என் மலர்
செய்திகள்

பாபர் அசாம்
இந்தியாவுடனான போட்டியின்போது தீவிர சிகிச்சையில் தாயார்: நாட்டிற்காக விளையாடிய பாபர் அசாம் - தந்தை உருக்கம்
தாயின் மோசமாக உடல்நிலை காரணமாக பாபர் அசாம் கடந்த 3 ஆட்டங்களிலும் கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் தான் விளையாடினார் என்று அவரது தந்தை சித்திக் தெரிவித்துள்ளார்.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.
அந்த அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. தொடக்க போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு அணியை நல்லமுறையிலும் வழிநடத்தி சென்றார். இதனால் 3 ஆட்டங்களிலும் வெற்றி கிடைத்தது.
இந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில்தான் இந்த சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது பாபர் அசாமின் தாயார் உடல்நலக் குறைவால் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார் என்று அவரது தந்தை சித்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
களத்தில் பாபர் அசாமின் செயல்கள் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக உங்களை நினைக்க வைக்கலாம். ஆனால் உள்ளுக்குள் அவருக்குள் இருக்கும் வலியாருக்கும் வெளியில் தெரியாது.
எனது தேசம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை வெளிப்படுத்துகிறேன். இந்தியாவுக்கு எதிரான போட்டி நடந்த அன்று பாபர் அசாமின் தாயார் வெண்டிலேட்டரில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
தாயின் மோசமாக உடல்நிலை காரணமாக பாபர் அசாம் கடந்த 3 ஆட்டங்களிலும் கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் தான் விளையாடினார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுடனான போட்டியை காண மைதானத்திற்கு நான் வரக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் பாபர் அசாம் பலவீனம் அடையக்கூடாது என்பதற்காக வந்தேன்.
இந்த விஷயத்தை தற்போது பகிர்வதன் நோக்கம் காரணமில்லாமல் நமது ஜாம்பவான்களை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு பாபர் அசாமின் தந்தை சித்திக் சமூக வலை தளத்தில் தனது உருக்கமான பதிவில் தெரிவித்தள்ளார்.
அவரது இந்த பதிவு சில மணி நேரங்களில் வைரலானது. ரசிகர்கள் பலரும் பாபர் அசாமை பாராட்டி வருகின்றனர்.
Next Story






