என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது டி20 போட்டியாகும்.
    • சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. சார்ஜா, 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது.

    105 ரன்னுக்குள் இலங்கையை சுருட்டிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், முகமது நபியும், பந்து வீச்சில் பாசல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், ரஷித் கானும் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் சமீபகாலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் சபிர் ரகுமான், முகமது நைம் ஆகியோரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் வருகை அந்த அணியின் பலத்தை அதிகரிக்கும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க லீக் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணி 2-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் நுழைய ஆர்வம் காட்டும்.

    அதே நேரத்தில் போட்டியை வெற்றியுடன் தொடங்க வங்காளதேச அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 8 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 5 ஆட்டத்திலும், வங்காளதேசம் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும். இந்த ஆடுகளம் வழக்கம் போல சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். இரு அணியிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமான், பாசல்ஹக் பரூக்கி.

    வங்காளதேசம்: முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சபிர் ரகுமான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    • சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார்.

    முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார். ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • ஆண்டி முர்ரே முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் அமெரிக்க வீரர் ஸ்டீபன் கோஸ்லோவை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதினார்.

    இதில், முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-2, 6- 4, 6- 0 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரோகித் அவுட் ஆனவுடன் அப்படி ஒரு ஷாட்டை கோலி ஆடியிருக்க தேவையில்லை.
    • ஒரு நல்ல இளம் வீரர் கூட அந்த ஷாட்டை ஆடியிருக்கமாட்டார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்னில் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கியது இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹர்த்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் ஷர்மாவின் விக்கெட் விழுந்தவுடன் அடுத்த ஓவரிலேயே அவுட் ஆனதால் கோலி மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார். ஏனென்றால் ரோகித் அவுட் ஆனவுடன் அப்படி ஒரு ஷாட்டை கோலி ஆடியிருக்க தேவையில்லை. ஒரு நல்ல இளம் வீரர் கூட அந்த ஷாட்டை ஆடியிருக்கமாட்டார். அப்படி இளம் வீரர் ஒருவர் அந்த மாதிரியான ஷாட்டை விளையாடியிருந்தால் நிறைய விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும், இந்த ஷாட்டைப் பார்க்கும்போது அந்த ஷாட் தேவையில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள். உங்கள் கேப்டன் இப்போதுதான் அவுட் ஆனார். உங்கள் இன்னிங்ஸை இன்னும் கொஞ்சம் விஷயங்கள் எளிதாகி இருக்கலாம்.

    என்று அவர் கூறினார்.

    • இந்த போட்டியில் சிறிய தவறால் ரோகித் மற்றும் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
    • ரோகித்-கோலி செய்த தவறு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சிறிய தவறால் ரோகித் மற்றும் விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    இவர்களின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    ராகுல் ஒரே ஒரு பந்தைதான் எதிர் கொண்டனர். அதனால் எதையும் தீர்மானிக்க முடியாது. ரோகித்தும் கோலியும் சிறிது நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் கணிசமான ரன்களைப் பெற்றனர். இதற்கு முன்பு கோலியின் ஃபார்ம் பற்றி மக்கள் பேசும் போது அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன். ஆனால் இந்த போட்டியில் அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. கேட்ச் தவறியது. நிறைய இன்சைட் எட்ஜ்கள் என வந்த போதும் நல்ல ஷாட்கள் நிறைய ஆடினார்.

    கோலி - ரோகித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 - 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் சொதப்பினர். அது போன்ற சூழலில் பெரிய ஷாட்கள் தேவையே கிடையாது. ரன் ரேட் 19 - 20 என தேவைப்பட்டிருந்தால் சிக்ஸர் அடிக்கலாம்.

    ஆனால் குறைந்த ரன்ரேட்டில் இப்படி செய்திருக்க கூடாது. ஒருவேளை 70 - 80 ரன்களை அவர்கள் அடித்திருந்தால் சிக்ஸருக்கு சென்றிருக்கலாம். இனி வரும் போட்டிகளில் இதனை கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

    சென்னை:

    இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

    அடுத்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

    ஸ்மார்ட்பாக்சர் என்ற குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பகுப்பாய்வுத் தளம், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி குத்துச்சண்டை மதிப்பீடுக்கான நான்கு முக்கிய அம்சங்களைக் கணக்கிட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும். விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும். இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா சமன் செய்துள்ளார்.
    • இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

    இதன் மூலம் ஹர்த்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார்.

    ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர்.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார்.

    அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.

    • டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.
    • 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7-வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7 ஆசிய கோப்பையில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

    டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.

    ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் 28 ஆட்டத்தில் விளையாடி இலங்கையின் ஜெயவர்த்தனேயை சமன் செய்தார்.

    அவர் 26 இன்னிங்கில் 883 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 3499 ரன் எடுத்துள்ளார். மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) 3497 ரன்னுடன் 2-வது இடத்திலும், விராட்கோலி 3343 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், போட்டியை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார்.

    அப்போது ஒருவர் அவரது கையில் தேசிய கொடியை கொடுக்க வந்தார். ஆனால் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தார்.

    வெற்றி கொண்டாட்டத்தில் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜெய்ஷா மறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஜெய்ஷாவை பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

    இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த படி டி.ஆர்.எஸ். தலைவர் ஒருவர் கூறும்போது, "இதுவே பா.ஜனதாவை சேராத ஒருவர் கொடியை ஏற்க மறுத்து இருந்தால் அந்த நபர் தேச விரோதி ஆக்கப்பட்டு இருப்பார்.

    நாள்முழுவதும் விவாதமாக்கப்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அது ஹாஹின்ஷாவின் மகன் ஜெய்ஷா ஆகிவிட்டார் என கிண்டலுடன் தெரிவித்தார்.

    இதே வீடியோவை மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்துள்ளது. உள்துறை மந்திரியின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    • எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்கு தான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது.
    • இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது.

    அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கவில்லை. ரோகித் சர்மாவின் இந்த முடிவு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரிஷப் பண்டை அணியில் சேர்க்காத நிலையில் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கௌதம் கம்பீர் கூறியதாவது:-

    டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி ஐந்து அல்லது 6 போட்டிகளில் தான் விளையாடுகிறது. இன்னும் நீங்கள் பிளேயிங் லெவலை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறீர்கள். எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்கு தான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது.

    இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை. இது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். 

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹர்த்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளனர். அதாவது இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

    சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன் ஆகஸ்ட் 7-ந் தேதி நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி-20 போட்டியில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர்.

    அந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இதன் மூலம், சர்வதேச டி-20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது அதுவே முதல்முறை என்ற சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது.
    • கடைசி ஓவரை 15 ரன் வரை வைத்திருக்க நினைத்தோம்.

    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ரன்னும் ( 4 பவுண்டரி , 1 சிக்சர்) , இப்திகார் அகமது 28 ரன்னும் (2 பவுண்டரி ,1 சிக்சர்) எடுத்தனர்.

    புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 26 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 3 விக்கெட்டும் , அர்ஷ்தீப் சிங்குக்கு 2 விக்கெட்டும் , அவேஷ்கானுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

    பின்னர் ஆடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன் (4பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து ஹர்திக் பாண்ட்யா அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜடேஜா 29 பந்தில் 35 ரன்னும் ( 2 பவுண்டரி , 2 சிக்சர் ) , விராட் கோலி 35 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தனர். முகமது நவாஸ் 3 விக்கெட்டும் , நஷீம் ஷா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தானை இந்தியா பழிதீர்த்து கொண்டது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    148 ரன் இலக்கை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பணிகளை கொடுத்திருந்தேன். அதனை அவர்கள் சரியாக செய்தனர்.

    கடந்த ஒரு ஆண்டாக வேகப்பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். சில சமயங்களில் நாங்கள் சவாலுக்கு உள்ளானோம். ஆனால் அந்த சவால்கள் எங்களை முன்னோக்கி கொண்டு செல்லும்.

    ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியும் அவருக்கு நன்றாக அமைந்தது. அவரது பேட்டிங் திறமை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். அணிக்கு திரும்பியதில் இருந்து அவர் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆல்ரவுண்டு பணியில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 'அவர் கூறும் போது, நிலமையை மதிப்பிட்டு நமது திறமையை வெளிப்படுத்துவது முக்கியமானது.

    என்னை விட பந்து வீச்சாளர் கூடுதலான நெருக்கடியில் இருப்பதாக நான் உணர்ந்தேன். கடைசி ஓவரில் எனக்கு ஒரு சிக்சர் தேவைப்பட்டது. அதற்காக காத்திருந்து அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டேன்' என்றார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும் போது, 'எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். வேகப்பந்து வீரர்கள் நன்றாக செயல்பட்டனர்.

    கடைசி ஓவரை 15 ரன் வரை வைத்திருக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்' என்றார்.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    ×