என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதியில் நடக்கிறது.
முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதியும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
எனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளூரில் விளையாடுவதால் வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும்.
சில வீரர்கள் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். இதனால் சில சமயம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது.
தொடக்க வீரர் ஜார்ஜ்மன்சே அதிகபட்சமாக 24 ரன்னும், மைக்கேல் லெஸ்க் 21 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி 15 ரன் கொடுத்து தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். பும்ராவுக்கு 2 விக்கெட்டும், அஸ்வினுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி 81 பந்துகள் எஞ்சிய நிலையில் 86 ரன் இலக்கை எடுத்தது. இந்தியா 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லோகேஷ் ராகுல் 19 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 16 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.
இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இந்திய அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. முதல் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் (10 விக்கெட்), நியூசிலாந்து (8 விக்கெட்) தோற்று இருந்தது.
இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை வருகிற 8-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பு குறைவே.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. 2-வது நாடாக நியூசிலாந்து தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் ஒரு சில ஆட்டங்களின் மோசமான நிலையை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த அணிதான் தற்போது ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் மோசமான நிலையை வெளிப்படுத்தி உள்ளது.
இதை வைத்துக்கொண்டு இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம். அதில் எந்தவித நியாயமும் இல்லை.
20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஒருசில ஆட்டங்கள் மோசமாக அமையலாம். ஆனால் அந்த தோல்விகளை பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. அடுத்த ஆட்டத்திற்கான வாய்ப்புகள் குறித்து யோசித்து முன்னேறி செல்ல வேண்டும்.
நான் வழக்கமாக எப்படி பந்து வீசுகிறேனோ அதுபோல்தான் ஸ்காட்லாந்துக்கு எதிராகவும் பந்து வீசினேன். எனது திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது பங்களிப்பாகும்.
இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்வதற்கும், 2-வது பேட்டிங் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. பனித்துளியால் பந்துவீச்சு தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் டாஸ் வெல்வது முக்கியமானதாகும்.
இவ்வாறு ஜடேஜா கூறினார்.
நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழத்தினால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். அப்படி நிகழ்ந்தால் நாங்கள் பேக்கை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம். அப்புறம் என்ன மிச்சம் என்று சிரித்தபடி ஜடேஜா பதில் அளித்தார்.
அபுதாபி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.
இதுவரை குரூப்-2 பிரிவில் இருந்து பாகிஸ்தான் மட்டுமே அரை இறுதிக்கு தகுதிபெற்று உள்ளது. இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் குரூப்-1 பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் (மாலை 3.30), இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.
இந்த பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் 10 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதிபெறும்.
ஒருவேளை அந்த அணி தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றாலும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. மிகவும் மோசமாக தோற்றால் மட்டுமே அந்த அணி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.
ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றிபெறும் போது 8 புள்ளியை பெறும். அப்போது 3 நாடுகளும் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா) சம நிலையை பெறும்.
ரன் ரேட் அடிப்படையில் 2 நாடுகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இதில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவை விட தற்போது ஆஸ்திரேலியா ரன் ரேட்டில் சிறப்பான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, இங்கிலாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோற்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றால் இங்கிலாந்து முதல் அணியாக தகுதி பெறும். 2-வது இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே போட்டி நிலவும். ரன் ரேட்டில் முன்னிலை பெறும் அணி தகுதி பெறும்.
இந்த பிரிவில் இலங்கை (4 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (2 புள்ளி), வங்காளதேசம் (வெற்றி எதுவும் பெறவில்லை) அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு வாய்ப்பை இழந்துவிட்டன.







