என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச், லிதுவேனிய வீரர் ரிச்சர்ட்சை வீழ்த்தினார்.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் (வயது 35), இங்கிலாந்து வீரர் கேமரான் நோரியை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-3, 6-3, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற நடால், நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். 

    முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச், 6-1, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் லிதுவேனிய வீரர் ரிச்சர்ட்சை வீழ்த்தினார். 
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனின் வர்ணனையாளராக தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார்.

    லண்டன்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனின் வர்ணனையாளராக தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார். அவர் முதல் முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

    தினேஷ் கார்த்திக், முன்னாள் பிரபல வீரரும், வர்ணனை செய்வதில் கில்லாடியுமான சுனில் கவாஸ்கருடன் இணைந்து இந்த போட்டியில் வர்ணனை செய்கிறார்.

    இந்தநிலையில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்குக்கு சுனில் கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

    தினேஷ் கார்த்திக் டெஸ்டில் அறிமுகமான போது நான் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தேன். தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் டெலிவி‌ஷன் வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.

    தினேஷ் கார்த்திக் தனது வர்ணனை பணியை சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரீஸ் போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாரீஸ்:

    ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவா. அவர் இரட்டையர் தர வரிசையில் 101-வது இடத்தில் உள்ளார்.

    26 வயதான சிஜிக்கோவா கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் மேடிசனுடன் இணைந்து ஆண்ட்ரியா- பாட்ரிஷியா (ருமேனியா) ஜோடியிடம் தோற்றார்.

    இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து வழக்கத்தை விட அதிகமானவர்கள் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பிரான்ஸ் போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில் சிஜிக்கோவா மேட்ச் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அந்த போட்டியில் அவர் வேண்டுமென்றே தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இந்தநிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரீஸ் போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் இரட் டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். 

    6-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 22-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் கேரின் (சிலி), நிஷிகோரி (ஜபார்) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 5-ம் நிலை வீரரான ஸ்டெபான் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-வது சுற்று ஆட்டத்தில் 31-வது இடத்தில் உள்ள ஜான் இஸ்னரை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

    இதில் சிட்சிபாஸ் 5-7, 6-3, 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 38 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    சிட்சிபாஸ் 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த 12-வது வரிசையில் உள்ள பஸ்டாவை சந்திக்கிறார்.

    பஸ்டா 3-வது சுற்றில் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார்.

    உலகின் 2-ம் நிலை வீரரான டேனில் மெட்வ தேவ் (ரஷியா), 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஒபல்காவை எதிர் கொண்டார். இதில் மெட்வதேவ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

    மற்ற ஆட்டங்களில் 6-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 22-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் கேரின் (சிலி), நிஷிகோரி (ஜபார்) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    27-வது வரிசையில் உள்ள இத்தாலி வீரர் பேபியோ போக்னி 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    புதுமுக வீரரான அசாம் கான் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார்.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இவ்விரு தொடர்களிலும் 20 ஓவர் அணியில் புதுமுக வீரராக பேட்ஸ்மேன் 22 வயதான அசாம் கான் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான மொயின் கானின் மகன் ஆவார். ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பாக இவரது சிக்சர் அடிக்கும் திறன் தான் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஓராண்டுக்கு முன்பே அவரை அணிக்கு இழுப்பது குறித்து தேர்வு குழு யோசித்தது. ஆனால் அந்த சமயத்தில் அவரது உடல் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாக இருந்தது. ஓரளவு மெலிந்தால் தான் அணித்தேர்வுக்கு பரிசீலிக்க முடியும் என்று கூறி விட்டனர். அதன் பிறகு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அவர் 30 கிலோ குறைத்து இப்போது 100 கிலோ கொண்டவராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள வீராங்கனைகளில் ஒருவராக கணிக்கப்பட்ட 4-ம் நிலை நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் நேற்று அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். அவரை தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) 6-4, 2-6, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றை எட்டினார். பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தவறுகளையும் (39 முறை), டபுள்பால்ட்டையும் (8) சபலென்கா அதிக முறை செய்ததால் பின்னடைவை சந்திக்க வேண்டியதாகி விட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மேடிசன் கீசை (அமெரிக்கா) வீழ்த்தினார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் 4-வது சுற்றை எட்டிய அஸரென்கா அடுத்து பாவ்லிசென்கோவாவை சந்திக்கிறார். எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) ஆகியோர் தங்களது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாமில் 4-வது சுற்றை எட்டியிருக்கிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லாஸ்லோ டெரை (செர்பியா) சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) எதிராக 4 மணி 35 நிமிடங்கள் மல்லுகட்டிய 46-ம் நிலை வீரரான டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) 7-6 (7-3), 2-6, 7-6 (8-6), 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக 4-வது சுற்றை அடைந்தார்.

    நிஷிகோரி (ஜப்பான்), பெடெரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை விரட்டினார். பிரெஞ்ச் ஓபனில் முதல்முறையாக இரவில் ஆடிய நடால் வெற்றியோடு அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நடாலுக்கு எதிராக கேஸ்கியூட் இதுவரை வெற்றி பெற்றதில்லை. நடாலுடன் மோதிய 17 ஆட்டங்களிலும் கேஸ்கியூட்டுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. ‘களிமண் தரை’ நாயகனான நடாலுக்கு 35-வது வயது பிறந்துள்ளது. பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி கிட்டியுள்ளது.

    கேஸ்கியூட்டுடன் சேர்த்து களம் கண்ட 18 பிரான்ஸ் வீரர்களும் 2-வது சுற்றுடன் நடையை கட்டி விட்டனர். 3-வது சுற்றுக்கு ஒரு பிரான்ஸ் வீரரும் தகுதி பெறவில்லை. இந்த வகையில் 1968-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் பிரான்சின் மோசமான செயல்பாடாக பதிவாகியுள்ளது. இதே போல் பிரான்ஸ் வீராங்கனைகளும் இந்த சீசனில் 2-வது சுற்றை தாண்டாத பரிதாபம் நிகழ்ந்துள்ளது.


    இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை (வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது) ஏறக்குறைய நியூசிலாந்தில் உள்ளது போன்றே இருக்கும். அதாவது பந்து நன்கு வேகத்துடன் ஸ்விங்கும் ஆகும். இவை எல்லாம் நியூசிலாந்துக்கு பழக்கப்பட்டது என்பதால் அவர்களால் எந்தவித தடுமாற்றமும் இன்றி பந்து வீச முடியும். இதன் அடிப்படையில் பார்த்தால் நியூசிலாந்துக்கே சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    பேட்டிங்கை பொறுத்தவரை இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. இரு அணிகளிலும் ஸ்விங் பந்துகளை நன்றாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆனால் இங்கு ஸ்விங் பந்துவீச்சு தான் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. எனவே எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறதோ, அந்த அணியே கோப்பையைக் கைப்பற்றும்.

    நியூசிலாந்தின் வில்லியம்சன் இயல்பான ஒரு கேப்டன். மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு மிக்கவர். பொறுமைசாலி. தேவைப்படும் போது தாக்குதல் பாணியை கையில் எடுப்பார். இதற்கு நேர் எதிரானவர் இந்திய கேப்டன் விராட்-கோலி. எப்போதும் அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். வெவ்வேறு அணுகுமுறையை கொண்ட இவர்களில் யாருடைய கை ஓங்கப் போகிறது என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்தார்.
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுக வீரர் டேவன் கான்வே இரட்டை சதம் விளாச நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது.
    லண்டன்:

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் சரிவை தடுத்து நிறுத்தினர்.

    இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய தினம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
    சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 கிரக்கெட் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் உலக முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ் உள்ளிட்ட ஏராளமான டி20 லீக்கில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

    சமீபத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி டி20 அணியின் கேப்டனாக ஹஷ்மதுல்லா ஷாஹிதியை நிமியத்தது. துணைக் கேப்டனாக ரஹ்மத் ஷாவை நியமித்தது. ரஷித்கானை புதிய துணைக் கேப்டனாக நியமித்துள்ளது. ஆனால் கேப்டனாக நியமிக்கவில்லை.

    இந்த நிலையில் கேப்டன் பதவியை விரும்பவில்லை என ரஷித் கான் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். துணைக் கேப்டன் என்பது எனக்கு சிறந்தது. என்னுடைய ஆலோசனை தேவைப்படும்போது, கேப்டனுக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது எனக்கு சிறந்தது.

    ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். கேப்டனாக மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதைவிட, என்னுடைய பணி அணிக்கு மிகவும் சிறந்தது, அணிக்கான எனது செயல்பாடு பாதிக்கப்படுமோ, என்று நான் பயப்படுகிறேன். இது முக்கியமானது. இதனால் ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. கிரிக்கெட் போர்டு, தேர்வுக்கு எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு துணையாக நான் இருப்பேன்’’ என்றார்.
    ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று ரிஸ்லா ரெஹான் கூறி இருந்தார்.
    புதுடெல்லி:

    இந்தியா கேப்டன் விராட் கோலி உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். பெண்கள் மத்தியில் விராட் கோலி மிகவும் பிரபலமானவர். 2019 உலகக் கோப்பையின் போது கிரிக்கெட் பரம ரசிகையான ரிஸ்லா ரெஹான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    ரிஸ்லா ரெஹான் ஒரு பாகிஸ்தான் பெண் ஆவர். ரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

    இந்திய அணியை ஆதரிப்பதற்காக 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு சற்று முன்னதாக மான்செஸ்டரில் ரிஸ்லா கலந்து கொண்டார், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    நியூசிலாந்துடனான இந்தியாவின் அரையிறுதி மோதலுக்கு முன்னதாக ஒரு பேட்டியில் , ரிஸ்லா பாகிஸ்தான் அணி  கடைசி நான்கு போட்டிகளில் விளையாடும்  என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கியதாகக் கூறியிருந்தார்.பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என்று நினைத்துக்கொண்டேன், ஆனால் அது அவ்வாறு செயல்படவில்லை.

    2019 உலகக் கோப்பையின் போது அவர் அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தானுக்கு பரிசு வழங்க விரும்பினால் நீங்கள் கேட்கும்  ஒரு விஷயம் என்ன என்று ரிஸ்லாவிடம் கேட்கப்பட்டது, ரிஸ்லா தயவுசெய்து எங்களுக்கு விராட் கோலி கொடுங்கள் என பதில் அளித்து இருந்தார். மேலும் ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று அவர் மேலும் கூறி இருந்தார்.
    சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும் என்றும் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறினார்.
    புதுடெல்லி:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு அவர்களின் உடல்தகுதி உறுதி செய்யப்படுகிறது.

    அவ்வகையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக்கிற்கு (125 கிலோ எடைப்பிரிவு) நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில்  தோல்வி அடைந்துள்ளார். எனவே, அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் இணையமாட்டார் என தெரிகிறது. 

    சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தது இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

    ஒலிம்பிக் சின்னம்

    இதுபற்றி இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ஊக்கமருந்து சோதனையில் சுமித் தோல்வி அடைந்ததால் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு மங்கிவிட்டது. சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும். இப்போதைக்கு அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். அடுத்தகட்ட சோதனைக்குப் பிறகு, விசாரணை செய்து முடிவு அறிவிக்கப்படும். 

    சுமித் காயமடைந்ததால் சில மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம். பி மாதிரி சோதனையிலும் பாசிட்டிவ் என வந்தால் அவர் தடை செய்யப்படலாம்’ என்றார்.
    மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.

    சண்டிகர்:

    இந்தியாவில் முன்னாள் தடகள வீரர் மில்காசிங். 91 வயதான அவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டார்.

    ஆனால் பாதிப்பு குறையாததால் மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கடந்த மே மாத இறுதியில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மில்கா சிங்குக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்தது. உடனே அவரை சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுரும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.

    1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார். அவருக்கு 1959-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    ×