search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் கோப்பையுடன் ஸ்வியாடெக்.
    X
    சாம்பியன் கோப்பையுடன் ஸ்வியாடெக்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் : போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை துவம்சம் செய்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் நேர் செட்டில் பிளிஸ்கோவாவை பந்தாடி கோப்பையை வசப்படுத்தினார்.

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 9-வது இடம் வகிப்பவருமான கரோலினா பிளிஸ்கோவாவும் (செக்குடியரசு), 15-ம் நிலை மங்கை இகா ஸ்வியாடெக்கும் (போலந்து) கோதாவில் குதித்தனர்.

    களிமண் தரை போட்டியான இதில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். எதிராளி ஒரு புள்ளி கூட எடுக்க முடியாத அளவுக்கு அதிரடியான ஷாட்டுகளால் நிலைகுலைய வைத்த ஸ்வியாடெக் வெறும் 46 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அசத்தினார். அதுவும் முன்னாள் சாம்பியனான பிளிஸ்கோவாவினால் ஒரு கேம் கூட எடுக்க முடியாத பரிதாபம் நிகழ்ந்தது.

    ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை துவம்சம் செய்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார். இது அவருக்கு 3-வது சர்வதேச பட்டமாகும். அத்துடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய போட்டியில் பட்டத்தை ருசித்த 4-வது ‘டீன் ஏஜ்’ வீராங்கனை என்ற சிறப்பையும் 19 வயதான ஸ்வியாடெக் பெற்றார். இதன் மூலம் அவர் தரவரிசையில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார். அவருக்கு ரூ.1½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு வீராங்கனை மகுடம் சூடியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த தொடரில் 1983-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தரப்பாக அமைந்த இறுதிசுற்று இது தான்.

    அவரை பாராட்டிய பிளிஸ்கோவா, ‘ஸ்வியாடெக் இன்று சிறந்த டென்னிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு வாழ்த்துகள். அதே சமயம் நான் இந்த தொடரில் சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடியிருந்தாலும் இன்றைய நாளை சீக்கிமாக மறக்க வேண்டும்.’ என்றார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் போராடி லோரென்ஜோ சோனிகோவை (இத்தாலி) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.
    Next Story
    ×