என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிக்கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்றிரவு ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
    அபுதாபி:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப்-2-ல் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது லீக்கில் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 110 ரன்னில் அடங்கியது.

    அடுத்தடுத்து இரு தோல்விகளினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகிவிட்டது. மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா தனது 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று (புதன்கிழமை) அபுதாபியில் சந்திக்கிறது. இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும் அரையிறுதி வாய்ப்பு முழுமையாக கலைந்து விடும்.

    இந்தியா அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். முதலில் எஞ்சிய 3 லீக்கிலும் (ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா) அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவதோடு ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டும். அடுத்து நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்காட்லாந்து ஆகிய அணிகளில் ஒன்றிடம் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணிக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங் படு சொதப்பலாக இருக்கிறது. இரு ஆட்டங்களிலும் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜொலிக்கவில்லை. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எந்தவித ஆக்ரோஷமும் இன்றி பெட்டி பாம்பாய் சரண் அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இன்றைய ஆட்டத்திலாவது இவர்கள் ரன்மழை பொழிவார்களா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் அல்லது இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டுவது மிகவும் அவசியமாகும்.

    சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவரை ஓரங்கட்டும் கேப்டன் கோலி இந்த தடவையும் வாய்ப்பு வழங்குவது சந்தேகம் தான். இங்குள்ள ஆடுகளங்கள் வேகம் குறைந்து காணப்படுவதால் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹரை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம்.

    ஆப்கானிஸ்தானையும் துளியும் குறைத்து மதிப்பிட முடியாது. ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட வெற்றியின் விளிம்பில் வந்து தான் தோற்றது. அதாவது கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரில் ஆசிப் அலி 4 சிக்சர்கள் விளாசி விட்டார். மற்றபடி ஆப்கானிஸ்தானின் சுழல் ஜாலம் மிரட்டியது. ரஷித்கான், முகமது நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும், நவீன் உல்-ஹக், ஹமித் ஹசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர். காயத்தால் அவதிப்படும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் திரும்பினால் பந்து வீச்சு மேலும் வலுவடையும். அவர்களின் சுழல் தாக்குதலை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ரன்குவிப்பு அமையும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

    சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் ‘டாஸ்’ ஜெயித்து ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதலில் பேட்டிங்கையை தேர்வு செய்துள்ளது. அதனால் இந்த ஆட்டத்தில் டாஸ் சூட்சுமம் ஒரு பிரச்சினையாக இருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர், பும்ரா, வருண் சக்ரவர்த்தி அல்லது அஸ்வின்.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷசாத், ரமனுல்லா குர்பாஸ், ஹஸ்மத்துல்லா ஷகிடி அல்லது உஸ்மான் கானி, நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி (கேப்டன்), குல்படின் நைப், கரிம் ஜனத் அல்லது முஜீப் ரகுமான், ரஷித்கான், நவீன் உல்-ஹக், ஹமித் ஹசன்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    முன்னதாக இதே பிரிவில் மாலை 3.30 மணிக்கு துபாயில் நடக்கும் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, குட்டி அணியான ஸ்காட்லாந்தை சந்திக்கிறது.
    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கும் விழா வரும் 13-ம் தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

    அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

    அர்பிந்தர்சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவான் (கிரிக்கெட்), பவானி தேவி (வாள்சண்டை), மோனிகா, வந்தனா கட்டாரியா (இருவரும் ஹாக்கி), சந்தீப் நார்வால் (கபடி), ஹிமானி உத்தம் பராப் (மல்லர்கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் பூனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, சுமித், நீல கண்ட ஷர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங், ஷம்சிர் சிங், லலித்குமார் உபாத்யாய், வருண் குமார், சிம்ரன்ஜித் சிங் (16 பேரும் ஆக்கி), யோகேஷ் கதுனியா, நிசாத் குமார், பிரவீன்குமார், ஷரத் குமார் (4 பேரும் பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பேட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாராதுப்பாக்கி சுடுதல்), பவினா பட்டேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை).

    சென்னையைச் சேர்ந்த 28 வயதான பவானி தேவி, ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர் ஆவார். 

    கேல் ரத்னா விருது ஒரே ஆண்டில் இரட்டை இலக்கை எண்ணிக்கையில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

    இதில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ரவிக்குமார் (மல்யுத்தம்), லவ்லினா (குத்துச்சண்டை), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிச் சுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) சேர்த்து 12 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 24-ம் தேதி நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த டெல்லி பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. 

    இந்நிலையில், விராட் கோலி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த விசாரணையை டெல்லி மகளிர் ஆணையம் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதுதொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம், மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம், எப்ஐஆர் நகல், கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக 8-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.

    இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், டுவிட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அவமானத்திற்கு உரியது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களை அளிக்கும்படி போலீசாரிடம் தெரிவித்தோம் என்றார்.

    நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.
    அபுதாபி:

    அபுதாபியில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், நமீபியா அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பாபர் அசாம் 70 ரன்னில் அவுட்டானார். ரிஸ்வான் 79 ரன்னுடனும், ஹபீஸ் 39 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. கிரேக் வில்லியம்ஸ் 40 ரன்னும், ஸ்டீபன் பார்டு 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நமீபியா 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி கட்டத்தில் டேவிட் வைஸ் அதிரடியாக ஆடி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ரபடா, நோர்ஜே தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த வங்காள தேசம் 84 ரன்னில் சுருண்ட நிலையில், தென்ஆப்பிரிக்கா 13.3 ஓவரில் வெற்றி பெற்றது.
    டி20 உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சூப்பர் 12 குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 36 பந்தில் 24 ரன்களும், மஹெதி ஹசன் 25 பந்தில் 27 ரன்களும், ஷமிம் ஹொசைன் 20 பந்தில் 11 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒன்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்த வீச்சாளர்கள் ரபடா, நோர்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதில் நோர்ஜே 3.2 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. டி காக் 15 பந்தில் 16 ரன்களும், ரீஜா ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன்களும், வான் டர் டஸ்சன் 27 பந்தில் 22 ரன்களும், மார்கிராம் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் டெம்பா பவுமா 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, தென்ஆப்பிரிக்கா 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் கூறியுள்ளன.
    புதுடெல்லி:

    20- ஓவர் உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்த இந்திய அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏறத்தாழ மங்கி விட்டது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட மனச்சோர்வே இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் கூறியுள்ளன.

    மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 20 ஓவர் போட்டியில் நாளை மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி “குரூப்-2” பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. 2 -வது போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

    2 தோல்வியை தழுவிய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. எஞ்சிய 3 ஆட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதே நேரத்தில் நியூசிலாந்து ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டும் இந்தியா வாய்ப்பை பெறலாம். இது மிகவும் கடினமான ஒன்றாகும்.

    குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் 6 புள்ளியுடனும், ஆப்கானிஸ்தான் 4 புள்ளியுடனும், நியூசிலாந்து, நமீபியா தலா 2 புள்ளியுடனும் உள்ளன. இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி மட்டுமே வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

    கடந்த ஆட்டத்தில் வீரர்கள் தேர்விலும், பேட்டிங் வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது தான் மிகவும் முக்கியமானது.

    ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை ஸ்காட்லாந்து (130 ரன் வித்தியாசம்), நமீபியா (62 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 20 ஓவர் போட்டியில் நாளை மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 2010 உலக கோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2012 உலக கோப்பையில் 23 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- ஸ்காட்லாந்து (மாலை 3.30) மோதுகின்றன.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம், பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதுகின்றன.
    அபுதாபி:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) ‘சூப்பர்-12’ சுற்றில் அபுதாபியில் இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

    அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் (குரூப்-1) அணிகள் மோதுகின்றன.

    தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ‘சூப்பர்-12’ சுற்றின் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. அதன் பிறகு அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ், இலங்கையை அடுத்தடுத்து வீழ்த்தி கம்பீரம் காட்டியது. பேட்டிங்கில் குயின்டான் டி காக், தெம்பா பவுமா, மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பிரிட்டோரியஸ், அன்ரிச் நோர்டியா, காஜிசோ ரபடா, தப்ரைஸ் ஷம்சி, கேஷவ் மகராஜ் ஆகியோர் மிரட்டி வருகிறார்கள்.

    மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்து கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சொதப்பி வருகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். எல்லா துறையிலும் எழுச்சி பெற்றால் மட்டுமே வங்காளதேச அணியால் வலுவான தென்ஆப்பிரிக்க அணிக்கு ஈடுகொடுக்க முடியும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 முறையும் தென்ஆப்பிரிக்க அணியே வென்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்த தென்ஆப்பிரிக்க அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வங்காளதேச அணி அச்சமின்றி விளையாடி அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி அறிமுக அணியான நமிபியாவை (குரூப்-2) எதிர்கொள்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது. அடுத்த ஆட்டங்களில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங்கில் பாபர் அசாம், பஹர் ஜமான், முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆட்டத்தில் ஆசிப் அலி அதிரடியில் அசத்தினார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, இமாத் வாசிம், ஹாரிஸ் ரவுப், ஷதப் கான் ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள்.

    ஜெரார்டு எராஸ்மஸ் தலைமையிலான நமிபியா அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் பணிந்தது. 161 ரன் இலக்கை நோக்கி ஆடிய நமிபியா அணி 9 விக்கெட்டுக்கு 98 ரன்களே எடுத்து தோல்வி கண்டது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்து அரையிறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் களம் இறங்கும். அந்த அணியின் வெற்றிப்பயணத்துக்கு அணை போடுவது என்பது நமிபியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

    இன்றைய இரண்டு போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடினமான நாளாக அமைந்தது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

    இந்நிலையில், இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    இந்திய அணிக்கு இது கடினமான நாளாக அமைந்தது. அணியின் செயல்பாடுகள் குறித்து அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.  

    நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தங்களது வியூகத்தை களத்தில் சிறப்பாக செயல்படுத்தினார். நமக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

    எதிரணி பவுலர்கள் ஆதிக்கம் காரணமாக நம்மால் ஒன்று, இரண்டு ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இதனால் நம் வீரர்கள் பெரிய ஷாட் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தனர் என தெரிவித்தார்.

    இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், மார்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மார்கன் 40 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் ஹசரங்கா 3  விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    அதிகபட்சமாக ஹசரங்கா 34 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச, ஷனகா ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    67 பந்துகளை எதிர்கொண்ட ஜாஸ் பட்லர் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் மொத்தம் 101 ரன்கள் விளாசினார்.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் ஜாஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஜேசன் ராய் 9 ரன்களிலும், தாவித் மலன் 6 ரன்களிலும் அவுட் ஆகினர். பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

    45 பந்துகளில் அரை சதம் கடந்த பட்லர், தொடர்ந்து சதத்தை நோக்கி முன்னேறினார். அவருடன் கேப்டன்  மார்கன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19வது ஓவரில், அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்த நிலையில் மார்கன் 40 ரன்களில் வெளியேறினார். 

    தொடர்ந்து ஆடிய பட்லர் கடைசி பந்தில் சிக்சர் விளாசி சதத்தை பதிவு செய்தார். 67 பந்துகளை எதிர்கொண்ட பட்லர்  6 பவுண்டரி, 6 சிக்சருடன் மொத்தம் 101 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். 

    இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3  விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    ×