என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2018-ம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
    தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.

    2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தென்ஆப்பிரிக்கா தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 7-ம் இடம் பிடித்தது.

    ஐபிஎல் 2020 போட்டியில் 14 ஆட்டங்களில் 454 ரன்கள் குவித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 207 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 164.28 ஆகும்.

    டி வில்லியர்ஸ்

    இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அணியில் மீண்டும் அவர் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

    இதையடுத்து மேற்கிந்தியத் தீவில் விளையாடவுள்ள டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை.
    லா லிகா கால்பந்து போட்டியில் 25-வது வெற்றியை ருசித்த அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.
    மாட்ரிட்:

    20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    இந்த போட்டி தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினம் இரவு மாட்ரிட்டில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட், ஒசாசுனா அணியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 75-வது நிமிடத்தில் ஒசாசுனா அணி வீரர் புதிமிர் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதனை அடுத்து ஆக்ரோஷமாக ஆடிய அட்லெடிகோ மாட்ரிட் அணி அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பி சரிவில் இருந்து மீண்டதுடன் வெற்றியையும் தன்வசமாக்கியது. அந்த அணி வீரர்கள் ரெனான் லோடி (82-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (88-வது நிமிடம்) கோல் அடித்தனர். முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அட்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை நெருங்கியது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை சாய்த்தது. வெற்றிக்கான கோலை ரியல் மாட்ரிட் அணி வீரர் நாசோ 68-வது நிமிடத்தில் அடித்தார். இந்த வெற்றியால் சாம்பியன் பட்ட வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணி நீடிக்கிறது.

    இன்னொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். செல்டா விகோ அணி தரப்பில் சான்டி மினா 38-வது, 89-வது நிமிடங்களில் கோல் அடித்தார். இந்த தோல்வியின் மூலம் 3-வது இடத்தில் உள்ள பார்சிலோனா அணியின் (76 புள்ளிகள்) சாம்பியன் பட்ட ரேஸ் முடிவுக்கு வந்தது.

    இதுவரை நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 4 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது. ரியல் மாட்ரிட் அணி 24 வெற்றி, 9 டிரா, 4 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் இவ்விரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    வருகிற 22-ந் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட், வல்லாடோலிட் அணியையும், ரியல் மாட்ரிட், வில்லா ரியல் அணியையும் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்தே சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பது தெரியவரும். 2 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
    கைவிரல் காயத்துக்கு அறுவை சிகிக்சை செய்து கொண்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஒதுங்கினார்.
    லண்டன்:

    கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடினார். கைவிரல் மற்றும் வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு அதிகரித்ததால் அவர் ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். கைவிரல் காயத்துக்கு அறுவை சிகிக்சை செய்து கொண்ட அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஒதுங்கினார்.

    இதற்கிடையில் காயத்தில் இருந்து தேறிய ஜோப்ரா ஆர்ச்சர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கடந்த வாரம் நடந்த கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சசெக்ஸ் அணிக்காக களம் இறங்கினார். இதில் முதல் இன்னிங்சில் 13 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டை வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது இன்னிங்சில் 5 ஓவர்கள் பந்து வீசிய நிலையில் கையில் வலி ஏற்பட்டதால் தொடர்ந்து பந்து வீசவில்லை. ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் மீண்டும் வலி ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டாக்டரிடம் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அவருக்கு முழங்கையில் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி தொடங்க இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் விலகி இருக்கிறார்.
    தப்பியோடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் நண்பர் அஜய் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார்.  மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தான்கட் (வயது 23).  கடந்த 4ந்தேதி, மல்யுத்த வீரர் சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களை, சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.  

    இதன்பின்னர் சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.  பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.  ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக  சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.  சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.  அவரின் நண்பர்கள் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் சுஷில் குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதனையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் மீது டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

    இந்த நிலையில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று அவரை பிடிப்பதற்கு பரிசு தொகை அறிவிக்கவும் டெல்லி போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி, இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர்.  இதேபோன்று தப்பியோடிய அவரது நண்பர் அஜய் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியை தேர்வு செய்யும் உறுப்பினர், மலிங்காவிடம் இருந்து இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்கிறார்கள்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இலங்கை அணிக்காக விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிறது. எல்லா நாடுகளும் டி20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதில் தயாராக உள்ளன. ஆனால் இலங்கை அணியில் மலிங்கா இடம் பெறுவாரா? என்பதை தேர்வாளர்கள் உறுதி செய்யமுடியாமல் இருக்கின்றனர்.

    இதுகுறித்து இலங்கை அணி தேர்வு குழுவில் இடம் பிடித்துள்ளவர்களில் ஒருவரான பிரமோத்யா விக்ரமசிங்கே கூறுகையில் ‘‘மலிங்கா சிறந்த 20 கிரிக்கெட் வீரர், அவருடைய சேவை எப்போதுமே அணிக்கு முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அனைத்து வீரர்கள் எங்களுக்கு ஒரே மாதிரிதான். தேர்வில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் பயன்படுத்துவோம்.

    நான் மலிங்காவை தொடர்பு கொண்டு, இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் நம்பிக்கை உள்ளதா? என்றார். அவர் என்னிடம், கடந்த ஒன்றிரண்டு ஆண்டாக போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் அவரிடம் நான், ஒரு வீரர் உள்நாட்டு தொடரில் விளையாடினால்தான் தேசிய அணித்தேர்வு தகுதியானவர் எனத் தெரிவித்தேன். மலிங்கா இதை நிறைவேற்றினால் அந்த நேரத்தில் அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

    மலிங்கா எங்களுடைய தேர்வு கொள்கையை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதை அப்படியோ தொடருங்கள் என்றால். எனினும், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது அல்லது விளையாட விரும்பவில்லை என்பது குறித்து தெளிவாக பதில் அளிக்கவில்லை’’ என்றார்.
    ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு, மாலத்தீவு சென்றடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று சொந்த நாடு திரும்பினார்கள்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பயோ-பபுள் வெடித்து வீரர்கள் கொரோனா தொற்றால் தாக்கப்பட்டனர். இதனால் கடந்த 4-ந்தேதி ஐ.பி.எல். போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப விரும்பினர். பிசிசிஐ-யும் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படவில்லை.

    ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடி இந்தியாவில் இருந்து விமானங்கள் வர மே 15-ந்தேதி வரை தடைவிதித்தது. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தனர். கடந்த 6-ந்தேதி மாலத்தீவு சென்ற அவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் மாலத்தீவில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தனர்.

    நேற்று முன்தினத்துடன் ஆஸ்திரேலியாவின் தடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் சென்றன. இந்த நிலையில் இன்று ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள் என 38 பேர் இன்று சிட்னி சென்றடைந்தனர். அங்கு இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு செல்வார்கள்.

    ஆஸ்திரேலிய வீரர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்ததற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லே பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்த சீசனில் இருந்து இரண்டு அணிகள் கூடுதலாக விளையாடும்போது, ஆடும் லெவனில் ஐந்து வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் சில அணிகளில் முக்கியமான வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. சரியான கலவை அணியும் மிஸ் ஆகிறது. இதனால் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாட வாய்ப்புள்ளது. அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஐந்து வீரர்களை ஆடும் லெவன் அணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலையில் ஒரு அணிக்கு 7 இந்திய வீரர்கள் என மொத்தம் 56 வீரர்கள் ஆடும் லெவன் அணியில் இடம் பெற முடியும். 10 அணிகள் வந்தால், 70 வீரர்கள் பங்கேற்க முடியும். ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதித்தாலும் 60 வீரர்கள் விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

    முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி அசத்தினார் ஜோகோவிச்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3 என்ற கணக்கில் வென்றார்.

    2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் வெல்லும் 10-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
    சர்வதேச போட்டிகள் போதிய அளவில் இல்லாவிட்டாலும் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி சிறந்த முறையில் தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டனில் இருந்து பி.வி.சிந்து, சாய் பிரனீத் மற்றும் இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்று இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மீது இந்த முறையும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் மலேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய போட்டிகள் கொரோனா அச்சத்தால் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 66 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சர்வதேச போட்டிகள் இல்லாததால் சிந்து தனிப்பட்ட முறையில் தன்னை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருகிறார்.

    இது குறித்து உலக சாம்பியனான 25 வயதான பி.வி.சிந்து ேநற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றாக சிங்கப்பூர் ஓபன் இருந்தது. ஆனால் இப்போது அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் வேறு போட்டிகள் இல்லை. எனவே நான் பயிற்சியின் போது வெவ்வேறு வீராங்கனைகளுடன் விளையாடி என்னை தயார்படுத்துகிறேன். எனது பயிற்சியாளர் பார்க் டா சங் (கொரியா) போட்டிக்குரிய சூழலை உருவாக்கி எனக்கு பயிற்சி அளிக்கிறார்.

    ஒவ்வொரு வீராங்கனைகளும் வெவ்வேறு விதமான பாணியில் ஆடுவார்கள். தாய் ஜூ யிங் (சீனதைபே) அல்லது ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) போன்றவர்கள் வித்தியாசமான ஸ்டைலில் ஆடக்கூடியவர்கள். அந்த வகையிலேயே பார்க் டா சங் என்னை தயார்படுத்துகிறார்.

    இந்த ஆண்டில் இதுவரை எல்லாமே நன்றாக அமைந்துள்ளது. ஒரு வீராங்கனையாக முன்னேற்றம் கண்டு வருகிறேன். எனது ஆட்டத்தை அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப பயிற்சியாளர் ஆலோசனை வழங்குகிறார். எனது தந்தையும் எனக்கு உதவிகரமாக இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

    தற்போதைய நிலைமையில், போட்டிகள் ரத்து ெசய்யப்படுவது ஒரு வீராங்கனையாக வருத்தம் அளிக்கிறது. ஆனால் அனைவரின் நலன் கருதியே இத்தகைய முடிவு எடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பரவலால் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதற்கு முன்பாக நாம் எல்லாம் மனிதர்கள். வாழ்க்கை தான் முதலில் முக்கியம். ஒரு வேளை சில போட்டிகள் நடந்தாலும் அதில் முழு பாதுகாப்பு இருக்குமா என்பது தெரியாது. போட்டி பாதுகாப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் எதிலும் உறுதி கிடையாது. வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பது நமக்கு தெரியாது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் அமைத்தாலும், நாம் மிக கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது.

    ஒவ்வொரு நாடுகளிலும் தனித்தனி கொரோனா தடுப்பு விதிமுறைகள் உள்ளன. தாய்லாந்து போட்டியின் போது 2-3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்தனர். ஆல்-இங்கிலாந்து தொடரின் போது, விமானத்தில் வந்தவர்களில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு என்றாலும் அந்த அணியையே போட்டியில் இருந்து விலக்கினர். ஆனால் நாம் இவற்றை சமாளித்து தான் ஆக வேண்டும்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கூட ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதாக கேள்விப்படுகிறேன். அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து கிளம்பும் போது கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதன் பிறகு அங்கு சென்றதும் இன்னொரு பரிசோதனை. நிச்சயம் இது கடினமான பணி தான்.

    சில சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் தவறான கொரோனா முடிவுகள் வந்தன. ஆனால் இது ஒலிம்பிக் விளையாட்டு. இதில் அத்தகைய தவறுகள் நடக்காத வகையில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு சிந்து கூறினார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை துவம்சம் செய்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் நேர் செட்டில் பிளிஸ்கோவாவை பந்தாடி கோப்பையை வசப்படுத்தினார்.

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 9-வது இடம் வகிப்பவருமான கரோலினா பிளிஸ்கோவாவும் (செக்குடியரசு), 15-ம் நிலை மங்கை இகா ஸ்வியாடெக்கும் (போலந்து) கோதாவில் குதித்தனர்.

    களிமண் தரை போட்டியான இதில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். எதிராளி ஒரு புள்ளி கூட எடுக்க முடியாத அளவுக்கு அதிரடியான ஷாட்டுகளால் நிலைகுலைய வைத்த ஸ்வியாடெக் வெறும் 46 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அசத்தினார். அதுவும் முன்னாள் சாம்பியனான பிளிஸ்கோவாவினால் ஒரு கேம் கூட எடுக்க முடியாத பரிதாபம் நிகழ்ந்தது.

    ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை துவம்சம் செய்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார். இது அவருக்கு 3-வது சர்வதேச பட்டமாகும். அத்துடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய போட்டியில் பட்டத்தை ருசித்த 4-வது ‘டீன் ஏஜ்’ வீராங்கனை என்ற சிறப்பையும் 19 வயதான ஸ்வியாடெக் பெற்றார். இதன் மூலம் அவர் தரவரிசையில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார். அவருக்கு ரூ.1½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு வீராங்கனை மகுடம் சூடியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த தொடரில் 1983-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தரப்பாக அமைந்த இறுதிசுற்று இது தான்.

    அவரை பாராட்டிய பிளிஸ்கோவா, ‘ஸ்வியாடெக் இன்று சிறந்த டென்னிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு வாழ்த்துகள். அதே சமயம் நான் இந்த தொடரில் சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடியிருந்தாலும் இன்றைய நாளை சீக்கிமாக மறக்க வேண்டும்.’ என்றார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் போராடி லோரென்ஜோ சோனிகோவை (இத்தாலி) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.
    விராட் கோலி களத்தில் கடும் போட்டி அளிக்கக் கூடியவர். அவர் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார் என ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியது. அதன்பிறகு 2020-21-ம் ஆண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணில் புரட்டியெடுத்தது.
    இவ்விரு தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக டிம் பெய்ன் செயல்பட்டார். அவர் இந்திய கேப்டன் விராட் கோலியை தற்போது வெகுவாகப் புகழ்ந்துள்ளார். 36 வயதான டிம் பெய்ன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

    டிம் பெய்ன்

    விராட் கோலியைப் பொறுத்தவரை அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். அவரை போன்ற வீரர் தங்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று எந்த அணியும் விரும்பும்.

    களத்தில் கடும் போட்டி அளிக்கக் கூடியவர். அவர் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். எங்களுக்கு எதிராக ஆடுவதை சவாலாக எடுத்துக் கொள்வதுடன், கோபமூட்டுவதையும் விரும்புவார். ஏனெனில் இதன்மூலம் அவர் களத்தில் சிறப்பாக செயல்படுகிறார்.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொடரின் போது அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை மறக்க முடியாது. அவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என தெரிவித்தார்.
    கேன் வில்லியம்சன்தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்ற கருத்தில் சல்மான் பட்டுக்கும், மைக்கேல் வாகனுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். தற்போது வர்ணனையாளராக உள்ளார். அவ்வப்போது சமூக இணையத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பதிவிட்டு, ரசிகர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாவார்.

    அடுத்த மாதம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசும்போது ‘‘விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன். அவர் இந்தியாவில் பிறந்திருந்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அழைக்கப்பட்டிருப்பார்’’என்று வாகன் தெரிவித்திருந்தார்.

    மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட் ‘‘இப்போது, ஒரு தொடக்க வீரராக, நீங்கள் ஒரு சதம் கூட பெறவில்லை என்றால், அது விவாதிக்கத்தக்கதல்ல. ஒரு விவாதத்தைத் தூண்டும் விஷயங்களைச் சொல்வதில் ஒரு திறமை இருக்கிறது. தவிர, ஒரு தலைப்பை நீ்ட்டிக்கொண்டே செல்ல மக்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது.

    மேலும், ஒப்பிடுவது யார்? மைக்கேல் வாகன். அவர் இங்கிலாந்தின் தலைசிறந்த கேப்டன் ஒரு விசயம் என்னவெனில் அவர் பேட்டிங்கில் சிறந்தப்பாக செயல்படவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை’’ எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த மைக்கேல் வாகன் ‘‘இது மிகவும் உண்மை சல்மான். ஆனால், எங்களுடைய சிறந்த விளையாட்டு சிலரை போன்று கரைபடிய நான் மேட்ச் பிக்சர் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு சல்மான் பட் கைது செய்யப்பட்டதோடு, கிரிக்கெட் விளையாட தடையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×