என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கு வரமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சொல்லி விட்டார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் வருவாரா? என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது.
ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய விஷயங்கள் மாறலாம். அணி நிர்வாகம் என்னை தலைமை தாங்கி அணியை வழிநடத்தச் சொன்னால் அதனை ஏற்று செயல்பட தயார் என தெரிவித்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதினர்.
இதில், அனுபவ வீரரான பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜெர்மனி வீரர் 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை பெடரர் 7-6 கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார்.
இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக இந்த போட்டி இந்தியாவில் அரங்கேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
கொரோனா பரவல் சூழ்நிலையை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி 20 ஓவர் உலக கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து முடிவை வருகிற 28-ந் தேதிக்குள் தெரிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முறைப்படி கேட்டது. என்றாலும் போட்டிக்குரிய உரிமத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியதே தவிர இந்த போட்டி அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை. எஞ்சிய ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ‘பிட்ச்’ தயாராக 3 வார காலம் இடைவெளி தேவைப்படும். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் ஆட்டங்களை அமீரகத்தில் நவம்பர் மாதத்தில் தான் தொடங்க முடியும். அதற்கு முன்னதாக தொடக்க சுற்று ஆட்டங்கள் ஓமனில் ஒரு வாரம் நடைபெறும்.
தற்போது இந்தியாவில் ஒருநாளைக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு தான். எனவே அக்டோபரில் தொடங்கும் உலக கோப்பை போட்டியின் போது கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த மாதத்திலேயே எப்படி கணிக்க முடியும். கொரோனா 3-வது அலை வந்தால் என்ன செய்ய முடியும். எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை செப்டம்பரில் இங்கு நடத்த முடியாமல் அமீரகத்துக்கு மாற்றி இருக்கும் போது 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை எப்படி இந்தியாவில் நடத்த முடியும்.
அத்துடன் கொரோனா சூழ்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர் இந்தியா வந்து விளையாட ஆர்வம் காட்டுவார்கள். அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள். அதேநேரத்தில் அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் நடந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள்’ என்று தெரிவித்தார்.

லண்டன்:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனின் வர்ணனையாளராக தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார். அவர் முதல் முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
தினேஷ் கார்த்திக், முன்னாள் பிரபல வீரரும், வர்ணனை செய்வதில் கில்லாடியுமான சுனில் கவாஸ்கருடன் இணைந்து இந்த போட்டியில் வர்ணனை செய்கிறார்.
இந்தநிலையில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்குக்கு சுனில் கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.
தினேஷ் கார்த்திக் டெஸ்டில் அறிமுகமான போது நான் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தேன். தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் டெலிவிஷன் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
தினேஷ் கார்த்திக் தனது வர்ணனை பணியை சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பாரீஸ்:
ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவா. அவர் இரட்டையர் தர வரிசையில் 101-வது இடத்தில் உள்ளார்.
26 வயதான சிஜிக்கோவா கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் மேடிசனுடன் இணைந்து ஆண்ட்ரியா- பாட்ரிஷியா (ருமேனியா) ஜோடியிடம் தோற்றார்.
இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து வழக்கத்தை விட அதிகமானவர்கள் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பிரான்ஸ் போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் சிஜிக்கோவா மேட்ச் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அந்த போட்டியில் அவர் வேண்டுமென்றே தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரீஸ் போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் இரட் டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 5-ம் நிலை வீரரான ஸ்டெபான் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-வது சுற்று ஆட்டத்தில் 31-வது இடத்தில் உள்ள ஜான் இஸ்னரை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
இதில் சிட்சிபாஸ் 5-7, 6-3, 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 38 நிமிட நேரம் தேவைப்பட்டது.
சிட்சிபாஸ் 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த 12-வது வரிசையில் உள்ள பஸ்டாவை சந்திக்கிறார்.
பஸ்டா 3-வது சுற்றில் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார்.
உலகின் 2-ம் நிலை வீரரான டேனில் மெட்வ தேவ் (ரஷியா), 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஒபல்காவை எதிர் கொண்டார். இதில் மெட்வதேவ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.
மற்ற ஆட்டங்களில் 6-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 22-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் கேரின் (சிலி), நிஷிகோரி (ஜபார்) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
27-வது வரிசையில் உள்ள இத்தாலி வீரர் பேபியோ போக்னி 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
பெண்கள் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இவ்விரு தொடர்களிலும் 20 ஓவர் அணியில் புதுமுக வீரராக பேட்ஸ்மேன் 22 வயதான அசாம் கான் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான மொயின் கானின் மகன் ஆவார். ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பாக இவரது சிக்சர் அடிக்கும் திறன் தான் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்பே அவரை அணிக்கு இழுப்பது குறித்து தேர்வு குழு யோசித்தது. ஆனால் அந்த சமயத்தில் அவரது உடல் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாக இருந்தது. ஓரளவு மெலிந்தால் தான் அணித்தேர்வுக்கு பரிசீலிக்க முடியும் என்று கூறி விட்டனர். அதன் பிறகு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அவர் 30 கிலோ குறைத்து இப்போது 100 கிலோ கொண்டவராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள வீராங்கனைகளில் ஒருவராக கணிக்கப்பட்ட 4-ம் நிலை நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் நேற்று அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். அவரை தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) 6-4, 2-6, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றை எட்டினார். பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தவறுகளையும் (39 முறை), டபுள்பால்ட்டையும் (8) சபலென்கா அதிக முறை செய்ததால் பின்னடைவை சந்திக்க வேண்டியதாகி விட்டது.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மேடிசன் கீசை (அமெரிக்கா) வீழ்த்தினார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் 4-வது சுற்றை எட்டிய அஸரென்கா அடுத்து பாவ்லிசென்கோவாவை சந்திக்கிறார். எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) ஆகியோர் தங்களது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாமில் 4-வது சுற்றை எட்டியிருக்கிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லாஸ்லோ டெரை (செர்பியா) சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) எதிராக 4 மணி 35 நிமிடங்கள் மல்லுகட்டிய 46-ம் நிலை வீரரான டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) 7-6 (7-3), 2-6, 7-6 (8-6), 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக 4-வது சுற்றை அடைந்தார்.
நிஷிகோரி (ஜப்பான்), பெடெரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை விரட்டினார். பிரெஞ்ச் ஓபனில் முதல்முறையாக இரவில் ஆடிய நடால் வெற்றியோடு அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நடாலுக்கு எதிராக கேஸ்கியூட் இதுவரை வெற்றி பெற்றதில்லை. நடாலுடன் மோதிய 17 ஆட்டங்களிலும் கேஸ்கியூட்டுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. ‘களிமண் தரை’ நாயகனான நடாலுக்கு 35-வது வயது பிறந்துள்ளது. பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி கிட்டியுள்ளது.
கேஸ்கியூட்டுடன் சேர்த்து களம் கண்ட 18 பிரான்ஸ் வீரர்களும் 2-வது சுற்றுடன் நடையை கட்டி விட்டனர். 3-வது சுற்றுக்கு ஒரு பிரான்ஸ் வீரரும் தகுதி பெறவில்லை. இந்த வகையில் 1968-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் பிரான்சின் மோசமான செயல்பாடாக பதிவாகியுள்ளது. இதே போல் பிரான்ஸ் வீராங்கனைகளும் இந்த சீசனில் 2-வது சுற்றை தாண்டாத பரிதாபம் நிகழ்ந்துள்ளது.






