என் மலர்
செய்திகள்

சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறிய கோலி
டாப் ஆர்டர் சொதப்பல்- இந்தியாவை 110 ரன்களில் கட்டுப்படுத்தியது நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.
துபாய்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
ரோகித் சர்மா- கே.எல். ராகுல் ஜோடி அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எனினும் இந்த புதிய வியூகம் கைகொடுக்கவில்லை. டாஸ் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடுமையாக சொதப்பினர்.
இஷான் கிஷன் 4 ரன்களும், கே.எல்.ராகுல் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டக் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய ரோகித் சர்மா 14 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் விராட் கோலி 9 ரன்னில் அவுட் ஆக, இந்தியா 48 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.
ரிஷப் பண்ட் (12), ஹர்திக் பாண்ட்யா (23), ஷர்துல் தாகூர் (0) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் குவிக்க, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். சோதி 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
Next Story






