என் மலர்
விளையாட்டு
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.
2-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. ஸ்டார்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் தோற்றத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹர்த்திக் பாண்ட்யா நல்ல நிலையில் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
ஹர்த்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு ஓவர் பந்து வீசுவார். அணிக்கு 6-வது பந்து வீச்சாளர் முக்கியமானதுதான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2-வது பந்து வீசியதால் 6-வது பவுலர் தேவைப்படவில்லை.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இருந்தால் 6-வது பவுலரை பயன்படுத்தி இருப்போம். 2-வது இன்னிங்சில் விக்கெட்டுகள் தேவைப்படும்போது முதன்மை பந்து வீச்சாளர்ளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
ஷர்துல்தாகூர் எங்களது திட்டத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். திறமை வாய்ந்த பந்து வீச்சாளரான அவருக்கு நிச்சயமாக அணியில் நிறைய மதிப்பு கிடைக்கும். அவர் அணிக்கு பெருமை சேர்ப்பார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை குறை சொல்ல முடியாது.
நியூசிலாந்து அணியில் உள்ள போல்ட் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவரது பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து திட்டம் வைத்துள்ளோம்.
இவ்வாறு விராட்கோலி கூறினார்.
முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-நமீபியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 130 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டில் தோற்றது.
நமீபியா முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக அகமதாபாத், லக்னோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ரூ.90 கோடி ஏலத்தில் வரை ஏலத்தில் செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். 3 இந்தியர், ஒரு வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் தக்க வைத்துக்கொள்ளலாம்.
புதிய இரு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை (2 இந்தியர், ஒரு வெளிநாட்டு வீரர்) தேர்வு செய்து கொள்ளலாம்.
தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்களுக்கான சம்பள விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.42 கோடி வரை செலவிடலாம்.
3 வீரர்களுக்கு ரூ.33 கோடியும், 2 வீரர்களுக்கு ரூ.24 கோடியும், ஒரு வீரருக்கு ரூ.14 கோடியும் செலவழிக்கலாம். மொத்தம் உள்ள ரூ.90 கோடியில் இதன் பங்களிப்பு இருக்கும்.
ஒரு அணி 4 வீரர்களையும் ரூ.42 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டால் ஏலத்தில் ரூ.48 கோடி வரை மட்டுமே செலவழிக்க முடியும்.
ஒரு அணியில் 4 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டால் அந்த அணியின் முதல் வீரருக்கான தொகை ரூ.16 கோடியாக இருக்கும். 2-வது, 3-வது, 4-வது வீரர்களுக்கு முறையே ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வழங்கப்படும்.
அதே நேரத்தில் 3 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கான தொகை ரூ.15 கோடியாக இருக்கும். அதற்கடுத்து ரூ.11 கோடி மற்றும் ரூ.7 கோடி வழங்கப்படும். அந்த அணி ஏலத்தில் ரூ.57 கோடி வரை மட்டுமே செலவிட முடியும்.
2 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கான தொகை ரூ.14 கோடியாக இருக்கும். அடுத்த வீரருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். ஏலத்தில் ரூ.66 கோடி வரை செலவிட முடியும்.
ஒரு வீரரை தக்கவைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டும். அப்போது ஏலத்தில் ரூ.74 கோடி வரை வீரர்களை வாங்கலாம்.
8 அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 1 முதல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும் டிசம்பர் 1 முதல் 25-ந் தேதிக்குள் 3 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கலாம். ஜனவரி தொடக்கத்தில் ஏலம் நடைபெறும்.






