என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் 75 சதவீதம் பேர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார். 32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை அரங்கேறுகிறது.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் 75 சதவீதம் பேர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.

    32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை அரங்கேறுகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியும் அங்கேயே ஆகஸ்டு 24-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    கோப்புப்படம்


    கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு இன்னும் 64 நாட்களில் தொடங்க உள்ளன. ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

    ஆனால் கொரோனா தாக்கம் மறுபடியும் எகிறி வருவதால் ஜப்பானில் பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அனைத்து விதமான கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்த ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. கொரோனா பரவலால் இந்த தடவை வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த நிலையில் ஒலிம்பிக் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், உள்ளூர் போட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு கூடுதலாக மருத்துவ ஆலோசகர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

    ஒலிம்பிக் கிராமம் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பாதுகாப்பான வழிகளில் நடைபெற வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவார்கள். அவர்களில் தற்போதைய தருணத்தில், 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பாா்கள் அல்லது ஒலிம்பிக் போட்டிக்குள் போட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். இந்த எண்ணிக்கை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்.

    ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். தனிமைப்படுத்துதல், தினமும் கொரோனா பரிசோதனை, வெளியில் சுற்ற தடை, உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதி மறுப்பு இப்படி நிறைய தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் பாதுகாப்பே முதலில் முக்கியம். ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இன்னும் 64 நாட்களே உள்ள நிலையில் ஒலிம்பிக்கை பாதுகாப்பாக நடத்துவதில் நமது முழு கவனமும் இருக்க வேண்டும்’ என்றார்.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி-யின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ந்தேதி முதல் ஜூன் 22-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் நியூசிலாந்து - இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் வெற்றி என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:-

    நியூசிலாந்து வெற்றி பெறும். இங்கிலாந்து கண்டிசன், டியூக் பால், இந்தியா தொடர்ச்சியாக விளையாடியது, அவர்கள் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் இங்கிலாந்து வருவது, அப்படி வந்து நேரடியாக போட்டியில் விளையாடுவது இதெல்லாம் நியூசிலாந்திற்கு சாதகம்.

    நியூசிலாந்து இந்தப் போட்டிக்கு முன் இங்கிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இது இறுதிப் போட்டிக்கு சிறந்த பயிற்சி போட்டியாக இருக்கும்.

    ஆகவே, நியூசிலாந்து அணி சிறப்பாக தயாராகும். பெரும்பாலான வீரர்கள் சிகப்பு பந்தில், குறிப்பாக டியூக் பந்தில் இங்கிலாந்தில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதெல்லாம் எனக்கு வெளிப்படையாக தெரிந்த விசயங்களில் ஒன்று. எல்லா வழிகளிலும் நியூசிலாந்துக்கு அணிக்குதான் சாதகம்.

    இவ்வாறு மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
    18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முதல் டோஸ் செலுத்திவிட்டனர். 2-வது டோஸ்க்கான காலஅவகாசம் இருக்கிறது. தற்போது இந்தியாவில் அனைத்து வீரர்கள் ஒன்றாக இணைந்து, தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    ஜூன் 2-ந்தேதி இங்கிலாந்து சென்று அந்நாட்டின் வழிகாட்டு நெறிமுறைப்படி தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் ஜூன் 18-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுகிறார்கள். ஆகஸ்ட் 4-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில் விளையாடுகிறார்கள்.

    ஷுப்மான் கில்

    சுமார் 3 மாத கால தொடராக இது அமையும். எனவே முதல் டோஸ் போட்டதில் இருந்து 2-வது டோஸ் போடுவதற்கான காலம் அந்த சமயத்தில்தான் வரும். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுகாதாரத்துறையில் 2-வது டோஸ் எடுத்துக் கொள்வார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் யாருக்காவது கொரோனா பாசிட்டிவ் இருந்தால், குறிப்பிட்ட நாளில்  இங்கிலாந்து செல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி ஜூன் 26-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த மூன்று தொடர்களிலும் விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். டி20 புகழ் கிறிஸ் கெய்ல், அந்த்ரே ரஸல், சிம்ரன் ஹெட்மையர் அணியில் இடம் பிடித்துள்ளனர் பொல்லார்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் பூரன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிம்ரன் ஹெட்மையர்

    18 பேர் கொண்ட வெஸ்ட் அணி:-

    1. பொல்லார்டு (கேப்டன்), 2 நிக்லோகஸ் பூரன் (துணைக் கேப்டன்), 3. ஆலன், 4. பிராவோ, 5. காட்ரெல், 6. பிடெல் எட்வர்ட்ஸ், 7. பிளெட்சர், 8. கிறிஸ் கெய்ல், 9. ஹெட்மையர், 10. ஹோல்டர், 11. அகியல் ஹொசைன், 12. எவின் லிவிஸ், 13. மெக்காய், 14. ரஸல், 15. லென்டில் சிம்மன்ஸ், 16. சின்கிளைர், 17. ஒசானே, 18. ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பம்சம் பெற்றது இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர். இந்த டெஸ்ட் ஒருமுறை இங்கிலாந்திலும், அடுத்த முறை ஆஸ்திரேலியாவிலும் நடைபெறும். கடந்த முறை இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடர் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் 2021-2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் நடக்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    அட்டவணை பின்வருமாறு:-

    டெஸ்ட்தேதிமைதானம்
    முதல் டெஸ்ட்டிசம்பர் 8-  12பிரிஸ்பேன்
    2-வது டெஸ்ட்டிசம்பர் 16-20அடிலெய்டு
    3-வது டெஸ்ட்டிசம்பர் 26-30மெல்போர்ன்
    4-வது டெஸ்ட்ஜனவரி் 5-9சிட்னி
    5-வது டெஸ்ட்ஜனவரி 14-18பெர்த்
    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 2-ந் தேதி தொடங்குகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் புதுமுக வீரர்களாக விக்கெட் கீப்பர் ஜேம்ஸ், பிரேசி, வேகப்பந்துவீச்சாளர் ஓலி ராபின்சன் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை.

    காயம் காரணமாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அதே போல் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய மொய்ன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், சாம்குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
    மும்பை:

    விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அங்கு முதலில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கும் இ்ந்திய அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

    இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய அணி வீரர்கள் 18 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி முதலில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் திட்டமிடலின்படி, மும்பையில் உள்ள ஓட்டலில் இந்திய வீரர்கள் இன்று தனிமைப்படுத்துதலை தொடங்குகிறார்கள். அதே சமயம் மும்பையில் வசிக்கும் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே, மூத்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் வருகிற 24-ந்தேதி தான் ஓட்டலில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இணைய உள்ளனர். ஆனால் முந்தைய 5 நாட்களும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் அவர்களும் மும்பையிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீரர்களுடன் குடும்பத்தினரும் உடன் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பில் மீண்டுவிட்ட இந்திய மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் சில தினங்களில் மும்பை வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை ஓட்டலில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததும் இந்திய வீரர்கள் அதன் பிறகு தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள். அங்கு சென்றதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் சவுத்தம்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு தனிமைப்படுத்தலின் போது கட்டுப்பாடுகளுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படும்.

    முன்னதாக இங்கிலாந்து கிளப்புவதற்கு முன்பாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 30-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 30-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 2015-ம் ஆண்டு சாம்பியனான ஸ்டான் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) நேற்று விலகினார்.

    வாவ்ரிங்கா கடந்த மார்ச் மாதம் இடது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்திருந்தார். அதில் இருந்து அவர் முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளார். 36 வயதான வாவ்ரிங்கா விம்பிள்டனுக்கு முன்பாக நடக்கும் புல்தரை டென்னிஸ் போட்டிகளில் களம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
    சிட்னி:

    2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயன்றது மைதானத்தில் ஒளிபரப்பான டெலிவிஷன் காட்சியின் மூலம் அம்பலமானது. பந்து ‘ஸ்விங்’ ஆவதற்கு வசதியாக அவர் இவ்வாறு செய்ததும், இந்த திட்டத்தின் பின்னணியில் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருந்ததும், அதனை கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்டுக்கு 9 மாதமும், ஸ்டீவன் சுமித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டும் தடை விதித்தது.

    இந்த விவகாரத்தில் பான்கிராப்ட் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய புயலை கிளப்பி உள்ளார். தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும் அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பந்தை நான் தேய்த்தது பவுலர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தான். எனவே இந்த விஷயம் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த பவுலருக்கு தெரியும் என்று சொல்லவில்லை.

    கோப்புப்படம்


    இதனால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட் உள்பட பலர் இந்த விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்தி சந்தேகம் மீண்டும் எழாமல் இருக்க தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்காக நாங்கள் நேர்மையுடன் விளையாடி வருகிறோம். அதில் பெருமிதம் கொள்கிறோம். கேப்டவுன் டெஸ்ட் விவகாரத்தில் எங்களுடைய நேர்மையை கடந்த சில நாட்களாக முன்னாள் வீரர்களும், சில பத்திரிகையாளர்களும் கேள்விக்குறியாக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு நாங்கள் ஏற்கனவே பலமுறை பதில் அளித்து விட்டோம். இருப்பினும் இந்த பிரச்சினையில் நாங்கள் மீண்டும் முக்கிய விஷயங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று நினைக்கிறோம். ஸ்டேடியத்தின் பெரிய திரையில் ஒளிபரப்பான காட்சியை பார்க்கும் வரைக்கும் வெளியில் இருந்து கொண்டு வந்த பொருளை வைத்து பான்கிராப்ட் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த விஷயம் எதுவும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் பவுலர்கள் என்ற காரணத்தால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து எங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த போட்டியில் நடுவராக பணியாற்றிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். பந்தை தேய்க்கும் காட்சி டெலிவிஷனில் வெளியான பிறகு பந்தை ஆய்வு செய்த நடுவர்கள் அதனை மாற்றவில்லை. ஏனெனில் பந்தை சேதப்படுத்தியதற்கான அறிகுறி எதுவும் அதில் தெரியவில்லை. இதனையெல்லாம் அன்று களத்தில் நடந்தது தவறில்லை என்று சொல்வதற்கு காரணமாக குறிப்பிடவில்லை. அன்று நடந்தது தவறாகும். அதுபோல் ஒருபோதும் நடந்து இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் இருந்து நாங்கள் நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். எங்களது நடத்தை, ஆடும் விதம், ஆட்டத்தை மதிப்பது ஆகியவைகளில் நல்லவிதமான மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மனிதராகவும், வீரராகவும் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் எங்களது அர்ப்பணிப்பு தொடரும். எங்களை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரம் அணியின் பவுலர்களுக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பான்கிராப்ட் தனது நிலைப்பாட்டில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விசாரணை கமிட்டியினர் பான் கிராப்ட்டை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர்களிடம், ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு தன்னிடம் குறிப்பிடத்தக்க புதிய தகவல் எதுவும் இல்லை’ என்று பான் கிராப்ட் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ மே 29-ந்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.
    இந்தியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது 2-வது அலை கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது. இதனால் போட்டியை நடத்த முடியுமா? என்பது தெரியவில்லை.

    ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாவிட்டால், வெளிநாடுகளில் போட்டியை நடத்த முயற்சி மேற்கொள்ளலாம். போட்டியை நடத்த இன்னும் அதிகமான நாட்கள் உள்ளதால், தற்போது இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியதில்லை.

    இருந்தாலும், வருகிற 29-ந்தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும். அந்த கூட்டத்தில் டி20 உலகக்கோப்பை குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    கடுமையான பாதுகாப்பு வளைத்திற்குள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற பொழுதே, வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    2018-ம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
    தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.

    2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தென்ஆப்பிரிக்கா தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 7-ம் இடம் பிடித்தது.

    ஐபிஎல் 2020 போட்டியில் 14 ஆட்டங்களில் 454 ரன்கள் குவித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 207 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 164.28 ஆகும்.

    டி வில்லியர்ஸ்

    இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அணியில் மீண்டும் அவர் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

    இதையடுத்து மேற்கிந்தியத் தீவில் விளையாடவுள்ள டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை.
    லா லிகா கால்பந்து போட்டியில் 25-வது வெற்றியை ருசித்த அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.
    மாட்ரிட்:

    20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    இந்த போட்டி தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினம் இரவு மாட்ரிட்டில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட், ஒசாசுனா அணியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 75-வது நிமிடத்தில் ஒசாசுனா அணி வீரர் புதிமிர் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதனை அடுத்து ஆக்ரோஷமாக ஆடிய அட்லெடிகோ மாட்ரிட் அணி அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பி சரிவில் இருந்து மீண்டதுடன் வெற்றியையும் தன்வசமாக்கியது. அந்த அணி வீரர்கள் ரெனான் லோடி (82-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (88-வது நிமிடம்) கோல் அடித்தனர். முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அட்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை நெருங்கியது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை சாய்த்தது. வெற்றிக்கான கோலை ரியல் மாட்ரிட் அணி வீரர் நாசோ 68-வது நிமிடத்தில் அடித்தார். இந்த வெற்றியால் சாம்பியன் பட்ட வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணி நீடிக்கிறது.

    இன்னொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். செல்டா விகோ அணி தரப்பில் சான்டி மினா 38-வது, 89-வது நிமிடங்களில் கோல் அடித்தார். இந்த தோல்வியின் மூலம் 3-வது இடத்தில் உள்ள பார்சிலோனா அணியின் (76 புள்ளிகள்) சாம்பியன் பட்ட ரேஸ் முடிவுக்கு வந்தது.

    இதுவரை நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 4 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது. ரியல் மாட்ரிட் அணி 24 வெற்றி, 9 டிரா, 4 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் இவ்விரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    வருகிற 22-ந் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட், வல்லாடோலிட் அணியையும், ரியல் மாட்ரிட், வில்லா ரியல் அணியையும் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்தே சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பது தெரியவரும். 2 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
    ×