என் மலர்
விளையாட்டு
கராச்சி:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக வருகிற 2-ந் தேதி வீரர்கள் புறப்பட உள்ளனர்.
இந்த நிலையில் அதே காலகட்டத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவரில் விளையாடுகிறது. ஜூலை 13 முதல் 27-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத அணி இலங்கையில் விளையாட உள்ளது. தவான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் இந்த செயலை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியா செய்யாததை இந்தியா சாதித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்சமாம் கூறியதாவது:-
வலுவான ஒரு அணி இருக்கும் போது அதே பலத்துடன் கூடிய மற்றொரு அணியை உருவாக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ள யோசனை சுவாரஸ்யமானது. இந்தியா இன்று செய்து வரும் முயற்சியை ஆஸ்திரேலியா 1990 மற்றும் 2000-ம் ஆண்டில் செய்திருந்தது. ஆனால் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாளும் என தெரிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட சர்வதேச தொடரில் இந்தியா விளையாடுகிறது. இரண்டுமே தேசிய அணிகளாகும்.
ஆஸ்திரேலியாவால் செய்யமுடியாததை இந்தியா சாதித்துள்ளது. இந்தியாவில் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 50 வீரர்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு தயான் சந்த் உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்த விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கான பரிந்துரைகள் ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பங்களை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. அதேபோல் இந்த ஆண்டும் சுய பரிந்துரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். வழக்கம் போல் தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் விருதுக்கு உரிய நபர்களை பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேல்ரத்னா விருது பெறுபவர்களுக்கு ரூ.25 லட்சமும், அர்ஜூனா, துரோணாச்சார்யா விருது பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சமும், தயான் சந்த் விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பறக்கும் சீக்கியர்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். 1960-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டவரான அவர் சண்டிகாரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 91 வயதான மில்கா சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மில்கா சிங் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் உதவியாளராக இருக்கும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். இதில் எனக்கு மட்டும் தொற்று இருப்பது தெரியவந்தது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். காய்ச்சல், சளி எதுவுமில்லை. 3-4 நாட்களில் நான் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவேன் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். நேற்று கூட ஓட்ட பயிற்சி மேற்கொண்டேன். நல்ல உத்வேகத்துடன் இருக்கிறேன். நாட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். எனக்கு வயது 91. ஆனாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன்’ என்றார். தற்போது துபாயில் இருக்கும் மில்கா சிங்கின் மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் நாளை நாடு திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி ஆடும் முதல் டெஸ்ட் இதுவாகும். இதைத் தொடர்ந்து இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ள இந்திய பெண்கள் அணி, இதுவரை ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வீழ்த்தியதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 9 டெஸ்டில் ஆடியிருக்கும் இந்திய அணி அதில் 4-ல் தோல்வியும், 5-ல் டிராவும் கண்டுள்ளது.
இதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய பெண்கள் கிரிக்கெட்டை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். இந்திய பெண்கள் அணி ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக பிங்க் பந்து டெஸ்டில் விளையாட இருப்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. அக்டோபர் 7, 9, 11 ஆகிய தேதிகளில் இந்த ஆட்டங்கள் நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடக்கின்றன.



முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் அதிகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை. கோப்பையும் வெல்லவில்லை. 2 மாதங்களுக்கு பிறகு உள்ளூரில் நடந்து வரும் களிமண் தரை போட்டியான ஜெனீவா ஓபன் டென்னிசில் களம் இறங்கினார்.
இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான பெடரர், தரவரிசையில் 75-வது இடம் வகிக்கும் பாப்லோ அந்துஜாருடன் (ஸ்பெயின்) மோதினார். 1 மணி 52 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். கடைசி செட்டில் 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பெடரர் அதன் பிறகு வரிசையாக 4 கேம்களை தவற விட்டு வீழ்ந்து போனார்.
வெற்றிக்கு பிறகு 35 வயதான அந்துஜார் கூறுகையில், ‘பெடரரை வீழ்த்தியதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. முந்தைய நாள் அவருடன் மோத இருப்பது எனது கனவு என்று கூறினேன். இப்போது அவரை தோற்கடித்து இன்னொரு படி மேல் சென்று விட்டேன். இதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உடனடியாக எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்’ என்றார்.
39 வயதான பெடரர் அடுத்து 30-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டு இருக்கிறார். ‘இந்த சீசனில் நான் மிக குறைந்த ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். எனது ஆட்டத்திறன் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். தற்போதைய நிலைமையில் பிரெஞ்ச் ஓபனை வெல்வது குறித்து நினைத்து கூட பார்க்க முடியாது. பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் நான் இல்லை’ என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது என்றும், கொரோனா தொற்று சூழ்நிலையில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் உலக கோப்பை போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது என்பது பற்றி கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் வருகிற அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனாலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் இருந்து மாற்றலாமா? என்கிற விஷயத்தில் அவசரம் காட்டாமல் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு நிலைமையை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி முடிவுக்கு வரலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
4 அணிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இந்த போட்டி தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்து இருக்கும் நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்த ஆட்டங்கள் நடக்காமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். எனவே ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை எங்கு, எப்போது நடத்தலாம் என்பது குறித்து பிரதானமாக விவாதிக்கிறார்கள். மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் ஜூன் 18-ந் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி அடுத்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு வசதியாக இந்த டெஸ்ட் தொடர் தேதியை மாற்றி அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தேதி மாற்றத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கும் பட்சத்தில் அதற்கு பிரதிபலனாக தங்கள் நாட்டிலேயே ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் வருவாய் கிடைக்கும். அத்துடன் அங்குள்ள கவுண்டி அணிகள் இந்த போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இருந்தன. ஐ.பி.எல். போட்டியை நடத்தும் வாய்ப்பில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகியவை இருந்தாலும் இங்கிலாந்தில் இந்த போட்டி நடைபெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் 75 சதவீதம் பேர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.
32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை அரங்கேறுகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியும் அங்கேயே ஆகஸ்டு 24-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

ஆனால் கொரோனா தாக்கம் மறுபடியும் எகிறி வருவதால் ஜப்பானில் பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அனைத்து விதமான கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்த ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. கொரோனா பரவலால் இந்த தடவை வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் ஒலிம்பிக் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், உள்ளூர் போட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு கூடுதலாக மருத்துவ ஆலோசகர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
ஒலிம்பிக் கிராமம் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பாதுகாப்பான வழிகளில் நடைபெற வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவார்கள். அவர்களில் தற்போதைய தருணத்தில், 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பாா்கள் அல்லது ஒலிம்பிக் போட்டிக்குள் போட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். இந்த எண்ணிக்கை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். தனிமைப்படுத்துதல், தினமும் கொரோனா பரிசோதனை, வெளியில் சுற்ற தடை, உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதி மறுப்பு இப்படி நிறைய தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் பாதுகாப்பே முதலில் முக்கியம். ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இன்னும் 64 நாட்களே உள்ள நிலையில் ஒலிம்பிக்கை பாதுகாப்பாக நடத்துவதில் நமது முழு கவனமும் இருக்க வேண்டும்’ என்றார்.






