என் மலர்
விளையாட்டு
அபுதாபி:
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ. தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.
அவர் இதுவரை நடந்த ஏழு 20 உலக கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார். இதில் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
38 வயதான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டி, 164 ஒருநாள் போட்டி, 90 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஓய்வு முடிவு குறித்து பிராவோ கூறியதாவது:-
ஓய்வு பெற நேரம் வந்து விட்டது என நான் நினைக்கிறேன். நான் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை பெற்றுள்ளேன். 18 ஆண்டுகளாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறேன்.
இதில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் கரீபியன் மக்களையும், அந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தியதில் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஒயிட்பால் வடிவ கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
இதனால் இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஞ்சிஉள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு இருக்கும்.
நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது. இதன் மூலம் ரன்-ரேட் ஓரளவுக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.
இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் (குரூப்-2) மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் பார்முக்கு திரும்பியுள்ளது பலமாகும். அதேபோல் விராட் கோலி, ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, ஜடேஜா உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் ரன்-ரேட்டை உயர்த்தும் நோக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற இந்தியா முயற்சிக்கும். ஸ்காட்லாந்து அணி தான் மோதிய மூன்று ஆட்டத்திலும் தோற்றது. அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.
அந்த அணி பேட்டிங்கில் ஜார்ஜ் முன்சே, மேத்யூ கிராஸ், பெர்ரிங்டன், மைக்கேல் சீசக், ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் ஷெரீப், வீல், மெக்வாட், கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோர் உள்ளனர். இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, ரன்-ரேட் பற்றி எங்கள் மனதில் இருந்தது. அணி கூட்டத்தில் விவாதித்த போது, அரை இறுதிக்கு தகுதி வாய்ப்பை பற்றி பேசினோம். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசித்தோம் என்றார்.



புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் பிளவு இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். அணிக்குள் இரு பிரிவுகள் செயல்படுகின்றன. ஒரு குழு விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என கருதுகிறேன். இது தெளிவாக தெரிகிறது.
எதற்காக இந்த பிளவு ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது. 20 ஓவர் உலக கோப்பையோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததால் இந்த பிளவு இருக்கலாம். அல்லது கடந்த 2 போட்டிகளில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்பதற்காக இருக்கலாம்.
எது உண்மை என தெரியவில்லை. கோலி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறோம்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாசில் தோற்றவுடனே வீரர்கள் அனைவரும் மனரீதியாக நம்பிக்கை இழந்துவிட்டனர். தோல்வி அடைந்தபின் விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.
விமர்சனங்கள் முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியினர் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினர். தவறான மன நிலையுடன் இருந்தார்கள்.
டாசில் தோல்வி அடைந்தபோது இந்திய அணி போட்டியில் தோல்வி அடையவில்லை என்பதை நினைக்க மறந்துவிட்டார்கள். இதை மனதில் வைத்து நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட்டு இருந்தால் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் எந்தவித திட்டமிடலும் இந்திய அணியிடம் இல்லை.
இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.






