிட்டியது. 24 வயதான ஹியூபெர்ட் இந்த வெற்றியின் மூலம் 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த முதல் போலந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த ஆண்டில் அவர் கைப்பற்றிய 2-வது பட்டம் இதுவாகும்.

    அரைஇறுதியில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), கால்இறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகிய முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்து இருந்த ஹியூபெர்ட் நேற்று வெளியிடப்பட்ட உலக ஒற்றையர் தரவரிசையில் 21 இடங்கள் உயர்ந்து 16-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் டாப்-20 இடத்துக்குள் அவர் நுழைந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். இதேபோல் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட ஜானிக் சின்னெர் தரவரிசையில் 31-வது இடத்தில் இருந்து 23-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

    வெற்றிக்கு பிறகு ஹியூபெர்ட் அளித்த பேட்டியில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டி முழுவதும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். கடந்த ஆண்டில் 6 மாதங்களுக்கு மேலாக இங்கு நான் பயிற்சி மேற்கொண்டதும் எனக்கு ஒருவகையில் உதவிகரமாக இருந்தது. என்னுடைய வெற்றி போலந்து மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன். ஜானிக் சின்னெர் அருமையான வீரர். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து ஜானிக் சின்னெர் கருத்து தெரிவிக்கையில், ‘இறுதிப்போட்டியின் ஆரம்பத்தில் சற்று பதற்றம் அடைந்தேன். அத்துடன் எனது ‘செர்வ்’ சிறப்பாக இருக்கவில்லை. குறிப்பாக 2-வது செட்டின் தொடக்கத்தில் மோசமாக ‘செர்வ்’ செய்தேன். இந்த ஆட்டம் நல்ல அனுபவமாகும்’ என்றார்.
    கொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்து வதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அங்கு போட்டியை நடத்த முடியாதபட்சத்தில் ஐதராபாத் அல்லது இந்தூரில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஐதராபாத்தில் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

    கொரோனாவால் இதுவரை 3 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ்ராணா, டெல்லி வீரர் அக்‌ஷர்படேல், பெங்களூர் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

    இதில் ராணா உடல்நலம் தேறியதால் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வீரர்கள் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்துவிட் டது. இதனால் வீரர்கள் தொற்றில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்தால் பாதிப்பில் இருந்து வீரர்களை காக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் சிந்தித்தாலும் தற்போது தடுப்பூசி தேவை என நினைக்கிறது.

    கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. அதற்கு காலக்கெடுவும் வழங்க முடியாது. கொரோனா அச்சத்தை வைத்துக் கொண்டு வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது.

    எனவே ஐ.பி.எல். தொட ரில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக்கத்துடன் பேசி கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.

    ஐ.பி.எல். போட்டியில் 10 ஆட்டங்கள் சென்னையில் நடக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒட்டு மொத்த ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டது.

    2 வாரத்துக்கு முன்பு முதல் கட்ட தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது. மைதான ஊழியர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    5-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.) சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதுவரை 4 டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறையும் (2017, 2019), டுட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா ஒரு தடவையும் டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்

    5-வது டி.என்.பி.எல். போட்டி கடந்த ஆண்டு ஐ.பி.எல். முடிந்த பிறகு டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் போட்டியை நடத்த முடியவில்லை. இதனால் டி.என்.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    5-வது டி.என்.பி.எல். போட்டியை இந்த ஆண்டு நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி ஜூன் 4-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியை நடத்த விரும்புகிறது.

    இதற்கான அனுமதியை கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. இதை டி.என்.சி.ஏ. செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதுகாப்பு வளையத்துடன் 4 நகரங்களில் டி.என்.பி.எல். போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான ஆஷ்லி பார்ட்டியும் (ஆஸ்திரேலியா), 9-ம் நிலை வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ்குவும் (கனடா) மோதினர். முதல் 3 கேம்களை பார்ட்டி வெல்ல அடுத்த 2 கேம்களை பியான்கா வசப்படுத்தினார். ஆனால் அதன் பிறகு ஆஷ்லி பார்ட்டியின் ஆக்ரோஷமான ஷாட்டுகளுக்கும், சக்திவாய்ந்த சர்வீஸ்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பியான்கா திணறினார். தொடர்ச்சியாக கேம்களை தனதாக்கி முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய, ஆஷ்லி பார்ட்டி 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

    2-வது செட்டில் 2-வது கேமின் போது பந்தை திருப்பி அடிக்க ஓடும் போது பியான்கா மைதானத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது வலது கால் வேகமாக மடங்கியதில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடினார். ஆனாலும் அவரால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 2-வது செட்டில் பியான்கா 0-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது கண்ணீர் மல்க போட்டியை விட்டு விலகினார். இதையடுத்து ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

    35 ஆண்டு கால மியாமி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் அடுத்தடுத்து பட்டத்தை வென்ற 6-வது வீராங்கனை என்ற சிறப்பை ஆஷ்லி பார்ட்டி பெற்றார். இதற்கு முன்பு ஸ்டெபி கிராப் (ஜெர்மனி), மோனிகா செலஸ் (அமெரிக்கா), சாஞ்சஸ் விகாரியா (ஸ்பெயின்), வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்றவர்கள் ஆவர்.

    வாகை சூடிய 24 வயதான ஆஷ்லி பார்ட்டிக்கு ரூ.2 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2019-ம் ஆண்டில் அவர் இங்கு பட்டம் (2020-ம் ஆண்டு போட்டி கொரோனாவால் ரத்து) வென்ற போது ரூ.10 கோடியை பரிசாக அள்ளினார். ஆனால் கொரோனா பாதிப்பு, மிக குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் அனுமதி போன்ற காரணங்களால் இந்த முறை பரிசுத்தொகை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. பியான்கா ரூ.1¼ கோடியை பரிசாக பெற்றார். இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் பியான்கா 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடிக்கிறார்.

    24 வயதான ஆஷ்லி பார்ட்டி கூறுகையில், ‘இறுதிப்போட்டி இந்த மாதிரி முடிவதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை. பியான்காவுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். மியாமி பட்டத்தை தக்க வைத்துக்கொண்ட ஜாம்பவான்கள் வரிசையில் நானும் இடம் பிடித்திருப்பதை கவுரவமாக கருதுகிறேன். தரவரிசையில் எனது நம்பர் ஒன் இடம் குறித்து நிறைய விவாதிக்கப்படுவதை அறிவேன். ஆனால் கடந்த ஆண்டில் நான் எல்லா போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் எனது புள்ளிகளிலும் முன்னேற்றம் காண முடியவில்லை. அதே சமயம் புள்ளிகளையும் இழக்கவில்லை. என்னை பொறுத்தவரை நான் நம்பர் ஒன் இடத்துக்கு தகுதியானவள் தான் ’ என்றார்.

    2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை ருசித்தவரான 20 வயதான பியான்கா அதன் பிறகு கால்முட்டி காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்டார்.

    இப்போது அவர் மீண்டும் காயத்தில் சிக்கியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வந்து இந்த அளவுக்கு விளையாடியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இறுதிப்போட்டியில் பாதியில் விலகுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இது மாதிரி நடப்பது சகஜம். எனது டென்னிஸ் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறி செல்வதை எதிர்நோக்குகிறேன். எனது வயது வெறும் 20 தான். அதனால் இப்போதைக்கு எந்த ரிஸ்க்கும் எடுக்க முயற்சிக்கமாட்டேன்’ என்றார்.
    ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்றதே உலக சாதனையாக இருந்தது.
    மவுன்ட் மாங்கானு:

    மெக்லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அலிசா ஹீலி (65 ரன்), எலிஸ் பெர்ரி (56 ரன்), ஆஷ்லி கார்ட்னெர் (53 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். ஒரு நாள் போட்டி வரலாற்றில் இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் (2003-ம் ஆண்டு) வென்றதே உலக சாதனையாக இருந்தது. 18 ஆண்டுகால அச்சாதனையை அந்த நாட்டு பெண்கள் அணி முறியடித்திருக்கிறது.
    ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இ்ந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை தேர்வு செய்து, தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்றிரவு அறிவித்தது. இதில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் (பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்) இடம் பிடித்துள்ளார். 21 வயதான இளவேனில் தகுதி சுற்று போட்டிகளின் மூலம் ஒலிம்பிக் இடத்தை பெறா விட்டாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒலிம்பிக் கோட்டாவை வென்று தந்தவரும், சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய வீராங்கனையுமான சிங்கி யாதவுக்கு இடம் கிடைக்கவில்லை. இது கொரோனா காலம் என்பதால் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வருமாறு:-

    10 மீட்டர் ஏர் ரைபிள் (ஆண்கள்): திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார். பெண்கள் பிரிவு: அபூர்வி சண்டேலா, இளவேனில் வாலறிவன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (ஆண்கள்): சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், பெண்கள்: அஞ்சும் மோட்ஜில், தேஜஸ்வினி சவாந்த், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஆண்கள்): சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, பெண்கள்: மானு பாகெர், யஷாஸ்வினி சிங் தேஸ்வால்.

    25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் (பெண்கள்): ராஹி சர்னோபத், மானு பாகெர்.

    ஸ்கீட் (ஆண்கள்): அங்கட் விர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்

    10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக்குமார், அஞ்சும் மோட்ஜில். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி.
    பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
    ஜோகன்னஸ்பர்க்:

    பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் போட்டியில் தோற்றதால் தென்ஆப்பிரிக்கா அணி முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆடியது.

    அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் அரை சதமடித்தனர். டி காக் 80 ரன், கேப்டன் பவுமா 92 ரன், வான் டர் டுசன் 60 ரன், மில்லர் 50 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்தது. மில்லர் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்.

    இமாம் உல் ஹக்கை அவுட்டாக்கிய நிகிடி

    மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  பாபர் அசாம் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
     
    கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய பகர் சமான் 50வது ஓவரின் முதல் பந்தில் 193 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 10 சிக்சர், 18 பவுண்டரி அடித்து கடைசி வரை போராடினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 324 ரன்கள் மட்டுமே எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகியவை 1-1 என சமனிலையில் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 3 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தனி மனிதனாகப் போராடி 193 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் பகர் சமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்சூரியன் மைதானத்தில் 7ம் தேதி நடைபெறுகிறது.
    ×