என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார்.
    • திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை பந்துவீச்சாளர் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில், துவக்க வீரர்களான விஷால் வைத்யா, கேப்டன் ஹரி நிஷாந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மணி பாரதி (1), ராஜேந்திரன் விவேக் (12), மோகித் ஹரிஹரன் (3) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    மோனீஸ் 10 ரன்களும் (நாட் அவுட்), பிரதீப் 14 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. 

    • ரோகித் சர்மா அணியில் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.
    • இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகத்தில் தான் உள்ளது. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வராத பட்சத்தில் பும்ரா இந்திய அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இல்லாவிட்டால் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார்.

    இது குறித்து டேவிட் மலான் கூறியதாவது:-

    ரோஹித் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனை இழப்பது இந்திய அணிக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமானது. அவர் விளையாடவில்லை என்றால் அணிக்கு பெரிய இழப்பாகும். ஆனால் அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.

    இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர். ஆனால் அவர்களால் ரோகித் இடத்தை நிரப்ப முடியாது.

    இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டு போட்டிகளை அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணி விவரம்:-

    அலெக்ஸ் லீஸ், சாக் க்ராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்சன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக தற்போது வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.
    • இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    பெங்களூரு:

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக காமன்வெல்த் ஹாக்கி தொடருக்கான பயிற்சி தடைபட்டுள்ளது.

    குர்ஜந்த் சிங் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு நேற்று காலை ஆடி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

    அதில் தொற்று உறுதியானவர்களில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக தற்போது வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் ஜூலை 23 அன்று நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி பர்மிங்ஹாம் செல்கிறது.

    • மிஸ்பா உல் ஹக் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
    • ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இல்லாத நிலையில் கோலி இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருப்பார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பும்ரா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். ரோகித் இல்லாதபட்சத்தில் விராட் கோலியை கேப்டனாக நியமிக்கலாம் என கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க கூடாது என கூறியுள்ளார்.

    இது குறித்து மிஸ்பா உல் ஹக் கூறியதாவது:-

    விராட் கோலிக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது அவரது பேட்டிங்தான். இதனால் சமீபகாலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்திய அணிக்கு அவர் ஒரு பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதால் அவரை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கும் முன் அணி நிர்வாகம் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இல்லாத நிலையில் கோலி இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோகித் சர்மாவை பிசிசிஐ மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து வருவதாகவும், போட்டிக்கு தகுதியற்றவர் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

    மிஸ்பா உல் ஹக் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் லீக் போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
    • ஐ.ஒ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரித்துறை உள்பட 15 அணிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் லீக் போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது.

    இதில் ஐ.ஒ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரித்துறை உள்பட 15 அணிகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் தொடங்கி வைக்கிறார்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையம்-வருமானவரித்துறை அணிகள் மோதுகின்றன. மேற்கண்ட தகவலை சென்னை ஹாக்கி சங்க செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

    • அனைத்து டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து லாதன் லயன் 20 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

    லாதன் லயனின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 212 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் லாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வார்னே சாதனையை லயன் சமன் செய்துள்ளார்.

    லாதன் லயன் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காலே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக 90 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது இலங்கைக்கு எதிராக அதே மைதானத்தில் 5 விக்கெட்டுகளை லாதன் லயன் எடுத்துள்ளார்.

    ஆசியா கண்டத்தில் நாதன் லயன் 9 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக மூன்று முறையும், வங்காள தேசம் அணிக்கு எதிராக 3 முறையும் இலங்கை அணிக்கு எதிராக 2 முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசியாவில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மறைந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.

    அனைத்து டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து லாதன் லயன் 20 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஆலன் டொனால்ட்(தென் ஆப்பிரிக்கா) மற்றும் டேனியல் விக்டோரி (நியூசிலாந்து) சாதனையை சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். அவர் 67 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் ஆடவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. ஜூலை 19 முதல் போட்டிகள் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து ஒயிட் பால் கேப்டனான பவுமா விலகி உள்ளார். மணிகட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இங்கிலாந்து எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஜூலை 27 முதல் 31 வரை நடக்கவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அயர்லாந்துக்கு எதிராக ஆகஸ்டு 3 முதல் 5 வரை நடக்கும் 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடர் ஜூலை 19 முதல் 24 வரை நடைபெறுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் பவுமாவுக்கு எட்டு வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்திற்கு எதிரான டி20 ஐத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. லார்ட்ஸில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் டி20 அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி டி20 அணிக்கான முதல் போட்டியில் ஆட உள்ளார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார்.

    டெஸ்ட் அணி:

    டீன் எல்கர் (C), சரேல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெர்ரேய்ன் (WK),டுவான் ஆலிவியர், ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கெளத்தோ சிபம்லா, க்ளென்டன் ஸ்டூர்மேன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, கேசவ் மகாராஜ்

    ஒருநாள் அணி:

    கேசவ் மகராஜ் (c), குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ராஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெர்ரைன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ட்வைன் ப்ரிடோரியஸ், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ்.

    டி20 அணி:

    டேவிட் மில்லர் (c), குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், வெய்ன் பார்னெல், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் ப்ரிடோரியஸ், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே.
    • அதே நேரத்தில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதில் உறுதியில்லை என்று பயிற்சியாளர் டிராவிட தெரிவித்துள்ளார்.

    எட்ஜ்பஸ்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    முதல் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 157 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் வெற்றி பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே. இதனால் வேகப்பந்து வீரர் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கபில்தேவுக்கு பிறகு வேகப்பந்து வீரர் ஒருவர் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

    அதே நேரத்தில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதில் உறுதியில்லை என்று பயிற்சியாளர் டிராவிட தெரிவித்துள்ளார். இன்றைய இறுதிகட்ட பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும். ரோகித் சர்மா ஆடாமல் போனால் சுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் களம் இறங்கலாம்.

    விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், விஹாரி, ரிஷப்பண்ட் ஆகியோர் அடுத்த வரிசையில் ஆட கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் ஜடேஜா ஆடுகிறார். ஷர்துல் தாகூர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர்.

    இந்த டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்தை வீழ்த்தினால் 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். தோற்றால் தொடர் சமநிலையில் முடியும்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாக இருக்கிறது. அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோரூட், பேர்ஸ்டோக், ஆண்டர்சன், ஜேக்விச் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்து அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலானது.

    இரு அணிகளும் மோதிய 130 டெஸ்டில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றிபெற்றன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

    • திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.
    • மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    திண்டுக்கல்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. நெல்லையில் 6 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    2 நாள் இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.

    பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    நெல்லை அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் தோற்கடித்தது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    திண்டுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் 5 விக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்தியது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கோவை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்றது. மதுரை அணி 2-வது வெற்றிக்காகவும், கோவை முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    • ரோகித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
    • பரிசோதனை முடிவு அடிப்படையில் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படும்.

    பர்மிங்காம்:

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கில் நீடிக்கிறது.

    இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.

    எனினும் இன்று ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பும்ரா பெற உள்ளார்.

    • முர்ரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்க வீரர் தகுதி.
    • இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் வெற்றி.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை எதிர்கொண்டார்.

    இதில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சக நாட்டை சேர்ந்த கெக்மனோவிச்சை அவர் சந்திக்கிறார்.

    மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பிரிட்டடை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினர். இதில் 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட்களில் முர்ரேவை வீழ்த்திய இஸ்னர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் 3-6, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரர் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.

    ×